வடக்கில் போர்முனை எந்தப் பக்கம் திரும்பப் போகிறது? பூநகரிக்கு வந்துவிட்ட படையினர் அடுத்து எங்கு செல்லப் போகின்றனர்? அக்கராயன்குளத்தை தாண்டிவிட்ட படையினர்
எப்போது கிளிநொச்சி செல்வர்? கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து புறப்பட முனையும் படையினர் அடுத்த இலக்கை எப்படித் தாண்டப் போகின்றனர்?
மாங்குளம் சந்திக்கு வந்த படையினரின் அடுத்த இலக்கு என்ன? மணலாறில் முன்னேறும் படையினர் எங்கு நிற்கின்றனர்? என்ற கேள்விகளே அனைவராலும் எழுப்பப்படுகிறது.
வன்னியிலும் யாழ்.குடாவிலும் அனைத்து முனைகளிலும் கடும் சமர் நடைபெற்று வருகிறது. எல்லா முனைகளிலும் முன் னேறி புலிகள் வசமிருக்கும் ஏனைய பகுதிகளுக்குள்ளும் நுழைந்துவிட வேண்டுமென படைத்தரப்பு முனைப்புக் காட்டுகிறது. பாரிய ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றபோதும் ஆயுத பலத்தின் மூலம் வன்னிக்குள் ஏனைய பகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டுமென்று அரசும் படைத்தரப்பும் நினைக்கின்றன. இதனால் தான் வன்னிப் போரில், போரிடும் ஆற்றல்மிக்க படையணிகளெல்லாம் பேரிழப்புகளைச் சந்தித்து, - கூர் மழுங்கிச் சிதைந்து போயிருக்கும் நிலையிலும் புதிய புதிய படையணிகளைக் களமிறக்கியாவது இந்த யுத்தத்தில் வெற்றி பெற்று விட வேண்டுமென அரசு தீவிர அக்கறை காட்டுகிறது.
மன்னார் - பூநகரி வீதியில் (ஏ-32) முன்னேறிய படையினர் தங்கள் இலக்கை அடைந்து விட்டனர். தற்போது பூநகரியில் நிலைகொண்டுள்ள படையினர் சங்குப் பிட்டி - கேரதீவு கடல் பாதையூடாக யாழ். குடாநாட்டுடன் தொடர்புகளை மேற்கொண்டிருக்க வேண்டும். பூநகரி வரை வந்த படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்த யாழ்.குடாவிலும் படையினர் தயாராகவேயுள்ளனர். ஆனாலும் இதுவரை அவர்களால் இந்தக் கடல்வழிப் பாதையால் யாழ்.குடாநாட்டுக்குள் செல்ல முடியவில்லை. இதனால், பூநகரியிலிருந்து ஏ-9 வீதியிலுள்ள பரந்தன் சந்தி நோக்கி பாரிய முன்நகர்வை மேற்கொள்ள வேண்டிய படையினர், கிளாலி மற்றும் முகமாலை ஊடாக தெற்கு நோக்கி முன்நகர வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
பூநகரியைக் கைப்பற்றினாலும் பூநகரி - பரந்தன் வீதியை கைப்பற்றி பரந்தன் சந்திக்குச் சென்றால், பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு முதல் முகமாலை வரையான பகுதிகள் மோதல்கள் எதுவுமின்றி படையினர் கைகளில் விழ யாழ்.குடாநாட்டுக்கான ஏ-9 தரைவழிப் பாதையைத் திறக்க முடியும். இல்லையேல் பூநகரி ஊடாகச் செல்லும் சங்குப்பிட்டி -கேரதீவு கடல் பாதைக்கும் ஆபத்தேற்படும். இதனால்தான் பூநகரிக்குச் சென்று சங்குப்பிட்டியை அடைந்தும் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் கடல்வழியாகச் சென்று கேரதீவு ஊடான பாதையை படையினரால் திறக்க முடியாதுள்ளது. தற்போதைய நிலையில் இந்தக் கடல்வழிப் பாதைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்துள்ளது. ஆனையிறவுக்கு மேற்கேயுள்ள இந்தக் கடல் வழிப் பாதையை புலிகளால் தாக்க முடியும். இதனாலேயே, படையினர் பூநகரியைக் கைப்பற்றியும் சங்குப்பிட்டி - கேரதீவு கடல் பாதையைத் திறக்க தயக்கம் காட்டுகின்றனர். படையினர் இந்தப் பாதையைத் திறக்க வேண்டுமானால் முகமாலை முதல் பரந்தன் வரை நிலைகொண்டுள்ள