எங்கே போர் ஆரம்பித்தாலும் அங்கே உண்மைதான் முதலில் பலியாகிறது என்று சொல்லப்படுவதுண்டு. அது இலங்கையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் போருக்கு அதிகம் பொருந்தும். அங்கே என்ன நடக் கிறது என்பது பற்றிய உண்மை விவரங்கள், நமக்கு அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
அப்பாவி மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் தமிழர்கள் மீது நடத்தப்படும் சிங்கள ராணுவத் தாக்கு தலை நிறுத்தவேண்டுமென்று சொல்லித் தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள்.
அண்மையில் இலங்கை அதிபரின் ஆலோசகரும், அவருடைய சகோதரருமான பஸில் ராஜபக்ஷே டெல் லிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதற்குப் பிறகு, இலங்கைத் தமிழர் மீதான தாக்குதல் குறையும் என்றுதான் நினைத்தோம். மாறாக, மீண்டும் விமானத் தாக்குதலை இலங்கை அரசு ஆரம்பித்துவிட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாகப் புலிகளும் தம்முடைய விமானங்களைப் பயன்படுத்திக் கொழும்பு வரை வந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவங்கள் இரண்டு உண்மைகளை எடுத்துச் சொல்கின்றன. இலங்கையில்
உள்ள ராஜபக்ஷே அரசு, இந்திய மற்றும் தமிழக அரசுகளின் வார்த்தைக்குத் துளியும் மதிப்பளிக்கவில்லை. போரின் மூலமே அது இனப்பிரச்னையைத் தீர்க்க விரும்புகிறது. அதுமட்டுமல்லாமல், இலங்கை ஆட்சியாளர்கள் கூசாமல் பொய் சொல்பவர்களாக இருக்கிறார்கள். டெல்லியில் இருக்கும்போதே ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பஸில் ராஜபக்ஷே, 'கிளிநொச்சியில் பொதுமக்கள் எவரும் இல்லை. அவர்கள் எல்லோரும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். அங்கே எஞ்சியிருப்பது விடுதலைப்புலிகள் மட்டும்தான்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே நாளில் இலங்கையின் 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்' எஸ்.பீ.திவாரத்ன என்பவர், 'இந்திய அரசு ஐ.நா. அமைப் பினூடாக வடக்குக்கு உணவு நிவாரணத்தையும், கூடாரங்களையும் பெற்றுக்கொடுக்க முனைவதானது சாதாரண மக்களின் தேவையைவிட விடுதலைப் புலிகளுக்கே உதவும்' என்று கூறியிருப்பதோடு, 'இந்தியா வின் நிவாரண உதவி எதுவும் தேவையில்லை!' எனத் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசின் இரட்டை வேடம் இதிலிருந்தே தெரிகிறது.
அடுத்த விஷயம், 'விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள்... இன்னும் ஓரிரு நாட்களில் கிளிநொச்சியைக் கைப்பற்றி விடுவோம்' என்ற இலங்கை அரசின் பிரசாரம் பொய் என்பது, புலிகளின் விமானத் தாக்குதல் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டால், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டிருப்பது போல ஒரு அரசாங்கத்தை உருவாக்கி, அமைதியை நிலை நாட்டி விடலாம் என்று இலங்கை அரசாங்கம் கூறி வருகிறது. இலங்கை ராணுவம் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமையை அது உருவாக்கி வருகிறது. இது உண்மைதானா என்று பார்க்க வேண்டும்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இரண்டு முறை கிளிநொச்சி, புலிகளிடமிருந்து இலங்கை அரசின் வசம் சென்றிருக்கிறது. எனவே, கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே போரின் முடிவு என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை, அது ராணுவத்தால் கைப்பற்றப் பட்டாலும், அதை மீண்டும் பிடிப்பது புலி களுக்கு முடியாத காரியமல்ல. தற்போதைய போரிலும்கூட கிளிநொச்சி அவ்வளவு எளிதில் வீழ்ந்துவிடாது என்றே ராணுவ நோக்கர்கள் கருது கின்றனர்.
''இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரஷ்யாவின் லெனின்கிராடை ஜெர்மனியின் நாஜிப்படைகள் எளிதாகக் கைப்பற்றிவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பல மாதங்கள் நீடித்த போரின் முடிவில் ஜெர்மன் படை தோற்றுப் பின்வாங்கியது. அதுவே நாஜிப்படைகளின் முடிவுக்கு ஆரம்பமாக அமைந்தது. அதுபோல இலங்கை ராணுவத்துக்கு கிளிநொச்சி ஒரு லெனின்கிராடாக அமைந்து விடக்கூடும்'' என்று ராணுவ விமர்சகர் பி.ராமன் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே சொல்வதுபோல் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் தழைத்துக் கொண்டிருக்கவில்லை. அங்கே ஆட்சியில் இருக்கும் பிள்ளையான் குழுவுக்கும், அவருடைய முன்னாள் தலைவரான கருணா குழுவுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒருவரையருவர் தீர்த்துக்கட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். அதோடு, அவர்களால் பொதுமக்கள் சொல்லவொண்ணா கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். புலி ஆதரவாளர்கள் என குற்றம்சாட்டி எவரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்பதுதான் அங்கே நிலைமை. ராஜபக்ஷே அரசை விமர்சிக்கிற எவரும் அங்கே உயிரோடு இருக்க முடியாது. திரிகோணமலையில் உள்ள கோனேஸ்வரன் கோயில் அர்ச்சகர் சிவகடாட்ச சிவகுகராஜா அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். புலிகள்தான் அவரை கொன்றுவிட்டார்கள் என்று இலங்கை அரசு பிரசாரம் செய்தது. ஆனால், அங்குள்ள 'மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு விசாரித் ததில், அந்தப் படுகொலையை செய்தது இலங்கை ராணுவம்தான் என்பது அம்பலமாகியுள்ளது.
கிழக்கு மாகாண அரசுக்கு எந்தவொரு அதிகாரத்தையும் இலங்கை அரசு வழங்கவில்லை. முதலில் புலிகளுக்கு எதிராக கருணாவைப் பயன்படுத்திய ராஜபக்ஷே, இப்போது அவர்களுக்குள்ளாகப் பிரிவினையை ஏற்படுத்தி, ஒருவரோடு ஒருவரை மோதவிட்டுக் கொண் டிருக்கிறார்.
இலங்கை ராணுவத்தினர் அர்ப்பணிப்போடு போரில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையல்ல. போர் முனையில் ஏற்படும் இழப்புகள் பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்று இலங்கை ராணுவம் ஊடகங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. அதனால் எவ்வளவு ராணுவ வீரர்கள் பலியாகிறார்கள் என்ற விவரம் வெளியே தெரிவதில்லை. கிளிநொச்சி போர்முனையில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு முதலில் அனுராதபுரம் மருத்துவமனையில் வைத்துதான் சிகிச்சையளித்தனர். இதனால் சிங்கள மக்களுக்குக் காயமடைந்த வீரர்கள் பற்றிய விவரம் தெரியவந்து, அவர்களிடையே அதிருப்தி அதிகரிக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட இலங்கை அரசு, இப்போது காயமடைந்த வீரர்களை வவுனியா மற்றும் மன்னாரில் உள்ள மருத்துவமனைகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கிறது. போரில் கால்களை இழந்த சிங்கள வீரர் ஒருவர் மருத்துவமனையில் இருந்த தமிழர் ஒருவரிடம், ''புலிகளால் தகர்க்கப்பட்ட பாலம் ஒன்றைக் காவல் காக்கவேண்டும் என்று சொல்லித் தான் என்னை அழைத்து வந்தார்கள். ஆனால், போர் முனையில் தள்ளிவிட்டு விட்டார்கள்'' என்று, தான் ஏமாற்றப்பட்டதைக் கூறியிருக்கிறார். இன்னொரு வீரர், தான் எங்கே இருக்கிறேன் என்று விசாரித்திருக்கிறார். இடத்தைச் சொன்னதும் தலையில் அடித்துக்கொண்டு, ''எங்களையெல்லாம் பதுல்லாவுக்கு அனுப்புவதாகச் சொல்லித்தான் அழைத்து வந்தார்கள். இப்படி ஏமாற்றி விட்டார்களே'' என்று அழுதிருக்கிறார்.
