சிறிலங்கா அரசு இழப்புக்களை மூடி மறைக்கின்றது; உண்மை எண்ணிக்கை மிக அதிகம்: படையினரின் குடும்பங்கள் மத்தியில் ஆய்வு

போரில் ஏற்பட்டுவரும் இழப்புக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வரும் தகவல்கள் மிகவும் குறைவானது, ஆனால் இழப்புக்கள் அதிகம் என உலக சோசலிச இணைய அமைப்பு தனது ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படையினரையும், அவர்களின் குடும்பத்தவர்களையும் களமுனைகளுக்கு வெளியே கடந்த இரு வாரங்கள் உலக சோசலிச இணைய அமைப்பு (The World Socialist Web Site - WSWS) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியது.

சிறிலங்கா இராணுவமும் அதற்கு ஆதரவான குழுக்களும் பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்ற காரணத்தினால் அவர்களின் பெயர்கள் இங்கு தவிர்க்கப்பட்டுள்ளன என உலக சோசலிச இணைய அமைப்பு ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

போரில் ஏற்பட்டு வரும் இழப்புக்கள் தொடர்பாக அரசு தெரிவித்து வரும் தகவல்களை விட இழப்புக்கள் மிகவும் அதிகம். நான்கு மருத்துவமனைகளில் நாம் நடத்திய ஆய்வுகளில்

கொழும்பு தேசிய மருத்துவமனைகளில் 200 படையினரும்

இராணுவ மருத்துவமனையில் 400 படையினரும்

கொழும்பு தெற்கு மருத்துவமனையில் 60 படையினரும்

ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் 200 படையினரும்

அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை கொழும்பை சுற்றி உள்ள மருத்துவமனைகள் ஆகும்.

ஒரு மருத்துவமனையில் 20 படையினர் கால்கள் மற்றும் கைகளை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதை எமது ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.

சிலர் பார்வையையும், சிலர் கேட்கும் சக்தியையும் இழந்துள்ளனர். இவர்களில் பலர் கிளிநொச்சி மீதான தாக்குதலில் பங்கேற்றவர்கள். பலர் பேசுவதற்கு அச்சம் தெரிவித்த போதும் ஒருவர் போரின் உக்கிரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த போரின் முடிவு தொடர்பாக நாம் எதுவும் கூற முடியாது. ஆனால், விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்துவிட்டனர் என தெரிவிக்கும் போதும் அவர்கள் தாக்கும் திறனுடன் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

களமுனையில் எம்மை நோக்கி ஒரு தொகுதி படையினர் சிரித்தவாறு வந்தனர். எமது சக படையினர் தான் வருகின்றனர் என நாம் நினைத்தோம். ஆனால், திடீரென அவர்கள் எம்மீது சரமாரியாக தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் எமது அணியில் இருந்த பலர் கொல்லப்பட்டனர், நான் காயமடைந்தேன், காயமடைந்தவர்களில் பலர் அவையவங்களை இழந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

21 வயதான தனது மகன் கடந்த மாதம் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பலர் வறுமை காரணமாகவே படையில் இணைகின்றனர். வேலை வாய்ப்புக்கள், கல்வி வாய்ப்புக்கள் அற்ற நிலையில் கிராமப்புற இளைஞர்கள் படையில் இணைந்து வருகின்றனர்.

உயிரிழந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர், அந்த குடும்பத்தின் ஒரே ஒரு ஆண்பிள்ளை, அவருக்கு இரு இளைய சகோதரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் திருமணமானவர், மற்றையவர் 10 ஆம் தரம் படித்து வருகின்றார்.

அவரின் தந்தையார் இருதய நோயாளியாக இந்த போதும் குடும்பத்தின் வறுமை காரணமாக வாகனச் சாரதியாக பணியாற்றி வருகின்றார். தனது மகன் இராணுவத்தில் இணைவதை தான் விரும்பவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

"அம்மா கவலைப்பட வேண்டாம் நாங்கள் நேரடியாக களமுனைக்கு செல்லப்போவதில்லை" என மகன் தன்னை சமாதானப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல இராணுவ அதிகாரிகள் வந்து பல விண்ணப்ப படிவங்களில் கையொப்பங்களை பெற்றுச் சென்றனர். எனது மகன் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் நாளே பயிற்சியை நிறைவு செய்திருந்தார்.