விடுதலைப்புலிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் அதற்கு இரு வழிகள் உள்ளன. பூநகரியிலிருந்து பரந்தன் வீதியூடாக ஏ-9 வீதியிலுள்ள பரந்தன் சந்தியை நோக்கி முன்னேறுவது அதிலொன்று. மற்றையது, கிளாலி மற்றும் முகமாலைப் பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்கிருந்து தெற்கு நோக்கி முன்னேறி பளை, இயக்கச்சி, ஆனையிறவு பின்னர் பரந்தனைக் கைப்பற்றுவது. இதில் எந்தப் பாதையைக் கைப்பற்றி பரந்தன் சந்திக்கு படையினர் செல்வதென்பதுதான் தற்போது படையினர் மத்தியிலுள்ள பெரும் கேள்வியாகும். எனினும் இவ்விரு பாதையையும் கைப்பற்றுவதற்கான பலத்த முயற்சியில் படையினர் ஈடுபட்டுள்ள போதிலும் கடந்த வாரம் இவ்விரு பகுதிகளிலும் இடம்பெற்ற பாரிய சமர்களில் படையினர் மிக மோசமான இழப்புகளைச் சந்தித்துள்ளதால் அடுத்து என்ன செய்வதென்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மன்னாரிலிருந்து பூநகரி வரையான சுமார் 80 கிலோ மீற்றர் தூரம் வரை வந்த படையினருக்கு, பூநகரிக்கு கிழக்கே பரந்தன் சந்திவரையான 30 கிலோ மீற்றர் பாதையைக் கைப்பற்றுவது கடினமாயிராதெனக் கருதப்பட்டது. பூநகரிநோக்கி படையினர் ஏ-32 வீதியூடாக முன்நகர்ந்த போது அவர்களுக்கு பக்கவாட்டுத் துணையாக ஏ-32 வீதிக்கும் ஏ-9 வீதிக்கும் இடையால் நகர்ந்த படையினர் தற்போது பூநகரி-பரந்தன் வீதியில் நல்லூர் வரை முன்னேறியுள்ளனர். பூநகரியிலிருந்து நல்லூர் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இதனால் அந்த வீதியில் மேலும் 20 கிலோ மீற்றர் தூரத்தை கைப்பற்றினால் படையினரால் பரந்தன் சந்தியைச் சென்றடைந்து ஏ-9 வீதியைக் கைப்பற்றி விட முடியும். ஆனால் இந்த வீதியில் படையினரின் முன்நகர்வு முயற்சிக்கெதிராக புலிகள் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த வீதியில் பரந்த பொட்டல் வெளிகள் இருப்பதால் திறந்த வெளிக் களமுனையில் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலுக்கு மத்தியில் படைநகர்வை மேற்கொள்வது பலத்த இழப்புகளை ஏற்படுத்தும்.
கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பூநகரி - பரந்தன் வீதியில் மிகவும் உக்கிர மான சமர் நடைபெற்றுள்ளது. இந்தச் சமரில் படையினர் பேரிழப்புகளைச் சந்தித்துள்ளனர். மிகப்பெரிய இராணுவ அணியொன்றை குறிப்பிட்டளவு தூரம் முன்னேற விட்ட புலிகள் அந்தப் படையணியை பொறிக்குள் சிக்கவைத்து கடும் தாக்குதலை நடத்தி பலத்த இழப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் படையணி புலிகளின் பொறிக்குள் சிக்கியதை அறிந்து அவர்களை மீட்க மற்றொரு படையணி சென்றபோது அந்தப் படையணி மீதும் புலிகள் மிகக் கடும் தாக்குதலை நடத்தி அவர்களுக்கும் மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 250 படையினர் வரை கொல்லப்பட்டும் 800 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலைக்கு மட்டும் ஒரு நாளில் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் படுகாயமடைந்த பல நூற்றுக் கணக்கான படையினர் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் கூட பூநகரிச் சமரில் படையினருக்கு மிகப்பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ள தாக வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.
