சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் போரினால் தமிழீழ மக்கள் துயருரும் இந்த வேளையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம் என தமிழீழ தேசியத் தலைவர் பணித்ததற்கு அமைய பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ தனியரசுக்கான விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வீச்சாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று 54 ஆவது அகவை காண்கிறார்.
வழமையாக அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் மக்களாலும் போராளிகளாலும் முன்னெடுக்கப்படுவது உண்டு.
ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தேசியத் தலைவர் பணித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபகாரன் அவர்களின் பிறப்பு தமிழினத்தின் எழுச்சிக்கானதாகியுள்ளது.
தமிழ் இனத்தின் விடுதலைக்கான எழுச்சி நாளே தேசியத் தலைவரின் பிறந்த நாள் ஆகும்.
2500-க்கும் அதிகமான ஆண்டுகள் தமிழ் இனத்தின் அடிமை வரலாற்றில் தமிழினம் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கையுடன் கட்டி எழுப்பி அதன் செயல் வடிவமாக ஆயுதப் போராட்டத்தை வளர்த்தெடுத்து இன்று உலகில் தமிழ் இனத்தை தலைநிமிர வைத்து அவர்களுக்கு முகவரியைப் பெற்றுக்கொடுத்துள்ளார் தேசியத் தலைவர் என்று ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் தமிழறிஞர்களும் பதிவு செய்துள்ளனர்.
உலகில் தமிழனுக்கு என்று நவீன முப்படைகளையும் கட்டி எழுப்பியுள்ள தலைவராகவும்- உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் முப்படைகளையும் கொண்ட ஒரேயொரு விடுதலை அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டி எழுப்பியவராகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விளங்குகின்றார்.
சிங்களப் பேரினவாத அரசாங்கமானது தனது லட்சத்துக்கும் அதிகமான படையினரை கொண்டு உலக வல்லாண்மைகளின் துணையோடு அதிநவீன முப்படைகளையும் கொண்டு தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்ற வரலாற்றில் இந்தப் பெரும் படையினை எதிர்கொண்டு தமிழினத்தை காத்து வருகின்றார் தேசியத் தலைவர்.
தேசியத் தலைவரின் போரியல் நுட்பம் உலகத்தில் உள்ள படைத்துறை நிபுணர்களால் இன்று வியந்து பார்க்கப்படுகின்றது.
சிறிலங்கா படைகளுடன் போரிட்ட அதேவேளை, 1987 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை இந்திய வல்லரசுப் படைகளை நேரடியாக எதிர்கொண்டு வெற்றி பெற்று தமிழினத்தின் விடுதலைப் படையை உலகத்தால் வியப்புறப் பார்க்க வைத்த தேசியத் தலைவர் இன்று தமிழனுக்கு என்று ஒரு மரபு போர்ப்படையை வைத்துள்ள பெருமையையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.
உலகு எங்கும் வாழும் ஒன்பது கோடி தமிழர்களின் முகமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் விளங்குகின்றார்.
இன்று சிங்களப் பேரினவாத அரசும் இயற்கையும் தமிழ் இனத்தை இடம்பெயரச்செய்து சொல்லொண்ணா அவலங்களுக்குள் தள்ளியுள்ளன.
இந்த அவலங்களின் மத்தியில் இந்த இனத்துக்கு உறுதியையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொடுத்துள்ளார் தேசியத் தலைவர்.
Comments