"மீண்டும் ஏமாற்றிவிட்டார் கருணாநிதி''


25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தாய்த் தமிழகம், தன் ஈழச் சகோதரர்களுக்காக எழுந்தது. அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள், மனிதச் சங்கிலி, கடையடைப்பு என தினம் தினம் ஆதரவு அலை இருந்தாலும்,

அரசியல் கட்சிகளின் சதிராட்டத்தால், குழப்பக்கூத்துதான் நடக்கிறது தமிழ்நாட்டில்!

அக்டோபர் 29-ம் தேதிக்குள் இலங்கையில் குண்டுமழை நிற்கவில்லையானால், தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால், யாரும் இங்கு ராஜினாமா செய்ய வில்லை. போரும் அங்கு நிற்கவில்லை. ஆனால், 'இலங்கைத் தமிழர்கள் சுபிட்சமாக வாழ ஆரம்பித்து விட்டார்கள்' என்பது போன்ற பிரமை இங்கு உருவாக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பான கேள்விகளுடன் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தேன். 1983-ல் இருந்து இந்த விவகாரத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டில் இருப்பவர் இவர் ஒருவர்தான்.

''முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். எம்.பிக்கள் ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. இப்போதோ, அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குறுதிகள் திருப்திகரமாக இருந்தன என்கிறார் கருணாநிதி. உங்களுக்கும் திருப்தியா?''

''இது தனிமனிதர்களின் திருப்தி சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. ஓர் இனம் நிம்மதியாக ஈழத்தில் வாழ வழி பிறந்ததா என்பதுதான் முக்கியம்.

அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அனைவரும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்தியா அந்த நாட்டுக்கு எந்தவகையிலும் ராணுவ உதவிகள் வழங்கக் கூடாது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். அதை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டார். அதையே தீர்மானமாகவும் கொண்டுவந்தார். 15 நாட்களுக்குள் இதைச் செய்யவில்லையானால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் பதவி விலகுவார்கள் என்று அனைவர் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது.

அந்தத் தீர்மானம், அதன் நோக்கத்தை நிறைவேற்றி இருந்தால், வரலாற்றில் என்றென்றும் பேசப்பட்டிருக்கும். ஏனென்றால், கடந்த 40 ஆண்டு காலத்தில் ஈழப்பிரச்னை தொடர்பாக எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சர்வ கட்சிக் கூட்டங்கள், டெல்லி சந்திப்புகள் நடந்துள்ளன. ஆனால் 40 எம்.பிக்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என்று எடுக்கப்பட்ட முடிவு எடுப்பது இதுதான் முதல் முறை. அப்படிச் செய்திருந்தால், மத்திய அரசாங்கம் கவிழ்ந்து போகும். அந்த முடிவைக் கேட்டு உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் பெரும் நம்பிக்கைகொண்டார்கள். டெல்லியும் அதிர்ச்சி அடைந்தது. கொழும்பில் இருக்கும் சிங்களக் கட்சிகள் அச்சப்பட்டன. ஆனால், அனைத்தும் வீணானதுதான் பிரணாப் முகர்ஜி சந்திப்பால் கண்ட பலன்!''

''கருணாநிதியின் ராஜினாமா அறிவிப்பு, போராட்டங்களால் தானே இலங்கை அரசின் தூதுக் குழு டெல்லி வந்தது. அது சாதகமானதுதானே?''

''அதனால் என்ன பயன் ஏற்பட்டது? இந்திய அசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அனுப்பப் போவதாக இலங்கை அறிவித்தது. ஆனால், அமைச்சர்கள் யாரும் வரவில்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த வல்லரசு நாடு அழைக்கும்போது, இலங்கையின் ஜனாதிபதியோ, பிரதமரோ, டெல்லிக்கு வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் வெளிநாட்டு அமைச்சராவது வந்திருக்கவேண் டும். ஆனால், பிரதமரின் ஆலோசகர் என்ற பொம்மை பதவியில் இருக்கும் பசில் ராஜபக்ஷே இங்கு அனுப்பப்பட்டார். வல்லரசான இந்தியாவைச் சின்ன நாடான இலங்கை அதிகாரபூர்வமாக அவமானப்படுத்தியது.

முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லாத பசில் ராஜபக்ஷேவை அனுப்புவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று இலங்கை வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. மூன்றாம் தரமான ஒரு நபர் அனுப்பப்பட்டபோது, அவரை மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி சந்திக்கலாமா? மகிந்தா ராஜபக்ஷேவின் ஆலோசகரைச் சந்திக்க மன் மோகன்சிங்கின் ஆலோசகர்தான் போயிருக்க வேண் டும். அப்படிச் செய்திருந்தால், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா கடுமையாக இருக்கிறது என்பதையாவது இலங்கை உணர்ந்திருக்கும்!''

''பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையாலும் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?''

''முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தபின், நிருபர்களைச் சந்தித்தார் பிரணாப் முகர்ஜி. போர் நிறுத்தம் பற்றியோ, இலங்கைக்கு இந்தியா செய்துவரும் ராணுவ உதவிகள் பற்றியோ எதையும் அவர் பேசவே இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு தீர்மானங்களைப்பற்றி அவர் வாயே திறக்கவில்லை. எதைவைத்து பிரணாப் முகர்ஜி கூறியது தனக்குத் திருப்தி தருவதாக கருணாநிதி சொல்கிறார் என்றும் புரியவில்லை. அப்படி கருணாநிதி சொல்வதே, அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவுகளுக்கு எதிரானதாகும்.

அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? 'இது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்த தீர்மானம். இதில், நானாக தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே, மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து, எங்கள் முடிவை உங்களுக்குச் சொல்கிறேன்' என்றுதான் பிரணாப் முகர்ஜியிடம் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாததால், அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் கருணாநிதியால் அர்த்தமற்றதாக்கப்பட்டு விட்டன. உலகத் தமிழர்களை மீண்டும் ஒரு முறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை!''

