தமிழகத் திரையுலகத் தமிழரே- ஈழத்தமிழரின் நம்பிக்கை நட்சத்திரங்கள்!



முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழினம் இனவெறிச் சிங்களத்தின் போர் வெறியில் சிக்கி அழிந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் முழு இலங்கையும் உள்ளாகும் வரை தமிழரின் நாடும் அரசும் ஆட்சியும் தமிழர் கையிலேதான் இருந்தது. சிங்களவரின் நாடும் அரசும் வேறாகவும் தமிழரின் நாடும் ஆட்சியும் வேறாகவும் இருந்து வந்துள்ளன.

இரு இனங்களும் தன்னாட்சியும் இறையாட்சியும் கொண்டு பல நூறு ஆண்டுகளாக இருந்தன என்பது வரலாற்றில் பதிவான உண்மைகளாகும். சர்வ தேச நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் பெற்ற உண்மை நிலைப்பாடுகள் இவை. 1833ல் பிரித்தானிய அரசு தமிழர் தரப்புப் பகுதிகளைத் தனது ஆட்சி வசதிகளுக்காக ஒன்றாக்கியும் பின்னர் பல தடவைகள் வெட்டியும் ஒட்டியும் சிங்கள தேசத்துடன் தமிழர் நிலங்களை இணைத்தும் கொண்டது.

அப்படி ஒன்றாக இருந்த தமிழர் பிரதேசததின் ஒரு பகுதியை வடக்கு மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் ஏற்பட்டதே இந்த இரண்டு மாகாணங்களும். தமிழர்களின் நிலத்தைப் பறித்து எடுத்தவரோ போர் மூலம் நாட்டைப் பறித்த வல்லாதிக்க பிரித்தானிய அரசு. தான் பறித்த நிலத்தை அதன் சொந்தக்காரரான தமிழரிடமே திரும்பக் கொடுக்காது தமிழரின் நிலத்தை மற்றொரு இனமான சிங்களத்திடமே பிரித்தானியா கொடுத்தது.


கடந்த 60 ஆண்டுகளாக ஈழத் தமிழர் எடுத்த பல்வேறு அரசியல் நடவடிக்கையால் உருவாகிய மிகப் பெரும் சக்தியான தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனதாக்கிக் கொண்ட தன்னலக் காரனின் சுயநலத்தால் தமிழினம் மானம் இழந்து பேச்சிழந்து மூச்சிழந்து தவிக்கிறது.

1977ல் எழுப்பப் பட்ட சுயநிர்ணயக் குரல் இன்று நசுக்கப் பட்டுக் கிடக்கிறது. தமிழர் தரப்பு நியாயங்களை உலக அளவில் தலை எடுக்கவிடாது இந்தியா செய்ததில் இவையெல்லாம் சிங்களத்துக்கு மிகப் பெரும் வசதிகளை ஏற்படுத்திவிட்டன. எனவேதான் வரலாற்றில் எமக்குப் பின்னால் இலங்கையில் உருவான சிங்கள இனமே நம்மை வந்தேறு குடிகள் என்றும் எமக்கு தேசியமோ இறையாண்மையோ கிடையாது எனக் கூரைமேல் ஏறிக் கத்துகிறது.

தமிழன் நிலத்தைப் பறித்தது மட்டும் அல்லாது இன்று அந்தத் தமிழ் இனத்துக்கு பிரதேசமோ இறை ஆண்மையோ கிடையாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? ஈழத் தமிழரைப் போலவே பிரித்தானிய அரசால் இந்தியாவும் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் விடுதலை பெற்றது. இன்று இந்திய அரசே எமக்கு இறையாண்மை இல்லை எனக் கூறுவதையும் அதனை உலக அளவில் நமக்கு எதிராகப் பரப்புரை செய்வதையும் எவரால் மன்னிக்க முடியும்? அதற்கும் மேலாக இந்தியா கடந்த பல வருடங்களாக எமது சுயாதிக்கத்தையும் இறை யாண்மையையும் மூர்க்கமாக மறுதலிப்பதோடு சிங்களத்தின் தமிழின அழிப்புப் போரில் பெருமளவு வளங்களும் வசதிகளும் வழங்கி ஈழத் தமிழின அழிப்பைச் செய்கிறது. இதற்குத் தமிழகத் தமிழரின் மாநில அரசே இந்திய மத்திய அரசில் பங்காளியாக இருந்து -ஈழத்தமிழனை அழிக்க உதவும் இழி நிலையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது.

இலங்கை அரசின் தமிழின அழிப்புக்கு இந்தியத் தமிழர் தயவில் பதவியில் இருந்து ஆட்சி செய்யும் இந்திய மத்திய அரசு முழு ஆதரவு கொடுக்கும் கேவலத்தைச் செய்கிறது. தமிழகத் தமிழரின் மாநில அரசும் தமிழர் ஆதரவுடன் ஆட்சி செய்யும் மத்திய அரசும் சிங்களம் செய்யும் ஈழத் தமிழின அழிவுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் கொடுக்கும் ஆதரவால் சிங்களம் உலக நாடுகளின் உண்மையான நேர்மையான விமர்சனங்களையும் வெறித்தனமாகக் கண்டிக்கிறது. தலைகால் புரியாமல் தமிழின அழிப்பைத் தொடருகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் தமிழ்நாடு என்றாலும் கருணாநிதி என்றாலும் தொடை நடுங்கி நின்ற சிங்களம் இன்று தொடையைத் தட்டிச் சவால் விடுக்கிறது. கலைஞரின் இயலாமை தெரிந்து இன்று அவரைத் தனது விருந்தாளியாகக் கொழும்புக்கு அழைக்கிறது. தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் சிங்களம் இழுக்கும் பக்கம் எல்லாம் இழுபடுவதும், அது போடும் தாளத்துக்கு எல்லாம் ஆடுவதும் ஒரு பிராந்தியப் பேரரசின் பேமாளித் தனமாகவே தெரிகிறது.

இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழ் இனத்தின் மானத்தையும் உயிரையும் காக்கும் பலம் கொண்ட சக்தியாக திரைப் படக் கலைஞர்கள் நடிகர்கள் முன் வந்திருப்பது எமக்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. இத் தருணத்தில் கேட்பாரற்றுக் கோள்வியும் அற்றுத் தவித்திருந்த ஈழத் தமிழர் பிரச்சினையை அகில இந்திய அளவில் கவனத்துக்குக் கொண்டு வந்த இந்திய கம்மியூனிசக் கட்சியின் முன்மாதிரி எமக்கு அளவற்ற நிம்மதியை தருகிறது, தமிழகத் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் மட்டுமே நிலவிய கடுமையான பொடாச் சட்ட விதிகளின் அழுத்தத்தை கம்மியூனிஸ்ட் கட்சியின் வரவு இலகு படுத்தியதுடன் எமது பிரச்சினை அகில இந்திய அளவில் பார்க்கப் படவும் வழி சமைத்தது. நான் நீ எனப் பங்கு போட வந்த தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு பெரிய கட்சிகளும் வரப் போகும் தேர்தலில் தமது ஓட்டுப் பெட்டிகளை நிரப்புவதில் கவனமாய் இருந்து தமது காய் நகர்த்தல்களில் ஈடுபட்டன.

இதிலே வை.கோ., கண்ணப்பன் மற்றும் பல தொண்டர்களும் இயக்குநர்கள் சீமானும் அமீரும் சிறையில் போடும் அளவுக்கு அரசியல் சின்னத் தனங்கள் தமிழகத்தில் ஈழத் தமிழினத்தின் பேரால் அரங்கேறின. சட்டவாளர்களும் கலாசாலை மாணவர்களும் மற்றும் மிகப் பெரிய மக்கள் உணர்வலையும் கண்டு மத்திய மாநில அரசுகள் அரண்டு போயின. அதே நேரம் பழுத்த அரசியல் சாணக்கியன் எனப் பேசப்படும் கலைஞரோ மக்கள் அலை தமது கை விட்டுப் போக விடாதபடி பதவி விலகல் கடித நாடகங்கள், தந்திகள், மனிதச் சங்கிலி என மாய வலை போட்டு மகிந்தவும் மன் மோகன் சிங்கும் மனம் கோணாமல் நடந்து கொண்டார். பசில் ராஜபக்ஷ வந்தார், பிரணாப் முகர்ஜி வந்தார். சிங்களம் தமிழனைக் கொல்லும் வரமும் வாங்கிப் போயினர், ஈழத் தமிழனுக்குக் கிடைத்ததோ மரண சாபம்! தமிழினம் போராடி நிற்பதோ தனது அடிமை விலங்கு ஒடிக்கும் உரிமைப் போர்.

சிங்களத்துக்கு போராடப் பலமும் பணமும் பயிற்சியும் கொடுத்த இந்திய மத்திய, மாநில அரசுகள் தமிழனுக்குப் போடுவதோ பிச்சை! அதுவும் காலில் போட்டு மிதிக்கும் சிங்களவன் காலடியில் ஓடேந்திப் பிச்சை ஏற்கும் சிறுப்பினையா எமக்கு எம் இரத்த உறவுகள் தரும் வரம்? உண்ணக் கட்டுச் சோறுக்கும் உண்டியல் காசுக்குமா எமது போராட்டம் தொடங்கியது?

தமிழகத் தமிழனின் நிலை தமிழகத்திலும் தமிழீழத்திலும் என்னவாக இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின வம்சாவழி வந்த ஒபாமா தலைமையில் ஒரு புதிய வரலாறு படைக்கப் பட்டுவிட்டது. ஆபிரிக்க நாடுகளில் விலங்குகள்போல் வேட்டையாடிப் பிடிக்கப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் பிணிக்கப்பட்டு கொத்தடிமையாக விற்கப்பட்ட கறுப்பின மக்களில் பிறந்த பராக் ஹ{செயின் ஒபாமா இன்று அமெரிக்காவில் ஒரு அரச அதிபராகத் தெரிவாகி உள்ளார். உலகம் இன்று மனிதப் பண்புகளின் உச்சத்துக்கு வந்து விட்டதையே ஒபாமாவின் தெரிவும் காட்டுகிறது.

ஒபாமாவை இஸ்லாமியன் என்றார்கள் கறுப்பன் என்றார்கள். ஆனால் எவரும் அவனுக்கு இறையாண்மை இல்லை என்றோ வெளிநாட்டவன் என்றோ தடை போடவில்லை. ஆனால் உலகின் பெரிய ஜனநாயகம் என்றும் ஆன்மீகத்தின் பிறப்பிடமான புண்ணிய தேசமாம் இந்தியா தமிழனை என்னவாகப் பார்க்கிறது? இலங்கையில் பூர்வீகமாகத் தோன்றிய தமிழினத்துக்கு - அங்கே வந்து குடியேறிய வழி தோன்றிய சிங்கள இனம் - இறையாண்மை இல்லையாம் என்கிறது. அதனையும் இந்திய மத்திய அரசு ஆமாப் போட, மாநில அரசும் ஆமாம்சாமி போடுகிறது.

இத்தகைய மாநில மத்திய தமிழின விரோத அரசுகளைத் தமிழ் மக்கள் தமது தலைமேலும் தோள் மேலும் சுமைதாங்கி போல் கல்லாகத் தாங்கி நிற்க வேண்டுமா என்பதனை இறுதியதாகவும் உறுதியாகவும் தீர்மானிக்கும் காலம் வந்து விட்டது. இதனைச் சரியான முறையில் நெறிப்படுத்தும் ஆழுமையும் ஆற்றலும் தமிழகத் திரையுலக கலைஞர்களிடமும் நடிகர்களிடமும் நிறையவே உள்ளது.

இதன் வெளிப்பாடாக வேதாரணியத்தில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா முன்னெடுத்து நடத்திய மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்க உணர்வு வெள்ளத்தால் கொழும்பையும் புதுடில்லியையும் சென்னையையும் உலுப்பிய சுனாமியை உலகமே கண்டது. அங்கு இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் ஆற்றிய உரைகள் அசந்து தூங்கிக் கிடந்த தமிழினத்தை விழித்தெழ வைத்தது. சிரிக்க வைத்து மகிழ்வித்த வைகைப்புயல் வடிவேலின் மனிதம் விட்ட கண்ணீர் கண்டவரையும் கேட்டவரையும் மனச்சாட்சிகளே சுட்டெரித்தன.

கொட்டும் பெருமழையிலும் கொள்கைக்காய் 60 கி.மீ. தூரத்துக்கு நீண்டு நின்ற தமிழகத் தமிழரின் மனிதச் சங்கிலியால் உலகமே தமிழினத்தை அண்ணாந்து பார்க்க வைத்தது. நவம்பர் 1ம் திகதி சென்னை நடிகர் சங்க வளாகத்தில் திரை உலக உள்ளங்கள் நடத்திய உண்ணா விரதப் போராட்டம் ஈழத் தமிழர் உள்ளத்தில் புதுத் தென்பைத் தருவதாக அமைந்தது. பல அச்சுறுத்தல் எச்சரிக்கைகளை மீறிய வகையில் மிகத் தீர்க்கமான கருத்தக்களை ஆணித் தரமாகத் தெரிவித்த உலக நாயகன் கமல்ஹாசன் , சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்,சத்தியராஜ், மன்சூர் அலிகான், மற்றும் மணிவண்ணன் உட்பட இந்நிகழ்வில் உடலாலும் உணர்வாலும் பங்கேற்ற அத்தனை அன்பு உள்ளங்களையும் காலம் எல்லாம் ஈழத் தமிழினம் நினைவில் வைத்திருக்கும்.

இவ்வளவு பலமிக்க திரையுலகப் பிரமுகர்களும் ஈழத் தமிழரின் விடுதலைக்கும் ஈழத் தமிழீழ தேசத்தின் அங்கீகாரத்துக்கும் தொடர்ந்தும் உழைப்பாலும் உணர்வாலும் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்பது எமது பேரவாவாக உள்ளது. இன்று அமெரிக்கக் கறுப்பின மக்கள் செய்த சாதனையை நாளை தமிழகத் தமிழினம் சாதித்து முடித்தால் மட்டுமே ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி தமிழ் மக்கள் மானத்தோடும் அமைதியோடும் வாழமுடியும். இதுவரை தமிழினம் தூங்கியது போதும் இனியும் விழிப்படையவில்லையெனில் தமிழன் என்ற இனம் பூண்டோடு அழியும் என்பது மட்டும் உறுதி. வாழ்வா சாவா என்பதை உலகத் தமிழினமே முடிவு செய்ய ஏற்ற தருணம் இது !

பத்மா

Comments