மாவீரர் தினத்திற்கு முன் கிளிநொச்சியை கைப்பற்ற முடியாமல் போனதேன்?

மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியில் சிங்கக் கொடியை ஏற்றுகின்ற அரசாங்கத்தின் கனவு கலைந்து போய்விட்டது.

நவம்பர் 27 ஆம் திகதி கிளிநொச்சியில் சிங்கக்கொடியை ஏற்றுவதென்றும் அந்தச் செய்தியை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக அறிவிப்பதென்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
நவம்பர் 26ஆம் திகதி கிளிநொச்சியைப் பிடித்து பிரபாகரனின் பிறந்தநாளில் அவருக்கு தோல்வியைப் பரிசாகக் கொடுப்பதும் மாவீரர் நாளில் அந்தச் செய்தியை அறிவித்து சிங்கக்கொடியேற்றி புலிகளுக்கு நெருக்கடி கொடுப்பதும் அரசாங்கத்தின் பல மாதத் திட்டமாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் காலைவாரி விட்டது இயற்கை என்று இப்போது பழியை அதன் மீது போட்டுத் தப்பிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.

கிளிநொச்சியைக் கைப்பற்ற படையினரால் முடியாது போனதற்கு இயற்கையின் சீற்றம் காரணமா? புலிகளின் எதிர்த் தாக்குதல் தான் காரணமா? என்று இப்போது ஒரு பட்டிமன்றமே நடக்கும் போலத் தெரிகிறது.

புலிகளின் எதிர்த்தாக்குதல்களால் கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாது போய்விட்டதென்று சொல்வதை விட, இயற்கையின் சீற்றத்தைக் காரணம் காட்டி நியாயப்படுத்துவது சுலபமானது.

கடந்தவாரம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் கொட்டித் தீர்த்த மழையினால் போர்க் களநிலை அடியோடி மாறிப் போனது உண்மை. வன்னியில் கடந்தவாரத்தில் நிலப்பரப்பை விட நீர்ப்பரப்பு தான் அதிகமாக இருந்தது.

மேட்டுப் பாங்கான வீதிகள் கூட வெள்ளத்தில் மிதந்தால்கூடப் பரவாயில்லை அடித்துச் செல்லப்படும் அளவுக்கு மோசமான வெள்ளம் கரை புரண்டோடியது. வன்னியின் மேற்குப் பகுதியைக் கைப்பற்றிய படையினருக்கு அது எத்தனை சிரமமான புவியியல் அமைப்பைக் கொண்டதென்ற உண்மை இப்போது தான் புரிந்திருக்கிறது.

இடங்களைப் பிடித்த படையினருக்கு குளங்களை உடைக்காமல் பாதுகாக்கின்ற வேலைதான் வந்ததே தவிர கடந்தவாரம் சண்டை என்ற பேச்சே எடுபடவில்லை. அந்தளவுக்கு படையினரை வெள்ள அபாயம் சூழ்ந்திருந்தது.

இயற்கையின் சீற்றத்தினால் படைத்தரப்பு சந்தித்திருக்கின்ற நெருக்கடி வரலாறு காணாதது. ஆனால், அதை வைத்துக் கொண்டு கிளிநொச்சியை கைப்பற்ற முடியாது போனதற்கு இயற்கையின் சீற்றத்தைக் காரணமாக கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த செப்டெம்பர் மாதம் முதற்கொண்டு படைத்தரப்பு எட்டித் தொடும் தொலைவில்தான் கிளிநொச்சி நகரம் இருப்பதாகக் கூறி வந்தது. வடமத்திய, சப்ரக?வ மாகாணசபைத் தேர்தலுக்கு முதல் நாள் இன்னும் சில மணிநேரத்தில் கிளிநொச்சி வீழ்ந்து விடும் என்று சொல்லி அரசாங்கத் தரப்பு பிரசாரம் செய்திருந்தது.