காயமடைந்துள்ள சிங்கள ராணுவ வீரர்களில் பெரும்பாலோர் பதினெட்டு வயதுக்கும் குறைவான வர்கள் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. அனுராத புரத்தில் பணியாற்றும் பௌத்த பெண்கள் குழுவினர் கூறியுள்ள தகவலின்படி கை, கால்களை இழந்த நூற்றுக் கணக்கான சிங்கள ராணுவத்தினர் அனுராதபுரம் மற்றும் பொலனுருவ போன்ற எல்லைப்புற மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நிலைமை வெளியே தெரிந்தால், ராணுவத்துக்குப் புதிதாக ஆட்கள் கிடைப்பது கஷ்டமாகிவிடும் என்ப தால் இப்படியரு ஏற்பாடு.
சிங்கள ராணுவ வீரர்கள் படையைவிட்டுத் தப்பித்து ஓடுவது அதிகரித்திருப்பதாக சிங்கள வாரப் பத்திரிகையான 'ராவய' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 9,500 ராணுவ வீரர்கள் இப்படி தப்பித்து ஓடியிருப்பதாகவும், மோதல் மீண்டும் ஆரம்பித்ததற்குப் பிறகு சுமார் இருபத்தைந்தாயிரம் வீரர்கள் படையைவிட்டு ஓடியிருக்கிறார்கள் எனவும் அது கூறியுள்ளது. இதை இலங்கை அரசு மறுத்த போதிலும், ராணுவத் தரப்பின் பேச்சாளர் ஒருவர் உறுதிப் படுத்திய தகவலின்படி 2008 ஜனவரி வரை சுமார் பதினைந்தாயிரம் பேர் படையில் இருந்து ஓடிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு இலங்கை அரசு ஒரு யுக்தியைக் கையாளுகிறது. பேருந்துகளை ராணுவ செக்போஸ்ட்களில் தடுத்து நிறுத்துவார்கள். பஸ்ஸில் ஏறி, அதில் ராணுவத்துக்குப் பொருத்தமான இளைஞர்கள் இருந்தால், அவர்களைப் பிடித்துச் செல்வார்கள். இந்த ஆண்டு அக்டோபர் 1&ம் தேதி முதல் இப்படித்தான் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் பதினான்காயிரம் புதிய ராணுவ வீரர்களைப் படையில் சேர்ப்பதற்கு இலங்கை அரசு திட்ட மிட்டுள்ளது.
போர் நடக்கும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக வரும் தமிழர்கள் தங்குவதற்கு, மன்னார் மாவட்டத்தில் முருங்கனுக்கு அருகில் கள்ளிமோடை, சிறுகண்டல் ஆகியஇடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை திறந்தவெளி சிறைச்சாலைகளாகவேஇருக்கின்றன. அங்கே கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், குளிக்கக்கூட முகாமுக்கு வெளியில்தான் செல்லவேண்டும். அப்படி ஒருவர் குளிக்கச் செல்லும்போது, தனக்குப் பதிலாகப் பிணைக்கு ஒருவரை ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டுத்தான் போகவேண்டும். அந்த முகாம்களுக்கு சென்றுவிட்டால், அண்மையில் உள்ள உறவினர்களைக்கூட சென்று பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. அங்கிருந்து வெளிநாட்டுக்கும் போகமுடியாது. கடுமையான ஒடுக்குமுறையின் காரணத்தால், அங்குள்ள தமிழர்கள் பலர் மனநோயாளிகளாகி விட்டார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு எந்த ஏற்பாடும் செய்யப்பட வில்லை.
தமிழ் மக்களிடையே பணியாற்றிக் கொண்டி ருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், இலங்கை அரசால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்! யுனிசெஃப் அமைப்பினர்மீது ஜெ.வி.பி&யினர் நடத்திய தாக்குத லின் காரணமாக, அவர்கள் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஐ.நா. அமைப்பின் பிரதிநிதிகளும் இப்படித்தான் வெளியேற்றப்பட்டனர். அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கோர்டன் வெய்ஸ், ''மனிதாபிமான அடிப்படையில் வேலைசெய்யும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆனால், அந்த அரசாங்கமே எங்களை வெளியேறச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை'' என்று கூறியுள்ளார். ஐ.நா. சபையின் பிரதிநிதிகளையே பாதுகாக்க முடியாத இலங்கை அரசு, அங்குள்ள தமிழர்களை எப்படிப் பாதுகாக்கும்?
போர் என்பது வன்முறையை மட்டுமல்ல, ஊழலையும் பெருகச் செய்கிறது. இலங்கையில் இப்போது எதற்கும் கணக்குவழக்கு கிடையாது. ஆட்சியில் இருப்பவர்கள் இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமாகக் கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வசதியாக, ராணுவப் பொறுப்புகளில் இலங்கை அதிபர் தன்னுடைய குடும்பத்தினரையே நியமித்து வைத் திருக்கிறார். அதிபருக்கு ஆலோசகராக இருப்பவர், அவருடைய சகோதரர் பஸில் ராஜபக்ஷே. பாதுகாப்புத்துறை செயலாளராக இருப்பவர், அவருடைய இன்னொரு சகோதரரான கொத்தபாய ராஜபக்ஷே. இப்படி இலங்கை அரசாங்கமே இப்போது ராஜபக்ஷேவின் குடும்பத்தின் கையில்தான் இருக்கிறது. இதனால் சிவில் நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிக்கப்பட்டு, ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் சந்திரிகாதான். ராணுவ துணை அமைச்சராகத் தன்னுடைய மாமாவை அவர் நியமித்தார். அதுமட்டுமல்லாமல், சிவில் பதவியான அமைச்சர் பதவியை வகித்த அவர் ராணுவ உடுப்பை அணிந்துகொள்வதற்கு சந்திரிகா அனுமதித்தார். அதன் நீட்சியாகத்தான் இப்போது ராஜபக்ஷே குடும்பத்தின் கையில் அரசாங்கம் போயிருக்கிறது.
இலங்கையில் தற்போது சிவில் உரிமைகள் எதுவும் கிடையாது. அதுவொரு ராணுவ அரசாக மாறிவிட்டது. முந்தைய கால நடைமுறைக்கு மாறாக, இப்போது ராணுவ அமைச்சகமே போர் குறித்த அனைத்து முடிவுகளையும் கட்டுப்படுத்துகிறது. இலங்கை அமைச்சரவையில் இப்போது 100&க்கும் அதிகமான அமைச்சர்கள் உள்ளனர். அவர்களுக்கு அதிகாரம் எதுவுமில்லை. இலங்கை நாடாளுமன்றம் எப்போதோ தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. இன்று ராணுவமும், அதிபரும்தான் இலங்கையின் அதிகார மையங்களாக உள்ளனர். எனவே, சிறுபான்மைத் தமிழர்களுக்கு அங்கே எந்தவொரு அதிகாரப்பகிர்வும் ராணுவத்தால் அனுமதிக்கப்படாது என்பது வெளிப்படை.
'இந்தச் சூழலில் மத்திய அரசு அளிப்பதாகக் கூறியுள்ள 800 டன் உணவுப் பொருட்களும் இப்போது தமிழக முதல்வரால் திரட்டப்படும் நிதியும் இலங்கையில் அல்லலுறும் தமிழ் மக்களுக்குச் சென்று சேருமா? அங்கே நடக்கிற யுத்தம் முடிவுக்கு வருமா?' என்ற கவலை எழுந்துள்ளது. இலங்கை அரசின் வெற்று வாக்குறுதிகளை நம்பாமல், அங்கே போர்நிறுத்தம் செய்வதற்கு இந்தியா தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தத்தைத் தமிழக முதல்வர் ஏற்படுத்த வேண்டும்.
நன்றி: ஜூனியர் விகடன், Nov 05, 2008
Comments