தமிழக முதல்வர் டாக்டர் திரு.மு.கருணாநிதி அவர்களுக்கு,
வணக்கம்!
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தமிழகத்தில், ஈழம் பேசு பொரு ளாகியிருக்கிறது. எண்பதுகளில் தொடங்கிய உணர் வலைகள், இடையில் போடப்பட்ட அணையை உடைத்து மீண்டும் கிளர்ந்திருக்கிறது. ஈழத்தில் அன்றாடம் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகும் மக்களின் துயர் பற்றிப் பேசினாலே, அது புலிகளைப் பற்றிய பேச்சாக மாற்றப்பட்டு, ஈழம் குறித்த பேச் சையே தடுத்துவிட வேண்டும் என்ற உங்கள் கூட்டணி நண்பர்களான காங்கிரஸ்காரர்களின் கவலை புரிகிறது.
ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு இந்தியாவே மௌனசாட்சியாக இருக்கிறது என்ற ஜெயலலிதாவின் அறிக்கையின் விளைவாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினீர்கள். 'இரு வார காலத்துக்குள் போர் நிறுத்தப்படாவிட்டால், நாற்பது எம்.பி-க்களும் ராஜினாமா' என்றீர்கள்.
காட்சி விரைவாகவே மாறியது. வைகோ, கண்ணப் பன், அமீர், சீமான் என அடுத்தடுத்துக் கைதுகள் நடந்தன. அந்தக் கைதுகளுக்குக் காரணம் ஜெயலலிதா
என்று பெரும்பாலானோர் நம்பினார்கள். நீங்களும் ஜெயலலிதாவும் காங்கிரஸ§ம் ஆடிய சூதாட்டத்தின் பலியாடுகள்தான் அமீரும், சீமானும். உங்கள் பழைய சகாவான ராமதாஸைப் பாருங்கள்... டெல்லியில் புலிகளைப் போராளிகள் என்கிறார். சென்னையில் அவர் சார்பில் பேசுகிற
ஜி.கே.மணி, 'புலிகளைப் பார்த்ததுகூடக் கிடையாது... எங்களுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை' என்று சட்டத்துக்கு பயந்து ராமதாஸின் கருத்துக்கு அந்தர்பல்டி அடிக்கிறார். ஒரு முறை நீங்கள் சொன்னீர்கள், 'தேர்தலில் தோற்றால் பெரியார் வழி; ஜெயித்தால் அண்ணா வழி.' இன்னும் இரண்டரை ஆண்டுகள் மாநில ஆட்சியில் பாக்கியிருக்கும் சூழலில் நீங்கள் பெரியார் வழிக்குத் திரும்பி விட்ட தாகவே நினைத்தேன்.
நாளிதழ்களைப் பார்த்தால், நீங்கள் ஈழ மக்களுக்காகச் சுறுசுறுப்பாக நிதி வசூலித்துக் கொண்டிருக்கிறீர்கள்! ராஜினாமா கடிதத்தை முதல் எம்.பி-யாக உங்களிடம் கொடுத்த கனிமொழி ஈழத்துக்கு அரிசியும் ஆடைகளும் அளிக்கிறார் உங்களிடம்! அப்படியென்றால், போர்நிறுத்தக் கோரிக்கையும் கெடுவும் என்னவானது?
மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து பேசுகிறார்... பஸில் ராஜபக்ஷேவோடு டெல்லியிலேயே பேசி முடிவெடுத்து, அதை ஒரு கூட்டறிக்கையாக இரு நாடுகளும் வெளியிட்ட பிறகு, சென்னைக்கு வந்து ஒரு தகவலாக மட்டுமே உங்களிடம் சொல்லி, உங்கள் ஒப்புதலையும் பெற்றுச் செல்கிறார். 'அதுவே எங்கள் கோரிக்கைக்கு வெற்றி' என்கிறீர்கள் நீங்கள்! என்ன பொருள்..? ஈழத் தமிழர் மீதான தாக்குதல் உங்கள் கெடு தேதி முடியும்போது நிறுத்தப்பட்டுவிட்டதா?
சரியாக, 23 வருடங்களுக்கு முன்பு... 4-11-85 தேதியிட்ட 'முரசொலி'யில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் ('மாவீரன் நெடுமாறன் மேற் கொண்ட ஈழப் பயணத்தை வாழ்த்தி' எழுதிய மடல்) நீங்கள் சொன்னது உங்களின் நினைவாற்றல் பதிவு களில் நிச்சயம் அப்படியேதான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.