ஆனால், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாகக் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சண்டைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. முன்னர் தென்திசையில் இருந்து கிளிநொச்சி மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த படைத்தரப்பு பூநகரி,பரந்தன் வீதியின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், கோணாவில் பக்கமாகவும் புதுமுறிப்பு உருத்திரபுரம் பக்கமாகவும் முன்னேறி கிட்டத்தட்ட அரைப்பிறை வடிவில் முற்றுகையிட்டிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி முற்றுகையின் இறுதிச் சமர் ஆரம்பித்து விட்டதாக படைத்தரப்பு தகவல் வெளியிட்டிருந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே படையினர் கிளிநொச்சி நகருக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் உள்ள தெருமுறிகண்டி, பாரதிபுரம், அறிவியல்நகர் கூறியிருந்தனர்.

அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கிளிநொச்சியைக் கிட்டத்தட்ட மூன்று முனைகளில் முற்றுகையிட்டு படைத்தரப்பு தீவிரமான தாக்குதல்களை நடத்தியது.

படைத்தரப்பு இறுதித் தாக்குதல் எனக்கருதிய இந்த நடவடிக்கையில் 2 டிவிசன்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சிக்குத் தென்புறத்தில் திருமுறிகண்டிப் பகுதியில் 8ஆவது இலகு காலாற்படை மற்றும் 10ஆவது இலகு காலாற்படை ஆகிய பற்றாலியன்கள் முன்னேற்ற நகர்வில் ஈடுபட்டன. இவை 572ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த பற்றாலியன்களாகும்.

அதேவேளை கிளிநொச்சிக்கு தென்மேற்கே 572 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த 9வது கஜபா றெஜிமென்ட் மற்றும் 12ஆவது சிங்க றெஜிமென்ட் ஆகியன புலிகளின் பிரதேசத்துக்குள் ஊடுருவ முற்பட்டன.

57ஆவது டிவிசனுக்கு உதவியாக விசேட படைப்பிரிவு பற்றாலியன் ஒன்றும் வர பகுதிகளிளுக்குள் படையினர் முன்னேற முற்பட்டிருந்தனர்.

கடந்த 21ஆம் திகதி தொடங்கிய இந்த மோதல்கள் மறுநாள் சனிக்கிழமையும் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. முதல் இரண்டு நாட்களும் இடம்பெற்ற சண்டைகளில் 35 படையினர் வரை கொல்லப்பட்டதாகவும் ஒரு சிப்பாயின் சடலத்தைக் கைப்பற்றியதாகவும் புலிகள் வழைக்கப்பட்டிருந்தது.

அதேவேளை 58ஆவது டிவிசனின் 8ஆவது கெமுனுவோச், 17ஆவது கெ?னு வோச், 12ஆவது கஜபா றெஜிமென்ட் என மூன்று பற்றாலியன்கள் கிளிநொச்சிக்கு மேற்கேயுள்ள உருத்திரபுரம், அடம்பன் தெற்கு, புதுமுறிப்பு பிரதேசங்களில் முன்னகர்வில் இறங்கின.

பூநகரி பரந்தன் வீதியில் உருத்திரபுரம் பகுதிக்குள்ளால் முன்னேறி குஞ்சுப்பரந்தன் பகுதிக்குள் பிரவேசிக்க முயன்ற படையினர் மீது தான் புலிகளின் உக்கிர பதில் தாக்குதல் நடந்தது.

பரந்தன் பூநகரி வீதியின் இருபுறங்களிலும் அதாவது வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களின் ஊடாக 2ஆவது மற்றும் 3ஆவது கொமாண்டோ பற்றாலியன்களை நகர்வில் ஈடுபடுத்தியது 58ஆவது டிவிசன்.

மொத்தத்தில் 10 பற்றாலியன் துருப்புக்கள் கிளிநொச்சி மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்காகப் படைத்தரப்பினால் களம் இறக்கப்பட்டனர். வன்னிப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய விடுமுறையில் இருப்பதால் பதில் தளபதியான மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்தவே இந்த தாக்குதலை வழிநடத்தியிருந்தார்.

