இலங்கையில் போர் நிறுத்தம் செய்யமாட்டோம்; ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்' என்று, இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே கொக்கரித்துவிட்டுச் சென்றார். இலங்கையில் மட்டுமல்ல; தமிழகத்திலும் தமிழினத்துக்கு எதிரான சதி வேலைகளில் சிங்கள அரசு ஈடுபட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை, ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகளும் தன்னார்வ அமைப்புகளும் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிங்கள அரசு உண்மையில் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறதா? என்கிற கேள்வியோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்தோம். அப்போது, மதுரையில் டிச. 26-ம் தேதி நடக்க இருந்த தமிழீழ அங்கீகார மாநாட்டிற்கான அனுமதி மறுக்கப்பட்ட தகவல் அவருக்கு வந்து சேர்ந்தது. அதுபற்றி தன் கட்சி நிர்வாகிகளுடன் சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு நம்மை ஏறிட்டார், திருமா.
``இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக, தனது மகன் மகிந்த, மகள் சங்கமித்ரா ஆகியோரை அசோகர் அனுப்பி வைத்தார். அந்த மண்ணில் இருந்து பௌத்தத்திற்குப் பதிலாக, மனிதநேயமற்ற வன்முறை வெறியாட்டம் போடும் சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷே, துரோகத்தை வளர்ப்பதற்கு இலங்கைத் தூதரகம் மூலம் ஆள் அனுப்பியிருக்கிறார். அந்த நபர்தான் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அதிகாரி அம்சா'' என்றவரிடம் கேள்விகளை முன் வைத்தோம்.
அம்சா அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
``சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரி அம்சாவின் முழு நேரப் பணி, ராஜபக்ஷேவின் தமிழின அவதூறு பிரசாரங்களையும், பொய்ச் செய்திகளையும் முழுமூச்சாக இங்கு பரப்புவதுதான்.
இதற்கு முன்பு வந்த பல சிங்கள அதிபர்கள் ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டாலும், தமிழகத்தில் பொய்ச் செய்தியைப் பரப்பும் இழி செயலை யாரும் செய்ததில்லை. ஆனால், அந்த இழி செயலைத்தான் தனது பலம் என்று ராஜபக்ஷே நம்புகிறார். `ஈழத் தமிழர்களைச் சீண்டுவதில்லை; புலிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம்' என்ற அப்பட்டமான பொய்ச் செய்தியை தமிழ்நாட்டுத் தமிழர்களையும், இந்திய அரசையும் நம்ப வைக்கும் மகிந்த ராஜபக்ஷேவின் எடுபிடியாகவே அம்சா செயல்படுகிறார்!''
எதை வைத்து தூதரக அதிகாரி அம்சா மீது இப்படியொரு குற்றச்சாட்டைச் சுமத்துகிறீர்கள்?
``காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரையும், சில ஊடகங்களையும் இதுபோன்ற அவதூறு பிரசாரங்களுக்கு அம்சா பயன்படுத்துகிறார் என்பதுதான் எங்களின் குற்றச்சாட்டு. நட்சத்திர விடுதிகளில் அவர்களுக்கு மது விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தனது சட்டபூர்வமான கடமையில் இருந்து விலகி, தமிழினத்தைச் சிதைக்கும் வேலையில், துரோகத்தை வளர்க்கும் வேலையில் அம்சா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
எனவே, சென்னையில் இயங்கும் இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாட்டை விட்டே அப்புறப்படுத்த வேண்டும். அதுவரையிலும், அம்சாவின் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்'' என்றவர், சில விநாடி யோசனைக்குப் பின், ``அதுமட்டும் போதாது. அம்சா மூலமாக சிங்கள அரசோடு தொடர்பும், சட்டவிரோதமான உறவும் வைத்திருக்கிற நபர்களையும் அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஞானசேகரன் (வேலூர்), அசன் அலி (ராமநாதபுரம்) போன்றவர்கள் சிங்கள அரசின் உளவாளிகளாகச் செயல்படுகின்றனர். இந்தியாவில் இருந்தபடி இந்தியாவின் இறையாண்மையை மீறி இன்னொரு நாட்டு அதிபர் ராஜபக்ஷேவுடன் கொஞ்சிக் குலாவி வரும் ஞானசேகரன், அசன் அலி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்துவது அவசியம்!''
தூதரக அதிகாரி அம்சா மீதான இக்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கின்றனவா?
`` `தமிழகத்தின் பார்வையில் விடுதலைப் புலிகள்' (LTTE in the eyes of tamilnadu) என்ற புத்தகத்தை இலங்கை வெளியுறவுத் துறை அண்மையில் வெளியிட்டது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு முரணான, அப்பட்டமான பொய்ச் செய்திகளைப் பரப்புகிற வகையில் இதுபோன்ற சில வெளியீடுகளைக் கொண்டு வந்து, அதை இலவசமாக அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களிடம் வழங்குகிற பணியையும் அம்சா மேற்கொண்டார்; தொடர்ந்து அதைச் செய்து வருகிறார். அந்தப் புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இனி இலங்கைத் தூதரகத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்றும் போராட்டமும் வலுவடையும்!''
ஈழத்தில் வசிக்கும் இஸ்லாமியத் தமிழர்களை விடுதலைப் புலிகளே சுட்டுக் கொல்வதாக, அசன் அலி போன்றோர் குற்றம் சுமத்துகிறார்களே?
``இஸ்லாமியர்களை தமிழ் தேசிய இனத்தின் ஓர் அங்கமாகவே புலிகள் கருதுகிறார்கள். மதவாத அடிப்படையில் புலிகள் என்றுமே செயல்பட்டது கிடையாது. இலங்கையில் வடக்கு_கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற அனைவருக்குமான விடுதலைப் போராட்டத்தில்தான் புலிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பௌத்த-இந்து மதத்துக்கு இடையிலான போராக அதை உயர்த்திப் பிடிக்கக் கூடாது. உண்மையிலேயே இந்துத்துவா உணர்வோடு புலிகள் இருந்திருந்தால் வாஜ்பாய், அத்வானி, ராம கோபாலன் ஆகியோரை தங்களுக்கு ஆதரவாகச் செயல்படும்படி கேட்டிருப்பார்கள். மதவாத அணுகுமுறையை புலிகள் என்றைக்குமே கையாண்டது கிடையாது. மோதலில் இஸ்லாமியர்கள் அல்லாத தமிழர்கள் கூட பலியாகி இருக்கிறார்கள். பெரியவர் அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் ஆகியோரும் தமிழினத் தலைவர்கள் தான். இருந்தாலும், மோதலில் அவர்களும் பலியாக நேரிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது'' என்று முடித்துக் கொண்டார், திருமாவளவன்.
படங்கள்: மீடியா ராமு, ஞானமணி.
ஸீ வே.வெற்றிவேல்
``இலங்கை நலனை தமிழ்நாட்டில் பேணும் முயற்சி!''
- துணைத் தூதர்
திருமாவளவனின் குற்றச்சாட்டு குறித்து, தென்னிந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் பி.எம்.அம்சாவை, தூதரக அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். ``ஆதாரமற்ற, அடிப்படை அற்ற இக்குற்றச்சாட்டுகளை முற்றும் முழுவதுமாக மறுக்கிறோம். ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மரபுகளுக்கு இணக்கமாகவும், இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அமைவாகவும், இலங்கையின் நலனை தமிழ்நாட்டில் பேணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இம்முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வோம்'' என்றார் அம்சா.
Comments