''40 ஆண்டு பிரச்னையை 4 நாட்களில் தீர்த்துவிட முடியாது என்கிறாரே அவர்?''

''இது வேதனை தரத்தக்க பதில்!

40 ஆண்டுப் பிரச்னையைத் தீர்க்க நாளாகும் என்பது உண்மைதான். ஆனால், போரை நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்த, சில மணி நேரமே போதும். சிங்களர் கைவசம் இருந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றிய புலிகள், யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினார்கள். அங்கு 30 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் அப்போது இருந்தார்கள். புலிகள் முன்னேறியிருந்தால், சிங்கள ராணுவ வீரர்கள் மொத்தமாக அழிந்திருப்பார்கள். அப்போது இந்தியா தலையிட்டு, புலிகளை முன்னேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. புலிகளும் சம்மதித்தார்கள். அன்று, சிங்களச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக புலிகளிடம் கோரிக்கைவைக்கத் தெரிந்த இந்தியாவுக்கு, இன்று அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற போர் நிறுத்தம் செய்யவைக்க சில நிமிடங்கள் போதாதா? எவ்வளவு வேதனையான பதில்!''

''ஒரு நாடு, பக்கத்து நாட்டுக்கு ராணுவ உதவி செய்வது சாதாரணமானதுதான் என்கிறாரே பிரணாப்?''

''சாதாரண காலத்தில், சாதாரணமாக உதவி செய்யலாம். ஆனால், ஒரு நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டு இருக்கும் போது ஒரு தரப்புக்கு மட்டும் ஆயுத உதவிகள் செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

காஷ்மீரில் ராணுவத்துக்கும் சில அமைப்புகளுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. அந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், இலங்கையில் சிங்களர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்கிறது. பிறகு எப்படி பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்ட முடியும்?''

''பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் அனுப்ப முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கதுதானே?''

''மருந்து மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிக்கலாம். ஆனால், யார் மூலமாகக் கொடுப்பீர்கள்? இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்போம் என்பது தெரிந்தே செய்யும் தவறு. தமிழர் பகுதியில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. தொண்டு அமைப்புகளை வெளியேற்றியவர்கள் அவர்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்கள் தமிழர்களுக்குப் போய்ச் சேராது. விரக்தியாக இதைச் சொல்லவில்லை. அனுபவ உதாரணம் இருக்கிறது.

சுனாமியால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்தார்கள். மிகப் பெரிய அளவில் அழிவும் ஏற்பட்டது. இதற்கு உலக நாடுகள் பல்லாயிரம் கோடி பணத்தைக் கொட்டியது. இந்தப் பணத்தை வைத்து நிவாரண உதவிகள் சரியாக நடக்கின்றனவா என்று பார்க்க, நார்வே நாட்டைத் தலைவராக ஏற்று, சிங்கள புலிகள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அதை சந்திரிகா ஏற்கவில்லை. ஒரு கைப்பிடி உதவிப் பொருள்கூட தமிழர் பகுதிக்குள் வரவில்லை. ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வந்தபோது, தமிழர் பகுதிக்குள் செல்ல இலங்கை அரசாங்கம் விடவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் பொருளைக் கொடுத்தால், தமிழர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்பு மூலமாகத்தான் வழங்க வேண்டும். அதை தமிழகக் குழு கண்காணிக்க வேண்டும்!''

''தமிழர் தாயகம், சுயநிர்ணயம் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெயலலிதா முதலில் அறிக்கைவிட்டார். மறு நாளே மாறி அறிக்கைவிட்டாரே?''

''தமிழ் மக்களின் கொந்தளிப்பை பார்த்து முதலில் அப்படி அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. மத்திய உளவுத் துறை அதிகாரிகள் வந்து அவரைப் பார்த்தார்கள். அதன் பிறகு மாறிவிட்டார். காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவரும் திட்டமிடுகிறார். அதுதான் உண்மை.''

''கருணாநிதி, இலங்கைக்கு வர வேண்டும் என்று ராஜபக்ஷே அழைப்பு விடுகிறாரே?''

''சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் நரித் தந்திரம் படைத்தவர்கள். அதில் ராஜபக்ஷே விதிவிலக்கல்ல. உலகத்தை ஏமாற்ற அவர்கள் அப்படித்தான் ஆரம்பத்தில் பேசுவார்கள். அதன் பிறகு நம்மை ஏய்த்து விடுவார்கள்.''

''புலிகளை எதிர்த்து தமிழக காங்கிரசார் கொந்தளிப்புடன் பேச ஆரம்பித்து உள்ளார்களே?''

''மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் மையக்கருத்து. அந்த இரண்டு மாகாணங்களையும் பிரித்துவிட்டார் ராஜபக்ஷே. ஆகவே, ராஜீவ் காந்தியின்கனவை நிறைவேற்ற முதலில் அவர்கள் குரல் கொடுக்கட்டும்.''

''இன்றைய நிலையில் உங்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்ன?''

''மூன்று விஷயங்கள்... அப்பாவித் தமிழர்களைப் பலியிடும் இலங்கை அரசாங்கம் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு, இலங்கைக்குத் தரும் ராணுவ உதவியை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டால் இந்தியக் கடற்படை திருப்பித் தாக்கும் என்று அறிவிக்க வேண்டும். இங்கே... முதல்வர் கருணாநிதி, உடனடியாக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நமது அரசியல், அபிப்ராயப் பேதங்களை அப்பாவித் ஈழத் தமிழனின் வாழ்க்கையுடன் சேர்த்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்!''

நன்றி: ஆனந்தவிகடன்


Comments