சிறிலங்கா அரசு உடனடியாக படைகளை பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும்: தமிழக சட்டசபையில் தீர்மானம்



போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

கருணாநிதி முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:

"ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடிவுக்கு வராமல், அந்த மண்ணின் மைந்தர்களாம் தமிழின மக்களின் உயிர், உடமைகள் எதற்கும் உத்தரவாதமில்லாமல், அவர்களின் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் என லட்சக்கணக்கானோர் அகதிகளாக அயல் நாடுகளுக்கு ஓடியவர்கள் போக எஞ்சியிருப்போர், எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்துத் துடித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலை குறித்து முடிவெடுக்க ஒக்ரோபர் 14 ஆம் நாள் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு இணங்க, கடலில் எல்லை வகுக்கப்பட்டு ஓர் உடன்பாட்டின் மூலம் தமிழக கடற்றொழிலாளர்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டாலும் நமது பக்கத்து நாட்டிலேயே நமது உடன்பிறந்த தமிழ் மக்கள், நித்த நித்தம் சிந்தும் இரத்தமும் வடிக்கும் கண்ணீரும் நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சிகளாகி விட்ட கொடுமைக்கிடையே, இந்தியப் பேரரசின் உதவியுடன் இலங்கைத் தமிழர்களுக்கான உணவு, உடை, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை, தமிழகத்திலிருந்து, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அனைத்துலக அமைப்புக்களின் வாயிலாக அனுப்பி வைக்கிறோம். எனினும், அவர்களுக்கு இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல.

அவர்களின் உயிர், உடைமை ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு, இலங்கையில் அமைய வேண்டிய அமைதி நிறைந்த சம நிலை வாழ்வு, இவை அங்குள்ள தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தமான நடவடிக்கையை நமது இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலை உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் ஒன்றாக உள்ள ஏழு கோடி இந்தியத் தமிழர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவாகத் தமிழகத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும், அரசியல் சார்பற்ற அமைப்புக்களும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி, சிறிலங்கா அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. மாணவர்கள், வணிகர்கள், திரைப்படக்கலைஞர்கள், திரைப்பட தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், தொழிலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என எல்லாத் தரப்பினரும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து சென்னையில் வரலாறு படைத்த மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய மாபெரும் நிகழ்ச்சி மறக்கவொண்ணாதது.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீங்க வேண்டுமானால் அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும்.

போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என தமிழக முதலமைச்சர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு நாங்கள் தயார் என்று மற்றொரு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சிறிலங்கா அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன், தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்துகிறது. இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்றார் அவர்.

அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை மேசையை தட்டி வரவேற்றனர். இதையடுத்து இந்த தீர்மானம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Comments