தாயக உறவுகளின் அவலங்களை வெளிப்படுத்தும் முகமாக விழிப்புணர்வு வாரம் கனடாவில் ஆரம்பமாகியது



தமிழர் தாயகத்தில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விழிப்புணர்வு வாரம் என்னும் வாரச் செயற்பாடுகள் இன்று முதல் கனடாவெங்கும் ஆரம்பமாகியுள்ளன.

கனடாவின் பல்கலாச்சார சமூகத்தினருக்கும், கனடிய அரசாங்கம், கொள்கை வகுப்பாளர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள், பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் கனடிய ஊடகங்கள் மத்தியலும் எமது மக்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் முகமாக இந்த வார நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், கனடாவினதும் சர்வதேசங்களினதும் கவனத்தை ஈர்த்து அதன் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தத்தினைப் பிரயோகித்து - தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தொடண்டர் நிறுவனங்கள் அங்கு மீளச் சென்று மக்களின் இன்னல்களைத் துடைப்பதற்கு வழி அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வார நிகழ்வுகள் பற்றிய திட்ட விளக்கக் கூட்டமும் ஆரம்ப நிகழ்வும், கனடா கந்த சுவாமி கோவில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இரண்டாம் திகதி முதல் எதிர்வரும் ஒன்பதாம் திகதிவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள், அவற்றிற்கான பங்களிப்புகள் பற்றி கனடிய இளையோர் மற்றும் பொதமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வுநிலையை வெளிக்கொண்டு வருவதற்கான இந்த வாரச் செயற்பாடுகளுக்கு அதிகளவிலான செயற்திறன் கொண்டவர்கள் தேவைப்படுகின்றார்கள் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஈழத்தில் இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்கு ஆதரவாக கனேடிய தமிழர்களால் முன்னெடுக்கப்படும் மிக முக்கிய செயற்பாடாக இந்த வாரச் செயற்பாடுகள் அமையவுள்ளன.

இதன் முதற்கட்டமாக திங்கட்கிழமை (3-11-2008) கனடிய ஊடகங்களுடனான சந்திப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், செவ்வாய்க்கிழமையன்று (4-11-2008)கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்களும், புதன்கிழமையன்று (5-11-2008) 72 மணித்தியால உண்ணாநிலைப் போராட்டமும் நிகழவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

Comments