பூநகரி - பரந்தன் வீதியில் முன்னேறி பரந்தன் சந்தியை கைப்பற்றிவிட்டால் அதற்கு வடக்கே முகமாலை வரையான பகுதிகள் எதுவித மோதலுமின்றி படையினர் வசமாகி விடுமென்பதால் இந்த வீதியூடாக பாரிய படை நகர்வுக்கு திட்டமிடப்பட்டது. எனினும் கடந்த சனிக்கிழமை (15 ஆம் திகதி காலை) படையினர் பூநகரியை கைப்பற்றிய போது, கிளாலி மற்றும் முகமாலை பகுதிகளிலிருந்து யுத்த டாங்கிகள் சகிதம் பாரிய படைநகர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பூநகரியை படையினர் கைப்பற்றிவிட்டதால் பரந்தனுக்கு வடக்கே புலிகளின் நிலைகளுக்கு ஆபத்தேற்பட்டு விடுமென்பதால் புலிகள் எவ்வாறான நிலையிலிருக்கிறார்களென்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கிலேயே கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் இந்தப் பாரிய படை நகர்வு முயற்சி இடம்பெற்றது. எனினும் கிளாலியிலும் முகமாலையிலும் புலிகள் காட்டிய கடும் எதிர்ப்பும் படையினருக்கு அவர்கள் ஏற்படுத்திய மோசமான உயிர்ச்சேதமும் கிளாலி - முகமாலையிலிருந்து மட்டுமல்ல பூநகரியிலிருந்தும் பரந்தன் நோக்கி படையினர் முன்னேறுவதற்கு அவர்கள் அனுமதிக்கப் போவதில்லையென்பதை தெளிவுபடுத்தியது.
பூநகரியைக் கைப்பற்றிய பின் சங்குப்பிட்டி - கேரதீவு கடல் பாதையூடாக குடாநாட்டிலுள்ள 40,000 படையினரில் பெருமளவானோரை வன்னிக்குள் நகர்த்துவதன் மூலம் முல்லைத்தீவு நோக்கி அடுத்து மேற்கொள்ளவுள்ள பாரிய படைநகர்வுக்கு பெரும் பலத்தை சேர்க்க முடியுமென படைத்தரப்பு கருதியது. ஆனாலும் இந்தக் கடல் வழிப் பாதைக்கு ஆனையிறவு முதல் கிளாலி மற்றும் முகமாலைப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள புலிகளால் ஆபத்தேற்படுமென்பதையும் படையினர் உணர்ந்திருந்தனர்.
சங்குப்பிட்டிக்கும் கேரதீவுக்குமிடையில் கடல்வழியால் போக்குவரத்துக்கள் மேற்கொள்ளப்பட்டால் அந்தப் போக்குவரத்தை புலிகளால் சுலபமாகத் தடுக்க முடியும். அவர்களது ஷெல் வீச்சு மற்றும் மோட்டார் தாக்குதல் எல்லைக்குள் மட்டுமல்லாது இந்தக் குறுகிய கடல்வழிப் போக்குவரத்துக்கு கடற் புலிகளாலும் பேரச்சுறுத்தலேற்படுமென்பதால் இதுவரை இந்தப் பாதையை படையினர் திறக்கவில்லை. இதனால் இந்தப் பாதையூடாக குடாநாட்டிலிருந்து பூநகரிக்கு படையினரைக் கொண்டு வரவும் முடியவில்லை. வன்னியில் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்ற போரில் 57 ஆவது மற்றும் 58 ஆவது படையணியே ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்தப் படையணிகளே இலங்கைப் படையினரில் மிகவும் வலுவான போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகளாயிருந்தன. ஆனாலும் வன்னிப் போரில் சிக்கி இந்தப் படையணிகள் பெரிதும் சிதைந்து போய் விட்டன.
அவற்றின் கூர் மழுங்கிப் போய் விட்டதால், மிக நீண்ட காலமாக போர் நடவடிக்கையில் ஈடுபடாது குடாநாட்டில் நிலைகொண்டிருந்த 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகளை அடுத்த கட்ட படை நகர்வுக்கு பயன்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டிருந்தது. பூநகரியைக் கைப்பற்றியதும் 53ஆவது மற்றும் 55ஆவது படையணியைப் பயன்படுத்தி முகமாலையிலிருந்தும் பூநகரியிலிருந்தும் புலிகளுக்கு இரு முனைகளில் பாரிய நெருக்கடிகளைக் கொடுப்பதே படையினரின் திட்டமாகும். கிளாலி மற்றும் முகமாலையிலிருந்து இந்தப் படையணிகள் பாரிய முன்நகர்வை மேற்கொள்ளும் அதேநேரம் இந்தப் படையணிகளின் ஒரு பகுதியை சங்குப்பிட்டி - கேரதீவு கடல்வழியாக பூநகரிக்குள் தரையிறக்கி அங்கிருந்து பரந்தனை நோக்கி பாரிய முன்நகர்வை மேற்கொள்வதும் அவர்களது திட்டமாகும்.
ஆனாலும் பரந்தன் முதல் கிளாலி வரை நிலைகொண்டுள்ள புலிகளால் சங்குப்பிட்டி - கேரதீவு கடல் பாதைக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்படுமென்பதால் இந்தக் கடல்பாதை இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பூநகரிக்குள் குடாநாட்டிலிருந்து பெருமளவு படையினரை வரவழைத்து படையினரின் ஆட்பலத்தை வெகுவாக அதிகரித்து பூநகரியிலிருந்து பரந்தனை நோக்கி பெருமெடுப்பில் மேற்கொள்ளவிருந்த படைநகர்வுத் திட்டம் சாத்தியப்படவில்லை. பூநகரியிலிருந்து நகர்ந்து சென்று பரந்தன் சந்தியைக் கைப்பற்றி ஏ -9 வீதியையும் கைப்பற்றினால் பரந்தனுக்கு வடக்கே ஆனையிறவு, இயக்கச்சி, பளை,முகமாலை மற்றும் கிளாலியில் நிலைகொண்டிருக்கும் புலிகள் படையினர் பரந்தன் சந்திக்கு வர முன்னர் பரந்தனைக் கடந்து முல்லைத்தீவுக்குள் சென்றுவிடவேண்டிய நிலையேற்படுமென படைத்தரப்பு கருதுகிறது. இதன் மூலம் கிளாலி மற்றும் முகமாலையில் நிலைகொண்டுள்ள படையினர் எதுவித மோதல்களுமின்றி ஏ-9 வீதியூடாக அடுத்த நிமிடமே பரந்தன் சந்திக்கு வந்துவிட முடியுமெனப் படைத்தரப்பு கருதியது.
எனினும் கடந்த சனிக்கிழமை கிளாலி மற்றும் முகமாலை பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிராக புலிகள் மிகக்கடும் பதில் தாக்குதலை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற இந்தப் பாரிய முன்நகர்வு முயற்சியில் படையினர் பேரிழப்புகளைச் சந்தித்தனர். எதிர்பார்த்த பலனெதுவும் கிட்டவில்லை. 200க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 300 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துமுள்ளனர். 53 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகள் சந்தித்த மிகப்பெரும் இழப்பு இதுவென்பதுடன் இந்த முனைகளூடாக தெற்கு நோக்கி ஒரு அடி கூட முன்வைக்க புலிகள் அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் படையினர் நன்கறிந்து கொண்டனர்.
எனினும் இந்தச் சமரில் படையினருக்கு ஒரு சிறு ஆறுதலேற்பட்டது. முன்னர் பூநகரி புலிகள் வசமிருந்த போது புலிகள் பூநகரியிலும் தங்கள் ஆட்லறி நிலைகளை அமைத்து கிளாலி மற்றும் முகமாலைப் படையினர் மீது மிகக் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் இம்முறை புலிகளின் ஆட்லறிகள் பூநகரியில் இல்லாததால் படையினருக்கு ஏற்படவிருந்த மேலதிக இழப்புகள் ஓரளவு தவிர்க்கப்பட்டன. அதேநேரம், தற்போது பூநகரியை படையினர் கைப்பற்றிவிட்டதால் படையினரால் அங்கு ஆட்லறி நிலைகளை அமைத்து கிளாலி மற்றும் முகமாலையில் நிலைகொண்டுள்ள புலிகளுக்கு பின்புறத்திலிருந்து பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது எனலாம்.
விதுரன்
Comments