ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை புதுடில்லியில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் பேரணி நடைபெறவுள்ளது.
இப்பேரணியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் தலைமையில் மாணவர்கள் இன்று புதுடில்லி புறப்பட்டுள்ளனர்.
மாணவர் பெருமன்றத்தின் தமிழ் மாநிலத் தலைவர் பாரதி, பொதுச் செயலாளர் திருமலை ஆகியோருடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்று மாலை சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து தொடருந்து மூலம் புதுடில்லி புறப்பட்டனர்.
இவர்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ஏ.என்.கோபு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணிச் செயலாளர் உதயகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இரவீந்திரபாரதி, நடிகை மனோரமா, கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் சென்ற தொடருந்தினை நடிகர் சத்யராஜ் கொடியசைத்து தொடக்கினார்.
புதுடில்லியில் நாளை மறுநாள் நடைபெறும் பேரணிக்கு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் ஜூலு சக்காரியா உம்மன், பொதுச் செயலாளர் விஜயேந்திர கேசரி ஆகியோர் தலைமையேற்கின்றனர். இந்தப் பேரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், து.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதில் 18 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராட்டம் நடத்துகின்றனர்.
Comments