இடப்பெயர்வில் அழியும் ஈழம்

ஈழத்தில் நடைபெறும் போர்ச் செய்திகள், தமிழக ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. மக்களின் வாழ்விடங்கள் மீது குண்டு வீச்சு; அதனால் சாவு என்பதே இச்செய்திகளின் மய்ய இழை. இதனைக் கடந்தும் மக்கள் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் நமக்கு தெரிய வருவதில்லை. ஏனெனில் போரின் விளைவு சாவு மட்டுமல்ல; போரின் மிகப் பெரிய பாதிப்பு - உள்நாட்டு இடப்பெயர்வுகள். மக்களின் வாழ்விடங்கள் மீதான தொடர்ந்த விமான தாக்குதல்கள், எறிகணை வீச்சுகள், இவற்றின் காரணமாக கையில் பச்சிளம் குழந்தைகளுடன் வெயில், மழை பாராது உயிருக்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் ஓடும் கொடுமை அது. ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்படும் சமூக, பொருளாதார, உளவியல் சிக்கல்கள், பாதுகாப்பின்மை என, அம்மக்கள் அன்றாடம் படும் வேதனைகள் கற்பனைக்கு எட்டாதவை. என்றாவது ஒரு நாள் நமக்கு விடிவு வரும். நமது ஊர்களுக்குத் திரும்பி இயல்பாக வாழலாம் என்ற ஒற்றை நம்பிக்கையோடு, ஈழத்தமிழர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதே ஈழத்தின் வன்னிப் பெருநிலப் பகுதி. மன்னாரும் முல்லைத்தீவும் கடலோர மாவட்டங்கள். கடற்கரையோரப் பகுதிகள் தவிர, வன்னி நிலப் பகுதி முழுவதும் அடர் காடுகளால் நிறைந்தது. இடை இடையே ஊர்கள் பரந்திருக்கும். வயல்களில் அன்றாடம் கூலி வேலை செய்வது, மீன் பிடித் தொழில், அதை சார்ந்த வியாபாரங்கள் ஆகியவையே இம்மக்களுக்கான பொருளியல் ஆதாரம்.

ஈழத்தில் பெருமளவிலான உள்நாட்டு இடப்பெயர்வு என்பது, 1980களிலேயே தொடங்கிவிட்டது. 80களின் முற்பகுதியில் குண்டு வீச்சினால் சிதிலமடைந்த தங்கள் வீடுகளை விட்டு, தங்கள் ஊர்களிலேயே உள்ள பள்ளிகள், கோயில்கள் போன்றவற்றில் அடைக்கலம் புகுந்த மக்கள், ஊரைவிட்டு வெளியேறவில்லை.

என்றாவது தங்கள் வீடுகளை சீரமைத்து மீண்டும் அங்கே வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். பின்னர், 80களின் பிற்பகுதியில் இந்திய ராணுவம் அங்கு இருந்த காலத்தில் இடப்பெயர்வுகள் அதிகரித்தன. உள்ளூர் என்பதிலிருந்து அருகில் உள்ள நகரங்கள், பொதுப் பள்ளிகள், தேவாலயங்கள், கோயில்கள் எனப் பரவவும் தொடங்கின. 90களின் தொடக்கத்தில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த போது, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி இழந்த வாழ்வை செப்பனிடத் தொடங்கினர். ஆனால் அது அதிக காலம் நீடிக்கவில்லை.

அதன் பின்னர் போரும் பேச்சு வார்த்தையும் மாறி மாறி நிகழத் தொடங்கின. பேச்சு வார்த்தை நடைபெறும் காலங்களில் மீண்டும் தங்கள் ஊர்களுக்கு திரும்பி நிலங்களில் பயிரிட்டு, கால் நடைகளைப் பராமரித்து, கடைகள் வைத்து என பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதும், மீண்டும் போர் தொடங்கியதும் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து இடம் பெயர்ந்து வாழ்வதும் - கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையாகிப் போனது.

1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேறச் சொன்னதால் நடைபெற்ற முஸ்லிம்களின் இடப்பெயர்வும், அதன் பின்னர் 1995 அக்டோபர் 30 அன்று சிங்கள ராணுவம் யாழைக் கைப்பற்றி மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு புலிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 5 லட்சம் மக்கள் ஓர் இரவில் இடம் பெயர்ந்ததும் - இது வரை நடந்ததிலேயே பெரும் இடப்பெயர்வுகளாக இருக்கின்றன.