இரணைமடுச் சந்திக்கு தெற்காக ஆரம்பித்து கிளிநொச்சி மற்றும் பரந்தனை உள்ளடக்கியதாக "ட' வடிவில் புலிகள் அமைத்திருந்த பா?ய மண்ணரணை தகர்த்து முன்னேற படைத்தரப்பு பன்முனைத் தாக்குதலைத் தொடுத்திருந்தது.

இந்தத் தாக்குதல் இலகுவானதல்ல என்பது படைத்தரப்புக்கு நன்கு தெரியும். கிளிநொச்சி கட்டளைத் தளபதி வேலவன் தலைமையில் புலிகள் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி மற்றும் இம்ரான் பாண்டியன் படையணி ஆகியவற்றைச் சேர்ந்த நன்கு பயிற்சி பெற்ற போராளிகளை நிறுத்தியிருந்தமை படைத்தரப்புக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

புலிகளின் கிளிநொச்சி கட்டளை தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கின்ற வேலவன் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக உள்ள இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக முன்னர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியைத் தக்கவைப்பதில் புலிகள் உறுதியாக இருப்பதும் அதுவும் மாவீரர் நாளுக்கு முன்னர் அதைக் கைப்பற்றி விடவேண்டும் என்ற படைத்தரப்பின் திட்டத்தை முறியடித்தே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் இருப்பதும் படையினருக்கு தெ?ந்திருந்ததால் அதிகளவிலான துருப்புக்களை களம் இறக்கி பல முனைகளில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

ஆனால் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை உக்கிரமாக நடத்தியதால் படைத்தரப்பின் திட்டங்கள் அனைத்துமே தலைகீழாக மாற்றமடைந்தன. ஞாயிற்றுக்கிழமை நடந்த சண்டையில் மட்டும் 50 படையினர் கொல்லப்பட்டு 10 பேர் காணாமற்போனதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் 120 படையினர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

படைத்தரப்பு தமது தரப்பில் 27 படையினர் கொல்லப்பட்டு 8பேர் காணாமற் போன தாகவும் 72 பேர் காயமுற்றதாகவும் உறுதி செய்திருந்தது. காணாமற்போன படையினர் 9 பேரின் சடலங்களைப் புலிகள் கைப்பற்றி பின்னர் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் இந்த எதிர்த்தாக்குதல்களால் கிளிநொச்சியைப் பிடிக்கின்ற படைத்தரப்பின் திட்டம் குழப்பமடைந்தது. அடுத்த சிலநாட்கள் அமைதியாகவே கழிந்தபோது தான் படைத்தரப்பை இயற்கை புரட்டியெடுத்தது.

மழை, வெள்ளம் குறுக்கிடாது போனால் கூட படைத்தரப்பின் திட்டம் நிறைவேறியிருக்குமா என்பது சந்தேகமே.

இப்போது கொட்டித் தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்த பின்னரே கிளிநொச்சியையோ பரந்தனையோ பிடிக்கின்ற முயற்சியில் படைத்தரப்பால் இறங்க முடியும்.

அதேவேளை இயற்கையின் சீற்றம் படையினரைப் பெரிதும் சலிப்படையச் செய்யக்கூடியது. தொற்று நோய் ஆபத்தும் உள்ளது.

இந்தநிலையில கைப்பற்றிய பிரதேசங்களில் நிலைகொள்வதற்குப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்வதே படையினரின் இன்றைய தல் நோக்கமாக உள்ளது. அது நிறைவேற்றப்பட்டு சீரான விநியோக, மீட்பு வசதிகள் செய்யப்பட்ட பின்னர் தான் கிளிநொச்சி போர் அரங்கில் புதிய சண்டைகள் வெடிக்கும்.

-சுபத்ரா-

Comments