கிழக்கு மீட்பின்’ சீத்துவம்!


ஈழத் தமிழர் தாயகத்தின் மையப்பூமியான வன்னிப் பெரு நிலப்பரப்பின் மீது கொடூர யுத்தம் ஒன்றை ஏவிவிட்டிருக்கும் இலங்கை அரசு, அதனைப் ‘பயங்கரவாதிகளான’ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று ‘முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல’ கதை விடுகின்றது.

இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தத்தால் இலங்கையின் சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாதவாறு பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் நேர்ந்திருக்கின்றது.

‘மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் ராஜபக்ஷ அரசு முன்னெடுக்கும் இந்த யுத்தத்தினால் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் வீடு, வாசல்களை விட்டு வெளியேறி, உடைமைகளைத் துறந்து, ஏதிலிகளாகியிருக்கின்றனர். இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, மருத்துவ - சுகாதார வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளின்றி, கடுங் குளிரிலும், கொட்டும் மழையிலும், காடுகளிலும், புதர்களிலும், மர நிழல்களிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கும் பேரவலத்தில் இந்த மக்கள் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.

தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவற்றைப் பாதுகாப்பு உயர் வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, மக்களை வீடு வாசல்களில் இருந்து துரத்தி, போரழிவையும், பேரழிவையும் ஏற்படுத்தியவாறு அதற்கு ‘மனிதாபிமான நடவடிக்கை’ என்று பெயரிட்டு விமர்சிக்கும் இந்தக் ‘கோணங்கித்தனம்’ உலகில் இந்தத் தேசத்தில் மட்டுமே அரங்கேற முடியும். அதுவும் பௌத்த சீலத்தையும், காருண்யத்தையும் போதித்த உத்தம ஞானி புத்தரின் போதனைகளின் பெயரால் இந்தக் கொடூரங்கள் இங்கு அரங்கேறுவதுதான் வேதனையிலும் வேதனை.

இலங்கை அரசின் ‘மனிதாபிமானப் பணியின்’ பெயரால் அரங்கேறும் இத்தகைய அட்டூழியத்தை இந்தத் தடவை நியூயோர்க்கைத் தளமாகக்கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அம்பலப்படுத்தியிருக்கின்றது.

‘விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதுதான் மனிதாபிமானப் பணி’ என்று சித்திரிக்கும் இலங்கை அரசு, அப்படிப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்து தன்னால் விடுவிக்கப்பட்ட கிழக்குப் பிரதேசத்தில் எத்தகைய மனிதாபிமானத்துடன் (?) நடந்து கொள்கிறது என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றது.

இலங்கை அரசு புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாகக் கூறப்படும் கிழக்கில் அண்மைய வாரங்களில் படுகொலைகளும், ஆட்கடத்தல்களும் அதிகரித்து நிலைமை மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. அங்கு மிகவும் ஆபத்தான எல்லையை எட்டியிருக்கும் மனித உரிமை மீறல் நிலைவரத்தைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த அமைப்பு பகிரங்க அறிக்கை மூலம் அவசரக் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

‘விடுவிக்கப்பட்ட கிழக்கு’ ஜனநாயகக் கட்டமைப்பு முறைகளுக்கு ஓர் உதாரணமாகவும், புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் அமையும் - என்று இலங்கை அரசு கூறிவருவதைச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் பிரட் அடம்ஸ், ஆனால் "கிழக்கில் படுகொலைகளும் ஆட்கடத்தல்களும்தான் இப்போது எல்லை மீறியுள்ளன.

இத்தகைய கொடூர உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் பிடியிலிருந்து முழு விலக்களிப்பு வழங்கப்படும் நிலையே அங்கு காணப்படுகின்றது" - என்றும் தெரிவிக்கின்றார்.
புலிகளின் பிடியிலிருந்து தாங்கள் விடுவித்து விட்டதாகக் கூறும் கிழக்கு மாகாணத்துக்குத் தாம் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறார் என்று அறிவிக்கிறார் இலங்கை ஜனாதிபதி. அத்தோடு அங்கு ஜனநாயகமும், அமைதியும், சமாதானமும் தாண்டவம் ஆடுகின்றன என்கிறார் அவர்.

ஆனால் தமக்கு - கிழக்கு மாகாணசபைக்கு - உரிய அதிகாரப் பகிர்வு செய்யப்படவேயில்லை எனப் பகிரங்கமாகக் கூறுகிறார், இதே ஜனாதிபதியின் ஆளும் தரப்பைச் சேர்ந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்).
அதுபோல, கிழக்கில் ஜனநாயகமும், அமைதியும் அல்ல, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும், அராஜகங்களுமே தலைவிரித்தாடுகின்றன என்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

கிழக்கை ‘விடுவித்து’ அரசு காட்டியுள்ள முன்மாதிரியின் ‘சீத்துவம்’ இதுதானா?
கிழக்கு விடுவிக்கப்பட்டமையையும் அதன் பின்னரான மாகாணசபைத் தேர்தலையும் விதந்து போற்றி, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய இந்தியா உள்ளிட்ட சர்வதேச தரப்புகளின் கவனத்துக்கு இந்த விடயங்கள் சமர்ப்பணம்.

‘கிழக்கு உதயம்’ எந்தக் கட்டத்தை இன்று அடைந்திருக்கின்றதோ அந்தக் கதிதான் ‘வடக்கு வசந்தம்’ செயற்பாட்டுக்கும் நேரும் என்பதை முற்கூட்டியே உய்த்தறிந்து, அந்தக் கணக்கீட்டின் அடிப்படையில் எச்சரிக்கையாகச் செயலாற்றுமாறு சர்வதேச சமூகத்தைக் கோருகிறோம்.

Comments