குறிப்பாக, மன்னார் மடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த சூன் மாத காலப்பகுதிக்குள் - ஆறு முறைக்கு மேல் தமது நிரந்தர இடங்களில் இருந்து இடம் பெயர்ந்ததன் பின்னர், தற்காலிக வாழ்விடங்களில் இருந்தும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மடுவில் உலகப் புகழ் பெற்ற தேவாலயம் ஒன்று உள்ளது. கடந்த ஏப்ரல் 2008இல் மடு தேவாலயத்தை முற்றிலும் அழிக்கும் அளவிற்கு சிங்கள ராணுவம் அதன் மீது தாக்குதல் நடத்தியது. அந்தப் பகுதியைச் சேர்ந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு அது நாள் வரை உறைவிடம் அளித்த அந்த தேவாலயமே தாக்குதலுக்கு உள்ளானது, மக்களிடையே பெரும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் எழுப்பியது. மடு மாதா தாக்கப்பட்டதற்குப் பிறகு, அப்பகுதி மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கினர். ஏற்கனவே இடம் பெயர்ந்து தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களும், மடுப் பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்து வந்த மக்களும் மொத்தமாக வெளியேறத் தொடங்கினர். அன்று தொடங்கிய இடப்பெயர்வு இன்று வரை தொடர்கிறது.

ஈழம் என்பது வடக்கில் யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப் பகுதியையும், கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை, திரிகோணமலை மாவட்டங்களையும் உள்ளடக்கியது. இதில் யாழ்ப்பாணமும், கிழக்கும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள். இப்பகுதிகளில் ஏறத்தாழ ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை போன்ற வாழ்நிலை. ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் இடம் பெயர்ந்த மக்களே அங்கு வாழ்கின்றனர். யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அத்துடன் கூடிய பொருளாதாரத் தடை காரணமாக உணவு, மருந்து உட்பட எவ்விதப் பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்படுவதும் இயலாததாகி விட்டது. யாழிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கும் பெரும் கட்டுப்பாடுகள், சோதனைகள். தொண்டு நிறுவனங்களும் முற்று முழுதாக வெளியேற்றப்பட்டு விட்டன. எந்த ஊடகவியலாளரும் அங்கு செல்ல இயலாது. இதனால் யாழ் மக்களுக்கு என்ன நேர்கிறது என்பதே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி உலகத்தினர் அறியாத புதிராகவே இருக்கிறது.

கிழக்குப் பகுதியில் ஒரு புறம் ராணுவம், மற்றொரு புறம் ஒட்டுக் குழுக்கள். இவற்றிற்கு இடையில் சிக்கிக் கொண்டு எந்நேரம் என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடனேயே மக்கள் வாழ்கின்றனர். அதோடு அங்கு அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் நடத்தப்படுகின்றன. இதனால் மக்கள் எதையும் வெளிப்படையாகப் பேசக் கூட இயலாதவர்களாக, நடமாட்டங்களை குறைத்து முடங்கி இருக்கின்றனர்.

தென்னிலங்கை முழுவதும் சிங்களப் பகுதி. இந்நிலையில் வன்னிப் பெருநிலப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் போர் பாதிப்புகளால் இடம் பெயரும் மக்கள், யாழ்ப்பாணத்திற்கோ, கிழக்கு இலங்கைக்கோ, தென்னிலங்கைக்கோ போக முடியாமல், அங்கு போய் சிக்கிக் கொள்ள விரும்பாமல், வன்னிப் பெருநிலப் பகுதியையே சுற்றிச் சுற்றி வரும் அவலம். மிகச் சிறிய தீவான இலங்கையின் ஒரு சிறிய பகுதியே வன்னிப் பெருநிலப் பகுதி. இதைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் அதற்குள் எவ்வளவுதான் செல்ல இயலும்? அதிலும் சிங்களப் பகுதிகளுக்கோ, ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கோ அருகிலுள்ள இடங்களைத் தவிர்த்து உட்புறம்தான் செல்ல வேண்டும். முன்னைப் போல் இந்தியாவிற்கு வருவதும் அத்தனை எளிதாக இருக்கவில்லை.

சற்று வசதி பெற்றவர்கள், குடும்பத்தில் ஒருவரையோ அல்லது ஒட்டுமொத்தாகவோ வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து விடுகின்றனர். அவர்கள் அனுப்பும் பணத்தில் தான் இங்குள்ளவர்கள் வாழ வேண்டும். ஆனால் அந்தப் பணமும் கைக்கு வந்து சேரும் என்ற உத்தரவாதமில்லை. பல வழிகளில் அந்தப் பணத்தை உரியவர் கையில் சேர்ப்பதுவுமே பெரும் பாடு. அப்படி வந்த பணத்தை வைத்து இடப் பெயர்வுக்கான செலவுகளை சமாளிப்பதே பெரும் சிரமம். இடப் பெயர்வுக்கான செலவு என்பதில் பெரும்பகுதி போக்குவரத்திற்கே போய்விடுகிறது. பெரும்பாலும் டிராக்டர்களை பயன்படுத்தியே மக்கள் இடம் பெயர்கின்றனர். 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.4000, 10 கி.மீ.க்கு 10,000 என வாடகை செலுத்த வேண்டியிருக்கிறது.

