பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்குள் புதைந்து கிடக்கும் தென்னிலங்கைச் சிங்களம், சிறுபான்மையினராக அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழினத்தின் நீதியான - நியாயமான - அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பது தெளிவு.
அப்படி சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளைத் தென்னிங்கை மக்களைப் புரிந்துகொள்ள விடாமல் தடுத்து, பேரினவாத மிதப்புடன் கூடிய மாயைக்குள் - ஒரு திமிர்ச் செருக்குப் போக்குக்குள் - அவர்களை வைத்திருக்கும் கைங்கரியத்தை அறிவார்ந்த சிங்களத் தரப்பு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது.
இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட முடியாத நீண்ட கால இழுபறியாக நீடிப்பதற்கு, இவ்வாறு உண்மைகளையும் யதார்த்தங்களையும் தென்னிலங்கை மக்கள் புரிந்துகொள்ள முடியாதவாறு இனவாத வலைப் பின்னலுக்குள் அவர்களை சிக்க வைத்திருக்கும் தென்னிலங்கை ஊடகத் தரப்பு உள்ளிட்ட படித்த வர்க்கமே பிரதான காரணமாகும்.
சிங்கள, பௌத்த பேரினவாதம் தென்னிலங்கையின் தேசிய சித்தாந்தமாக இன்று வியாபித்து நிற்கையில் சிங்களத்தின் மூளையத்தை அந்தக் கருத்தாதிக்கமே சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. சிங்களத்தின் மனவமைப்பில் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ள இந்த இனவெறித் திமிர், சிறுபான்மையினர் தரப்பு நியாயங்களைப் புரிந்துகொள்ளவிடாது சிங்களத்தை மறைத்து நிற்கின்றது.
இந்தத் தடவை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர் தின உரை குறித்துத் தென்னிலங்கை ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளும், திரிப்பு வேலைகளும் கூட இவ்வாறு சிங்களத்தின் மனவமைப்பைத் திசை திருப்பும் எத்தனைங்கள்தாம்.
வழமையாக தமது மாவீரர் தின உரையில் சில விடங்களையப் புலிகளின் தலைவர் பொதுவாகக் கூறுவது உண்டு. இவ்விடயத்தில் தமது இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டை இவ்வாறு திரும்பத் திரும்ப அவர் வலியுறுத்துகின்றமை புதுமையானதல்ல.
*நாங்கள் சமாதான விரோதிகள் அல்லர்; யுத்த வெறியர்களும் அல்லர்.
*அமைதிப் பேச்சுக்கும், சமாதான வழித் தீர்வு முயற்சிகளுக்கும் நாம் எப்போதும் தயார்.
*யுத்தத்தை நிறுத்தி சமாதான வழியில் தீர்வு காண நாங்கள் காத்திருக்கின்ற போதிலும், இந்த யுத்தத்தை சிங்கள அரசுதான் எம்மீது வலிந்து திணித்துள்ளது.
- இது போன்ற கருத்துக்களை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவும் தனது மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் வெளிப்படுத்தியே வந்துள்ளார். இவை புதுமையானவை அல்ல.
ஆனால் முன்னரெல்லாம் இக்கருத்தை - சமாதான வழித் தீர்வுக்கான தனது விருப்பை - பிரபாகரன் வெளியிட்டபோது அவற்றை தென்னிலங்கை ஊடகங்கள் முன்னிலைப்படுத்தி பிரசுரிப்பதில்லை.
மறுபக்கத்தில் யுத்தத்துக்கும் தாங்கள் தயார் என்ற ரீதியில் பிரபாகரன் கூறும் கருத்தையே முன்னிலைப்படுத்தி, யுத்தத்துக்கான மோச சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதிலேய அவை கண்ணும் கருத்துமாக இருந்து வந்தன.
இந்தத் தடவையும் கூட பிரபாகரன் இந்த இரண்டு பக்கக் கருத்துக்களையுமே வெளியிட்டிருக்கின்றார்.
"தவிர்க்க முடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வு காணவே விரும்புகிறோம்.
இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்." - என்று கூறியுள்ள பிரபாகரன் வேறு ஒரு விடயத்தையும் சொல்லியிருக்கின்றார்.
"இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்று திரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்." - என்றும்
"தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ, சிங்கள ஆதிக்கத்துக்கோ என்றுமே இடமளிக்கப் போவதில்லை.
எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும், எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும், நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காகத் தொடர்ந்து போராடுவோம்.
வரலாறுவிட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்." - என்று கூறியிருக்கின்றார் பிரபாகரன்.
இப்படித் தம் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்கொள்ளவும் தயார், அதை நிறுத்தி அமைதி வழியில் - சமாதான நெறியில் - தீர்வு காணவும் தயார் என இரண்டு பக்கக் கருத்துகளையும் பிரபாகரன் ஒவ்வொரு மாவீரர் தினச் செய்தியிலும் தெரிவித்து வருகையில் -
இவ்வளவு காலமும் அச்செய்திகளில் அவர் வெளியிட்டு வந்த சமாதான அழைப்புப் பற்றிய தகவலை முன்னிலைப்படுத்தாமல் புறமொதுக்கி வந்த தென்னிலங்கை ஊடகங்கள் இந்த முறை மட்டும் அதைத் தூக்கிப் பிடித்து "யுத்தத்தை நிறுத்தக் கோருகிறார் பிரபாகரன்" எனவும், "யுத்தத்தை நிறுத்த விரும்புகிறார் பிரபாகரன்" எனவும் தலைப்பிட்டுச் செய்திகள் பிரசுரித்திருக்கின்றன.
புலிகளை அடியோடு அழித்தொழித்து, இல்லாமல் செய்யும் இராணுவ நடவடிக்கைகளில் அரசுப் படைகள் வெற்றிகரமாக நடைபோடுகின்றன என்ற எண்ணம் நீடிக்கையில் -
வேறு வழியின்றி யுத்தத்தை நிறுத்த பிரபாகரன் கெஞ்சுகின்றார் என்ற மாயை நிலையை உருவாக்கவும் -
அதன் மூலம் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் முழுப் போர்த் தீவிரத்தில் தென்னிலங்கையை உற்சாகப்படுத்தித் தமிழர் தாயகத்துக்கு எதிரான அந்தப் போரில் தெற்கை முழு மூச்சில் ஈடுபட வைப்பதுமே இத்தகைய திரிப்புச் செய்திகளின் பின்புலமாகும்.
தெற்கில் கருத்துருவாக்கிகளான ஊடகங்கள், பிரபாகரன் சுட்டிக்காட்டுவது போன்று இவ்வாறு போரியல் தீவிரத்தில் சிங்களத்தை மூழ்கடித்திருக்கும் போது அமைதி வழித் தீர்வு சாத்தியமற்றதே.
Comments