''எங்களுக்குத் தமிழ் ஈழம் தவிர வேறெதுவும் தேவை யில்லை என்று இளஞ்சிறார் - சிறுமியர் முதல் எழுபது எண்பதை நெருங்கிய முதியோர் வரையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னதை நெடுமாறனின் செவிகள் வாயிலாக நானும் செவிமடுத்தேன்! 'எங்களுக்குத் தனிநாடு கிடைக்க எங்கள் போராளிகளை ஊக்கப்படுத்துங்கள்! அவர்களை நிர்ப்பந்தித்துப் பிரச்னையைத் தீர்க்க முயலாதீர்கள். தனித் தமிழ்நாடே எங்கள் லட்சியம்! உங்களால் முடியாவிட்டால், எங்கள் தலையில் குண்டுகளைப் போட்டு இலங்கைத் தமிழ் இனத்தையே அழித்துவிடுங்கள்!' இந்தச் செய்தியை நெடுமாறன் அவர்களிடம் அழுது புலம்பியவாறு சொல்லுகிற காட்சியை இருதயத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டுதான் பார்க்க முடிந்தது!'' என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள்.
85-க்குப் பிறகான சில நிகழ்வுகளின் காரணமாக, 'போராளிகளை ஊக்கப்படுத்துவது' என்ற நிலைப்பாடு கேள்விக்குறியாகி இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழனின் உயிர்குடிக்கும் சிங்கள ராணுவத்தை ஊக்கப்படுத்துகிற காரியத்தை மறந்தோ, மெத்தனம் காட்டியோ நாம் செய்யலாமா?
அரசியல் லாபம் எதுவும் கருதாத ஒரு சாமானியத் தமிழனாக நான் உங்களிடம் கேட்பதெல்லாம்... நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கைகள் கோரிக்கையாகவேஇருக்கட்டும்.
இப்போது நீங்கள் திரட்டுகிறீர்களே... பணம், உடை, உணவு, மருந்து..! இதையெல்லாம் இலங்கை அரசே 'முறையாக தமிழ் மக்களுக்கு விநியோகிப்போம்' என்று சொல்வதை நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா? அல்லது, 'ஐ.நா. அமைப்புகள் மூலமும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மத்திய அரசின் மூலமாகவும் விநியோகிக்க ஏற்பாடாகியிருக்கிறது' என்று நீங்கள் கூறுகிறீர்களே... அதையாவது நிறைவேற்ற இலங்கை அரசு வழிவிடும் என்று நம்புகிறீர்களா?
ஈழத்தின் வடக்குப் பகுதி மீது கொடூரமான போரை சிங்கள ராணுவம் தொடங்கியபோது முதல் வேலையாக அது செய்த வேலை, அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த தன்னார்வக் குழுக்களையும் மனித உரிமைப் பணியாளர்களையும் வெளியேற்றியதுதானே..! அதன் விளைவாகத்தானே இன்று நடுநிலைப் பார்வையாளர்கள் யாருமின்றி, தங்கள் துன்பத்தைத் தடுக்க ஆளுமின்றி, உயிர் பிழைத்த மிச்சம் மீதி ஈழத் தமிழர்கள் காடுகளில் போய் தஞ்சம் அடைந் திருக்கிறார்கள்! இந்நிலையில், நீங்கள் அனுப்புகிற நிதி சிங்கள அரசின் ஆயுதச் செலவுக்குப் போய்விடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறீர்கள்? இந்திய அரசு கொடுத்த ராணுவ உதவியால் தமிழ் மக்கள் மீது குண்டு வீசியவர்கள், இனி தமிழக மக்கள் கொடுக்கிற பணத்தையும் ஈழத் தமிழனுக்கு எதிராகப் பாய்ச்சமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?!
இதற்கெல்லாம் உங்கள் பதில் அமைதி என்பதாக இருக்கலாம்! அதன் பின்னணி, மத்தியில் ஆளும் காங்கிரஸின் மறைமுக நெருக்கடியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த காங்கிரஸின் கூட்டணியும், அதன் நிழலில் இங்கே வாய்த்திருக்கும் இடைஞ்சலற்ற ஆட்சியும் நிரந்தரமல்ல என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன? என்றும் உங்களோடு இருக்க வேண்டியது தமிழ் இனத்தின் உணர்வுபூர்வமான ஆதரவு அல்லவா?
சிந்தியுங்கள்... அதன்பிறகே நிதியைச் சேர்ப்பியுங்கள்..!
உங்கள் மீது தீரா அன்புள்ள,
போருக்கு எதிரான ஒரு தமிழன்.
நன்றி: ஜூனியர் விகடன், Nov 05, 2008
Comments