சில மாதங்களே படை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். தற்போது போர் காரணமாக நாம் எமது மகனை இழந்துள்ளோம். அரசு சம்பளத்தை தருவதாக உறுதி அளித்துள்ள போதும் எதுவும் நடைபெறவில்லை. மரணச்சடங்கிற்கு எமக்கு 100,000 ரூபாய்களை தந்திருந்தனர்.

எமது வறுமை காரணமாகவே இவை எல்லாம் நிகழ்ந்துள்ளன. எனது கணவரின் உழைப்பினால் நாம் இந்த வீட்டில் இரு அறைகளை கட்டியிருந்தோம். தற்போது நாம் என்ன செய்வோம்? தனது சம்பளத்தில் வீட்டை கட்டி முடிக்கும் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கலாம் என எனது மகன் கூறியிருந்தார். அவர் இராணுவத்தில் இணையாது விட்டிருந்தால் அது ஒருவேளை நடந்திருக்கலாம். மகன் இல்லாமல் நாம் எப்படி வாழப்போகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த போரானது அரசு தன்னை தக்க வைப்பதற்கே என அயலவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். கிழக்கில் என்ன நடைபெற்றுள்ளது? அது தற்போது பிள்ளையானிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இராணுவம் அதனை கைப்பற்றிய போதும் அது தற்போது பிள்ளையானிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு துணை இராணுவக்குழுவின் தலைவராவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் கிளாலி களமுனையில் கொல்லப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் குடும்பத்தை அம்பலாங்கொடவில் சந்தித்திருந்தோம். 2004 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த எனது மகன் ஒரு தடவை காயமடைந்திருந்தார். இந்த மாதம் அவர் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்த நாளில் மரணமடைந்துள்ளார். இந்த சோகத்தை எவ்வாறு நான் தாங்குவேன் என அவரின் தாயார் கதறி அழுதவாறு தனது சோகத்தை தெரிவித்துள்ளார்.

தனது மகனுடன் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அவரின் தந்தையார் தெரிவித்துள்ளார். அவரது சகோதரரும் படையில் பணிபுரிகின்றார். அவர் மரணச்சடங்கிற்காக 10 நாட்கள் விடுமுறையில் வந்தததாக தெரிவித்திருந்தார்.

வடபகுதியில் இருந்து வானூர்தி மூலம் அவர் தென்பகுதிக்கு வந்த போது, தமது வானூர்தியில் இரு உடலங்களும், காயமடைந்த 20 படையினரும் பலாலியில் இருந்து ஏற்றிவரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அது மிகவும் வறிய குடும்பம், தந்தையார் தச்சு வேலை செய்து வருகின்றார். எனினும் பார்வைக்குறைபாடு காரணமாக அவர் தற்போது தொழில் செய்வதில்லை. எஞ்சிய தனது மகனையாவது களமுனைகளில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றுமாறு அவர் கேட்டு வருகின்றார்.

உக்கிர போர் மற்றும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக பல ஆயிரம் பேர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். 2007 ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்த 22 வயதான படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்திற்கு மேலதிகாரி விடுமுறை கொடுக்க மறுத்ததனால் அவர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.

எனினும் கடந்த செப்ரம்பர் மாதம் 14 ஆம் நாள் அவரை கைது செய்த இராணுவ காவல்துறையினர் அவரை பூசா தடுப்பு முகாமில் அடைத்துள்ளனர்.

நான்கு மாத கர்ப்பிணியான அவரது மனைவியை பார்வையிடச் சென்றபோது அவருக்கு பார்வையிடும் அனுமதி 4 நிமிடங்களே வழங்கப்பட்டிருந்தது. அவர் தற்போது தனது சகோதரருடன் குருநாகலவில் வசித்து வருகின்றார். அவர்களின் வீடு மிகவும் சிறியது ஒரு அறை கொண்டது.

அவரின் கணவர் கொழும்பில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ள குருவிட்ட முகாமில் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருடன் இராணுவத்தில் இருந்து தப்பியோடிய மேலும் 120 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தனது தந்தையுடன் பேசிய அவர் தனது உறவினரை இராணுவத்தில் சேரவேண்டம் எனக் கூறுமாறு கூறியதாக அவரின் தந்தையார் தெரிவித்துள்ளார்.

எல்லோரையும் போலவே அவர்களது குடும்பமும் வறுமையானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments