மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர்- தளபதிகள் முதன்மைச் சுடரேற்றி வணக்கம்



தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களும் முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர் நாள் உரையை இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5:40 நிமிடத்துக்கு நிகழ்த்தினார்.

தொடர்ந்து மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றும் தூயவேளை 6.05 நிமிடத்துக்கு நினைவொலி எழுப்பல் மூலம் தொடங்கியது.

எங்கும் எழுப்பப்பட்ட நினைவொலியில் மாவீரர்களின் வீரம் ஒலித்து தாய் மண்ணை நிரப்பியது.


தொடர்ந்து 6.06 நிமிடத்துக்கு மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

6.07 நிமிடத்துக்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் மாவீரர்களுக்கான முதன்மைச்சுடரை ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

சமவேளையில் மாவீரர் துயிலுமில்லங்கள், மாதிரி மாவீரர் துயிலுமில்லங்கள், மாவீரர் மண்டபங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.

அதேவேளை, மக்களும் சுடர்களை ஏற்றி எங்கள் தாயக விடுதலைக்காக தம்மை ஈந்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

மக்களின் வீடுகளிலும் சுடர்களை ஏற்றப்பட்டன. சிறிலங்கா படை வல்வளைப்புப் பகுதிகளில் மக்கள் தமது அகங்களில் சுடர்களை ஏற்றினர்.

இதேவேளை, புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மாவீரர்களுக்கு நினைவொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்கள் ஏற்றப்பட்டன.


அம்பாறை மாவட்டத்தில்...

அம்பாறை மாவட்டம் பொத்துவில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடமொன்றில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.

அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி கேணல் ராம் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.

கஞ்சிகுடிச்சாறு பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட இடமொன்றில் அம்பாறை மாவட்ட தளபதி நகுலன் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில்...

மட்டக்களப்பில் தரவை துயிலுமில்லத்துக்கு தளபதி உமாராம்

தாண்டியடி துயிலுமில்லத்துக்கு மாவடி மும்மாரிக் கோட்ட படையப் பொறுப்பாளர் கலைமருதன்

மாவடி மும்மாரியில் மாவடி மும்மாரிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் பொன்மதன்

வாகரைப்பகுதியில் ஆண்டாங்குளம் துயிலுமில்லத்துக்கு ஆண்டான்குளம் கோட்டப் படையப் பொறுப்பாளர் புஸ்பன்

கரடியனாற்றுப் பகுதியில் கரடியனாற்று கோட்ட படையப் பொறுப்பாளர் மோகன்

ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.



வன்னியில்...

கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் தீபன்

விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத்தளபதி கீர்த்தி

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் சொர்ணம்

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத்தளபதி பூரணி

உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம்

முல்லைத்தீவு கடலில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை

வட்டக்கச்சி மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள்

கண்டாவளை மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி சிறப்புத்தளபதி விமல்

உடையார்கட்டு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் படைய தொடக்கப் பயிற்சிக்கல்லூரி சிறப்புத்தளபதி கேணல் ஆதவன்

புதுக்குடியிருப்பு மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழ்க்குமரன்

ஒட்டுசுட்டான் மாதிரி மாவீரர் துயிலுமில்லத்தில் தளபதி கேணல் ஜெயம்

மட்டக்களப்பு-அம்பாறை மாவீரர் மண்டபத்தில் ஜெயந்தன் படையணி ஆளுகைப் பொறுப்பாளர் பவான்

இம்ரான்-பாண்டியன் படையணி மாவீரர் மண்டபத்தில் கிளிநொச்சி கட்டளைத்தளபதி வேலவன்

லெப். கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி மாவீரர் மண்டபத்தில் படையணி நிர்வாகப் பொறுப்பாளர் கலைச்செல்வன்

ஆகியோர் முதன்மைச்சுடர்களை ஏற்றினர்.


சிறிலங்கா படை வல்வளைப்பால் தமது மண்ணை இழந்து இடம்பெயர்ந்த மக்கள் மாதிரி மாவீரர் துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்காக உணர்வெழுச்சியுடன் சுடர்களை ஏற்றி வழிபட்டனர்.

தாய்மண்ணில் தமது உறவுகளுக்கு சுடர்களை ஏற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்து அவர்கள் மாவீரர்களின் உணர்வில் கலந்திருந்தனர்.

சுடர்களின் ஒளியில் மாவீரர்களின் ஈகம் சுடர்விட்டது.

கிளிநொச்சி நகரினை இன்று கைப்பற்றி தமது சிங்கக்கொடியினை ஏற்றுவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு திடசங்கற்பம் பூண்டு கடந்த சில நாட்களாக கடுமையாக பல முன்நகர்வு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

இம் முயற்சிகள் யாவற்றினையும் விடுதலைப் புலிகள் முறியடித்து புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் தீபன் கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் முதன்மைச் சுடரினை ஏற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments