பெங்களூரில் ஈழத் தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு



இந்தியாவின் தென்மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தின் தலைநகரான பெங்களுரில் "ஈழத் தமிழர்களின் இன்றைய நிலை" எனும் தலைப்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கம் நடத்திய இப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 தொடக்கம் இரவு 9:00 மணிவரை பெங்களூர் தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது.

பெங்களூர் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கலந்துக் கொண்டு, சிங்கள அரசின் காட்டுமிராண்டித்தனத்தையும், இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறப்புரையாற்ற, தமிழக சட்டமன்ற முன்னாள் அவைத்தலைவரும், தமிழீழ ஆதரவாளருமான கவிஞர் புலமைப்பித்தன் நிறைவுரையாற்றினார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் தனது உரையில்,

தமிழீழத்தில் சிங்கள பேரினவாதத்தின் கொடூர போர் மற்றும் போரினால் ஈழத்தமிழர் படும் இன்னல்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும், தற்போது ஈழத்தில் சகோதர போர் என்ற பேச்சுக்கே இடமில்லை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சர் பதவிக்காக சிங்கள ஆட்சியாளர்களின் கால் நக்கி பிழைக்கும் டக்ளஸ் தேவானாந்தா தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.





ஒட்டுமொத்த ஈழத் தமிழினமே தங்களின் பிரதிநிதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளனர் என உரையாற்றினார்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் பெயரைக் குறிப்பிட்டு பேசியபோதேல்லாம், அரங்கில் கரவொலி அடங்க வெகுநேரமாகியது.

கவிஞர் புலமைப்பித்தன் தனது உரையில்,

சிறீமாவோ ஒப்பந்தம், கச்சதீவு ஒப்பந்தம் மற்றும் ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் என அனைத்து ஒப்பந்தங்களிலும் இந்தியாவின் பாதுகாப்பிற்காக தமிழினம் பலிக்கடா ஆக்கப்பட்டதை பட்டியலிட்டு பேசினார்.

மேலும், காந்தியாரை கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தடை நீக்கப்பட்டு,பாரதீய ஜனதாவாக உருமாற்றம் பெற்று ஆட்சியை பிடித்ததோடு, கோட்சேயின் குரு சாவர்க்கருக்கு இந்திய நாடாளுமன்றத்திலேயே படம் திறக்கப்பட்டபோது காங்கிரஸ்காரர்கள் எங்கே போனார்கள்?

இந்திரா காந்தியை கொன்ற சத்வந்த்சிங், பியாந்த் சிங் ஆகியோர் சீக்கிய இனத்தின் தியாக சீலர்களாக போற்றப்படுகின்றனர். அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங் பிரதமராகவும் உள்ளார்.

ராஜீவ் கொலையை மட்டும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று யாரை திருப்திபடுத்த கதராணிந்து இனமாற்றம் (Racial conversion) செய்துகொண்ட காங்கிரஸ்காரர்கள் கொக்கரிக்கின்றனர்?

பிரெஞ்சு அரச தலைவர் இந்தியாவிற்கு வந்த போது, சீக்கியர்களின் தலைப்பாகை பற்றி பேசும் மன்மோகன்சிங்கே, எங்கள் தமிழர்களின் தலைக்காக நாங்கள் குரல் கொடுப்பது தவறா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

கூட்டத்தின் இறுதி நிகழ்வாக, "எமக்காகவும் பேசுங்களேன்" எனும் இறுவட்டு காண்பிக்கப்பட்டது.

சிங்கள பேரினவாதத்தின் போர்க் கொடூரங்களை கண்டு கலங்கிய கண்களுடன் அரங்கை விட்டு மக்கள் வெளியேறினர்.


Comments