இலங்கைத் தமிழன் பட்டினி கிடந்து சாவதா? சாப்பிட்டுச் சாவதா? இதுவல்ல பிரச்சனை! - தா.பாண்டியன் பேட்டி



இலங்கையில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற பிள்ளையார் சுழி போட்டது, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான். அதனைத் தொடர்ந்துதான் தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மத்திய அரசை மிரட்டும் வகையில் தமிழக எம்.பி.க்களின் ராஜினாமா தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக இருக்கிறது என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, அதன் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக நாம் அவரை சந்தித்துப் பேசினோம்.

ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக, ஏற்கெனவே தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நீங்கள் பங்கேற்றுள்ளீர்கள். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் என்ன?

``அவசியம் இருப்பதால்தான் கூட்ட உள்ளோம். ஏற்கெனவே, தி.மு.க. அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, எம்.பி.க்களின் ராஜினாமாவைத்தான் அனைவரும் நினைக்கிறார்கள். `இலங்கை அரசுக்கு ராணுவம் மற்றும் ஆயுத உதவி செய்யக்கூடாது. இலங்கைத் தமிழர்கள் மீது குண்டு வீசக் கூடாது' என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இலங்கைத் தமிழர்கள் மீது குண்டு போடுவதை அந்த அரசு நிறுத்தவே இல்லை. தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடும் தொடர்கிறது. எனவேதான் நாங்கள் இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளோம். இங்கிருந்து உணவு மற்றும் மருத்துவ உதவி பற்றிப் பேசுவது பயனற்றது. `ஈழத் தமிழன் பட்டினி கிடந்து சாவதா? சாப்பிட்டு விட்டுச் சாவதா?' இதில் என்ன வேறுபாடு? அதற்கு தமிழன் மானத்தோடு சாகட்டும்.''

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கூட்டப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, எந்தெந்த கட்சிக்கு அழைப்பு அனுப்பியுள்ளீர்கள்? யார் யாரிடம் இருந்து பதில் வந்துள்ளது?

``அனைத்துக் கட்சிகளையும் அழைப்பதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டம். அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களிடம் இருந்து வரும் பதிலைப் பொறுத்து அனைவருக்கும் ஏற்ற தேதியில் ஏற்ற இடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்.''

ஏற்கெனவே, ஈழத் தமிழர் பிரச்னைக்காக நீங்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பங்கேற்பதாக அறிவித்த அ.தி.மு.க., கடைசி நேரத்தில் வராமல் போனது அவமானம் இல்லையா? தற்போது, எந்த அடிப்படையில் அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

``யார் வருகிறார்கள், யார் வரமாட்டார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல், அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். யாரையும் வற்புறுத்த மாட்டோம். வந்தால் வரவேற்போம், வராவிட்டால் குறை கூறமாட்டோம்.''

தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இரண்டு வார காலத்திற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய கருணாநிதி, தற்போது ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுவது நியாயமில்லை என்று கூறியிருப்பது பற்றி?

``சரிதான். போர் நிறுத்தம் என்பது இருதரப்பும் செய்ய வேண்டும். இன்னும் இலங்கையில் சட்டப்படி போர் நிறுத்த அறிவிப்பைச் செய்ய வேண்டியது, அரசுத் தரப்பில்தான். ஏனெனில், அரசுத் தரப்பில் இருந்துதான் முப்படைகளும் ஏவப்படுகின்றன. இதைத் தவிர, அவர்களுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளின் ராணுவ உதவியும் உள்ளது. இவர்களை எதிர்த்துப் போராடக்கூடிய தீவிரவாதக் குழுவில் இருப்பது தொண்டர் படைதான். அவர்கள் தற்காப்புக்காகத்தான் போராடுகிறார்கள் எனவே, இலங்கை அரசுதான் முதலில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும்.''

தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக முதலில் போராட்டம் தொடங்கியது இந்திய கம்யூனிஸ்டுதான். அதனைத் தொடர்ந்தே பல்வேறு கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

``ஐதராபாத்தில் நடந்த அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிலும், அதனைத் தொடர்ந்து நடந்த மத்தியக்குழு கூட்டத்திலும் ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் வரும் 14-ம் தேதி டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கள் ஒலிக்க உள்ளன. இது உலக வரலாற்றில் ஒரு சாதனை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூட்டப்படும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் தேசிய அளவில் ஒரு போராட்டம் நடத்த வழி வகுப்போம்.''

ஈழத் தமிழர் பிரச்னையையொட்டி `என் ஆட்சிக்கு முடிவுகட்ட தீர்மானித்துள்ளனர்' என்று கருணாநிதி கூறியிருப்பது பற்றி?

``தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்னையில் நாம் அனைவரும் ஒருமித்த குரலோடு இருக்க வேண்டும். சென்னை மயிலை மாங்கொல்லையில் ஈழத்தமிழர் பிரச்னையில், தி.மு.க. நிலைப்பாட்டை வெளிப்படுத்த நடந்த பொதுக்கூட்டத்தில் `இந்த ஆட்சி தேவைதானா' என்று பேசிய முதல்வர், தற்போது தனது ஆட்சிக்கு முடிவு கட்ட தீர்மானித்துள்ளனர் என்று கூறியிருப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைக் காட்டிலும், அவருடைய ஆட்சியைப் பற்றிய பயம்தான் அவருக்கு அதிகம் உள்ளது என்பதைத்தான் காட்டுகிறது. ஈழத் தமிழர் பிரச்னை என்ற ஒன்று இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வராது. ஏனெனில், விலைவாசி உயர்வு மட்டுமல்ல, தி.மு.க. ஆட்சியின் முடிவை மின்வெட்டே தீர்மானித்து வைத்துள்ளது!''

இரா. முருகேசன்
படம்: மீடியா ராமு

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், Nov 16, 2008

Comments