வீடெல்லாம் அதிரும்படியாக ஒரு சத்தம் கேட்டது. வெளியில ஓடிப் போய்ப் பார்த்தன். வெடிகுண்டு ஒன்டு வெடிச்சதில் கார், லாரியளெல்லாம் தீப்பிடிச்சு எரிஞ்சு கொண்டிருந்தது. எல்லாரோடுஞ் சேர்ந்து நானும் நெருப்பை அமர்த்த உதவி செஞ்சன். தினமும் உறங்கையில போரைப் பற்றியேதான் பேச்சு.." - இது யாரோ ஒரு புரட்சிக்காரரின் வார்த்தைகள் இல்லை. இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் சுனில் என்ற 11 வயது சிறுவனின் வார்த்தைகள்.
சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மூர்க்கத்தனமான போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களையே கண்டிராத அப்பாவி மக்களும் அந்தப் போரில் உயிரிழக்கிறார்கள். ஊனமாகிறார்கள். வீடிழக்கிறார்கள். எனவேதான், உலகிலுள்ள ஈர இதயங்கள் எல்லாமே அந்த ஈழ மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கின்றன.
போரும் போருக்கான வேரும் கூட அறியாத மொட்டுக்களே இந்தப் போரால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? ஆம்! போர் அபாயமுள்ள இடங்களில் பள்ளிகளெல்லாம் மூடப்பட்டு விட்டன. பொம்மை, விளையாட்டு என்று பேச வேண்டிய வயதில் அங்குள்ள குழந்தைகளுக்கு ஏ.கே 47-ம், லாஞ்சரும், ஃபைட்டர் ஜெட்டும்தான் பரிச்சய வார்த்தைகளாகி விட்டன. சமீபத்தில் 14 வயது சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். இதுபோன்ற செய்திகள் நாளிதழ்களே கொள்ளாத அளவுக்குப் பெருகி விட்டன.
போரிலும் பல குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறார்கள். போரில் தாய் - தந்தையை இழந்து அநாதைகளாகிப் போன குழந்தைகள் பலர், போர் பற்றிய விஷயங்களையே பார்த்தும் கேட்டும் பழகியதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. போர் நடக்கும் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கூட கொள்ளை விலை என்பதால் உணவுக்கும் கூட பல குழந்தைகளுக்கு வழியில்லை.
ஐ.நா-வின் ஆதரவோடு செயல்படும் யுனிசெஃப் அமைப்பு, இப்படி போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்கவும் அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் முயன்று வருகிறது. சிலர் மீட்கப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால், மலை போல் பிணங்கள் குவிக்கப்பட்டால், அவர்களின் பிள்ளைகள் யாவரும் விரட்டியடிக்கப்பட்டால், அந்த அமைப்பினராலும்தான் என்ன செய்ய முடியும்? 'போரினால் அப்பாவி மக்களும் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது' என்று இரு தரப்புக்கும் யுனிசெஃப் கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால்.. அதற்குக் காது கொடுப்பவர் யார்?
ஒரே நொடியில் வாழ்க்கை தலைகீழாக மாறி தாங்கள் அநாதைகளாக்கப்படுவது.. படிப்புக்கும் உணவுக்கும் வழியில்லாத வறுமை.. கண்முன்னே சக மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்.. இவை எல்லாம் சேர்ந்து சில பிஞ்சுகளின் கைகளில் கூட ஆயுதத்தைத் திணித்திருக்கின்றன.
பதினாறு வயதில் ஆயுதம் ஏந்தியிருக்கும் வான்மதி என்ற பெண்ணின் வார்த்தைகள் இவை.. "நான் ஐந்தாவது வரை படிச்சன். ஒரு நாள் என் தாய், தந்தை போரில் இறந்துட்டாங்கள். எனக்கென்டு யாரும் ஒறவில்லை. ஆகாரத்துக்குக் கூட வழியில்லை. யாரோட உதவியும் கேட்டுக் கொள்ளாம சுயமாக வாழ இயலலை. விரக்தியோடதான் இங்கன வந்துவிட்டேன்."
"எங்கள் வீட்டை எரிச்சுப் போட்டார்கள். அக்கம்பக்கத்து பெட்டைகள் எல்லாரையும் பலாத்காரம் செஞ்சார்கள். எங்களை சித்ரவதையிஞ் செஞ்சார்கள். அந்த மிருகங்களை வதைக்கத்தான் துப்பாக்கி எடுத்தன்"- பதினாறு வயதில் தீவிரவாதம் பயிலும் மற்றொரு சிறுவனின் உள்ளக் குமுறல் இது.
போரால் இதுவரை நேரடியாக பாதிக்கப்படாமல் இருக்கும் குழந்தைகளும் பித்துப் பிடித்தது போலத்தான் நடமாடுகிறார்கள். இருபத்து நான்கு மணி நேரமும் அவர்கள் காதுகளில் ஒலிப்பதெல்லாம் போர்.. போர்.. போர் எனும் குரல்தான்.
சமீபத்தில் கொழும்பில் குழந்தைகளுக்காக ஒரு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இருநூற்றைம்பது குழந்தைகள் அதில் பங்கேற்றனர். அங்கே பெரும்பாலானோர் வரைந்தது போர்க் காட்சிகள், உடைந்த வீடுகள், வெறிச்சோடிய தெருக்கள் போன்ற படங்களைத்தான். கிட்டத்தட்ட எல்லா படங்களிலுமே அமைதி என்ற வார்த்தை இருந்தது.
சப்னா என்ற ஒன்பது வயதுச் சிறுமி நடுக்கத்துடன் கூறியது இது.. ''எங்கேனும் சைரன் சத்தம் கேட்டாலே எனக்கு கொலையும் ரத்தமும்தான் நினைவுக்கு வருகிறது. உடலெல்லாம் நடுங்குகிறது. எங்களுக்கு அமைதி வேண்டும்.''
சப்னாவின் கனவு கண்டிப்பாக பலிக்கும். என்றாவது ஒரு நாள் இலங்கையில் கண்டிப்பாக அமைதி திரும்பும்! இழந்த இந்தக் குழந்தைகளின் வாழ்வு திரும்புமா..?
- சு.நாராயணி
நன்றி: அவள் விகடன், Nov 21, 2008
Comments