பிரபாகரனின் வழிகாட்டுதல்களின் பேரில் யுத்த முன்நகர்வுகள் இடம்பெறுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளை விரைவில் தோற்கடிக்க முடியும் என்ற கருத்து அடிப்படையற்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளியாகும் தி வீக் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் பொது நடேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக அந்த அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும், படைத்தரப்பினரும் பிரசார நோக்கத்திற்காக விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து விட்டதாக விளம்பரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த வெற்றிகள் தொடர்பில் மிகைப் படுத்தி அறிவிக்கும் பழக்கம் இலங்கை அரசாங்கங்களிடம் தொடர்ச்சியாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த பல அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டதாக அறிவித்திருந்த போதிலும், இறுதியில் பாரிய அழிவுகளை சந்தித்திருந்தமை நினைவு கூரத்தக்கதென அவர் தெரிவித்துள்ளார்.
முன்னரங்கப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் கடும் இழப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும், பல பாகங்களில் உள்ள இராணுவத்தினர் முன்னரங்கப் பகுதிகளுக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதெனவும், கைது செய்யப்பட்ட இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைக் கொண்டு 61ம் படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் படைத்தரப்பினர் மேற்கொள்ளும் வான் மற்றும் ஆட்டிலறித் தாக்குதல்களினால் சிறுவர் முதல் முதியவர்கள் வரையில் அப்பாவிச் சிவிலியன்கள் பெருமளவில் கொல்லப்படுவதாக நடேசன் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவிச் சிவிலியன்கள் மீது படையினர் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பான செய்திகளை நாம் ஊடகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் மட்டுமன்றி உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பெரும் அதிருப்தியுடன் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக மட்டும் தீர்வு எட்டப்பட முடியும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு சிறுபான்மை மக்களின் வெறுப்புணர்ச்சியை மேலும் மேலும் அதிகரிக்க வழிகோலும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருவதாகவும், இதனை மறுக்க முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Comments