தமிழ்ப் பகுதிகளில் படையினரால் மீட்கப்படும் பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் நீதி அமைச்சர் டிலான் பெரேரா. நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அமைச்சர் மேற்படி கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
பூநகரி, படைத்தரப்பின் வசம் வந்துவிட்டதான தகவல் வெளிவந்த கையோடு அவர் இந்தக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
நீதி அமைச்சரின் இந்தக் கருத்து அரசாங்க உயர்மட்டத்தின் காதில் ஏறுமா என்பது சந்தேகத்துக்கு உரியது. அதனைவிடவும் இந்த நடைமுறையால் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்குக் கிடைத்துவிடும், கைக்கு வந்துசேரும் என்பது அசாத்தியம். நினைத்தும் பார்க்கமுடியாத ஒரு விடயம். அதுநிற்க.
படையினரால் மீட்கப்படும் பகுதிகளில் ஜனநாயகம் என்ற போர்வையுடன் எதேச்சாதிகாரமும், அரசாங்கத்தின் கையாள்களின் அட்டூழய நிர்வாகமும் நடைபெறுவதுதான் இந்த நாட்டின் வழமை.
அதற்குப் புறம்பாக, மேலதிகமாக, பாதுகாப்புக் காரணங்கள் என்ற முத்திரையுடனும், சிவில் நிர்வாகத்துக்கு உதவுதல் என்ற பெயரிலும் இராணுவ நிர்வாகம் நடைபெறுவதையே கண்கூடாகப் பார்க்கிறோம்.
1995இல் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் இந்த நிலையே தொடர்கிறது. கிழக்கைப் படையினர் மீட்டு, தேர்தல் நடத்தி அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டோம் என்று மஹிந்த அரசு உலகத்துக்குப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், அங்கு ஜனநாயகம் என்ற பெயர்ப்பலகைக்குப் பின்னால் இராணுவ ஆட்சிதான் நடைபெறுகிறது.
இந்தப் "பொட்டுக்கேட்டை" தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெள்ளிக்கிழமை - நீதி அமைச்சர் தமது கருத்தை வெளியிடுவதற்கு முதல்நாள் - அதே நாடாளுமன்றில் அம்பலப்படுத்தி இருந்தார். கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன என்பதனை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துக் காட்டினார்.
தமிழ் மக்களை அகதிமுகாம்களுக்கு அனுப்பிவிட்டு அவர்களின் காணிகள் அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தினார்.
தமிழ் மக்களை மீட்டெடுப்பதாகக் கூறிக்கொண்டு அரசு - இராணுவம் - தமிழ் மக்களை வீட்டைவிட்டு விரட்டி மரநிழல்களில் வாழ வைத்துவிட்டு அவர்களை அவலமுற வைக்கும் அக்கிரமத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளையும் உதாரணம் காண்பித்தார்.
இந்த இலட்சணத்தில், நீதி அமைச்சர் டிலான் பெரேராவின் யோசனை - படையினரால் மீட்கப்படும் பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரம் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை - தமிழர்களின் வாழ்வைச் சீரழிப்பது மட்டுமன்றி அவர்களின் அபிலாசைகளை, பிரதான உரிமைகளை ஒருபோதும் வழங்கமாட்டாது.
இன்னும் 20 வருடங்களின் பின்னர் இப்போது சேவையில் உள்ள இராணுவத்தின் பிள்ளைகள் ஆயுதம் ஏந்தும் நிலையை உருவாக்கக்கூடாது என்றும் நீதி அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது எப்போது சாத்தியமாகும் அல்லது எவ்வாறு சாத்தியமாகும்?
தமிழ் மக்கள் தங்களுக்குரிய சகல உரிமைகளுடனும் தம்மைத் தாமே ஆளும் பூரண சுயாட்சியைப் பெற்றால் மட்டுமே நீதி அமைச்சர் கூறுவது சாத்தியமாகும்.
தமிழர்களின் உரிமைகளில் சிறு துரும்பைக்கூட வழங்க மனமில்லாத தென்னிலங்கை அரசியல்வாதிகள், டிலானின் விருப்பம் நிறைவேற ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டார்கள்
ஏனெனில், இப்போது தெற்கில் அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் எல்லோரும் இனவாதம், சிங்களப் பேரினவாதம் என்ற கடலில் குளித்து வந்தவர்களே.
அவர்கள் எந்தக் கட்சியை அல்லது எந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்று நிறம்பூசிப் பார்க்க வேண்டிய தேவையே இல்லை. அவர்கள் வளர்ந்த அரசியல் சூழல், அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து வரும் அரசியல் என்பன சந்ததி சந்ததியாக ஒரே பேரினவாதக் குட்டைதான்.
ஆகையால் நீதி அமைச்சரின் நன்நோக்கத்துடன் கூடிய மேற்கண்ட கருத்தும் அடிபட்டுப் போகிறது; போகும் என்பதே நிச்சயம், நிச்சயம்!
சற்று உள்ளூர்ந்து பார்ப்போமாயின் -
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையோ, வாழ்வாதார மேம்பாட்டுக்கான இலக்குகளையோ, அடைவதற்கு வகை செய்யக்கூடிய இணைப்பாட்சி அரசியல் முறையைத்தானும் தொட்டும் பார்க்க விரும்பாத திமிர்த்தனமுள்ள சிங்கள அரசியல்வாதிகள் -
தமிழர்களின் பிரிக்கமுடியாத பிறப்புரிமைகளை வழங்குவர் என்று எவ்விதம் எதிர்பார்ப்பது? தட்டிக்கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டம் நடத்துவார் என்பது வெறும் வாசகம் அல்ல.
கொழும்பு அரசுகள் அந்த வகை சார்ந்தவையே. நாட்டின் அரசாங்கம் என்ற ஜனநாயகப் பட்டையத்தைக் கையில் கட்டிக்கொண்டு, இறையாண்மை என்ற கடுக்கனையும் பூட்டிக்கொண்டு தமிழர்களின் உரிமைப் போராட்டம் குரோதமானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று நம்பவைத்து வருகிறது. இந்தக் கைங்கரியம் கடந்த பல தசாப்தங்களாகத் தொடர்கதையாகவ நீளுகிறது.
தமிழர்கள் தமக்குரிய உரிமைகளைக் கேட்பது நியாயமானது ஜனநாயகத்துக்கு உட்பட்டது என்பதனை மறைத்து, பிரசாரப் பீடிகையினால் கீழே போட்டு ஒளித்து வைப்பது கொழும்பு அரசுகளுக்குக் கைவந்த கலை. அதுவே பேரினவாதத்தின் சித்து விளையாட்டு!
இந்தச் சித்து வாண்மை மாறும்வரை, மாற்றப்படும்வரை இன்றைய நிலையே, சிக்கலே தொடரப்போகின்றது என்று சாமான்யனும் இலகுவில் கிரகித்துக்கொள்கிறான்.
கொழும்பு அரசுகளின் முகமூடி ஒரு காலத்தில் கழன்று விழும். சர்வதேசம் உண்மையைப் புரிந்துகொள்ளும். அது குறுகிய காலத்திலா, நீண்ட காலத்தின் பின்னரா என்பதை நியதியே முடிவு செய்யும்.
Comments