தடைகளை மீறி உலகத் தமிழர்கள் உரையை செவிமடுத்தனர் : பிரித்தானிய ரைம்ஸ் ஏடு


சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது உரையை உலகத் தமிழினம் காத்திருந்து செவிமடுத்திருப்பதாக, பிரித்தானிய ரைம்ஸ் ஏடு இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் உரை நிகழ்த்துவற்கு சில நிமிடங்கள் முன்பாக வன்னியிலுள்ள ஒலிபரப்புக் கோபுரங்கள் மீது சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியபோதிலும்,

தடையையும் மீறி தலைவரது உரையை அனைத்துலக சமூகம் செவிமடுத்துள்ளதாக இந்தப் பத்திரிக்கை கூறுகின்றது.

லண்டனில் சிறீலங்கா தூதரகத்தின் நெருக்குவாரங்கள், பிரித்தானிய காவல்துறையினரது தடைகள் மத்தியிலும் கிழக்கு லண்டனிலுள்ள ExCeL மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டதாக நேரில் சென்று செய்தி சேகரித்துள்ள ரைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் மட்டுமன்றி, மேலும் பல பிரபல ஊடகங்களின் செய்தியாளர்கள் நேற்றைய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் செய்தி சேகரிக்க வந்திருந்ததாக பிரித்தானியச் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கலந்துகொண்ட மக்களில் பலர் தமிழீழ தேசத்தின் நிறங்களில் (சிவப்பு, மஞ்சள்) தமது உடைகளை அணிந்திருந்தனர் எனவும்,

சிறீலங்கா படைகள் வெற்றிச் செய்திகள் என்ற கனவுலகில் வாழ்ந்து வருவதாகவும், எவ்வாறான தடைகள், எவ்வாறான சவால்களையும் எதிர்கொண்டு தமிழ் மக்களின் விடுதலை ஈட்டப்படும் என தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தனதுரையில் கூறியிருப்பதும் ரைம்ஸ் பத்திரிகையின் இந்த செய்திப் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றிய தவறான புரிதலுடன் தம்மை தடை செய்துள்ள நாடுகள் அந்தத் தடையை நீக்கி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என விடுக்கப்பட்டு அழைப்பையும் இந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டுகின்றது.

சிங்கள அரசு பாரிய இனப்படுகொலையைப் புரிந்து வருவதாக தேசியத் தலைவர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள ரைம்ஸ் ஏடு, இது பற்றிய தகவல்கள் வெளியுலகுக்குச் செல்லது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், என்ன தடை வந்தாலும் விடுதலைப் போராட்டம் தொடரும் என தலைவர் கூறியதாகவும் குறிப்பிடுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியில் தனியான அரச நிருவாகத்தை நடத்தி வருவதாகவும் இந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் ரைம்ஸ் பத்திரிகை பல இலட்சக்கணக்கான மக்கள் வாசிக்கும் பிரபல பத்திரிகை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


Comments