காரணம் எரிபொருட்களின் விலை. தற்போதைய சூழ்நிலையில் மண்ணெண்ணெய் 1 லிட்டர் 130 ரூபாய்க்கும், பெட்ரோல் 1 லிட்டர் 700 ரூபாய்க்கும் டீசல் 1 லிட்டர் 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்கள் குழுவாக இணைந்து வாகனங்களை வாடகைக்கு அமர்த்துவதால், அவர்கள் எடுத்துச் செல்கின்ற தத்தமது உடைமைகளை மட்டுப்படுத்துகின்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு வண்டி அமர்த்தி செல்லும் வசதியற்ற, அன்றாடம் கூலி வேலை செய்து வந்த ஏழை மக்கள், குடும்பத்தில் அனைவரும் தங்களால் சுமக்கக் கூடியவற்றை தூக்கிக் கொண்டு, பாதுகாப்பான இடங்களைத் தேடி நடந்தே செல்லும் நிலை. இதற்கு குழந்தைகளும், முதியவர்களும் விதிவிலக்கல்லர்.

இதற்கு நடுவில் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களின் விலை. மன்னார், இலங்கையின் நெற்களஞ்சியம் என்றே அழைக்கப்பட்டது. ஆனால் தற்போது நெல் உற்பத்தி என்பது அறவே அற்றுப் போனதாக இருக்கிறது. வயல்கள், மீன்பிடி நிலையிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால், உணவு உற்பத்தி முற்றிலுமாக நின்று போனது. இதனால் ஒரு மீனின் விலை 225 ரூபாய். அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கிடைப்பதே அரிது. ஏனெனில் அவை வெளியிலிருந்து வர வேண்டும். சிங்கள ராணுவம் வன்னிக்குச் செல்லும் பாதையை முற்றுகையிட்டு நிற்கிறது. இதனால் வியாபார ரீதியாக உணவுப் பொருட்களை கொண்டு வருவது இயலாத ஒன்று. தொண்டு நிறுவனங்கள் தாம் உணவுப் பொருட்களை கொண்டு வந்து மக்களுக்கு அளித்துக் கொண்டிருந்தனர். அதையும் சிங்கள அரசு தடுத்துவிட்டது. மேலும் தொண்டு நிறுவனங்களை வன்னியை விட்டு வெளியேறவும் சொல்லிவிட்டது. அரசின் உத்தரவையும் மீறி ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மட்டுமே அங்கு இயங்கி வருகின்றன.

சமைப்பதற்கான பொருள் கிடைத்தாலும், சமைப்பதற்கான உபகரணங்களைச் சுமந்து வர இயலாத நிலையில், விறகு வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஒரு சைக்கிள் சுமை விறகு 300 ரூபாய்க்கு விற்கிறது. அதற்குரிய பணத்தை இடம் பெயர்ந்து வாழும் மக்களால் செலுத்த இயலாது. இந்த காரணங்களால் அன்றாட சமையல் மற்றும் உணவு வழங்கல் என்பது மிகப் பெரிய சவாலாகவே இருக்கிறது. வன்னிப் பகுதி முழுவதுமே காட்டுப் பகுதி நிலமாதலால், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடும். இந்தச் சூழலில் வெட்ட வெளிகளில், மரங்களுக்குஅடியில் கூட்டமாக நெருங்கி வாழ நேரிம்போது பல்வேறு சமூக, சுகாதார பிரச்சனைகளும், காட்டுப் பகுதியில் வாழ்வதால் விஷ உயிரினங்களினாலான ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

வன்னிப் பகுதியில் பெரிய ஆறுகள் இல்லை; குளங்களும், மழை நீர் பெற்று ஓடும் சிற்றாறுகளுமே உண்டு. இதனால் சமையல் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு சராசரி மனிதனுக்கு, சமையல் மற்றும் சுய சுகாதாரத் தேவைகளுக்காக, எட்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது, அணைகளுக்கு அருகிலோ அல்லது துப்புரவற்ற கிணறுகளுக்கோ அருகில் உள்ளவர்களில் சிலர் அந்தத் தண்ணீரையே சமையல், குளியல் மற்றும் பிற தேவைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர். இது, நோய்கள்பரவும் தன்மையில் முக்கியமாக ஓர் அதிகப்படியான சுகாதார முறைகேட்டைத் தோற்றுவிக்கிறது. அருகில் கழிவறை வசதிகள் அற்றவர்கள் தங்களின் கழிவுகளை வெளியேற்ற அகழிகள் உருவாக்க வேண்டும். இது, மக்கள் குறைவாக கூடி வாழ்கின்ற இடங்களில் பிரச்சனையாக இல்லாவிடினும், மக்கள் அதிகப்படியாக சேர்ந்து வாழும் இடங்களில் மிக அதிக அளவிலான சுகாதார சீர்கேட்டை உருவாக்குகிறது.

இவை தவிர, காட்டுப் பகுதிகளில் வாழ்வதால் நேரக்கூடிய பாம்புக் கடிகள், விஷ பூச்சிகளின் கடிகள் போன்றவற்றிற்கான மருந்து என்பது கிடைக்க வாய்ப்பே இல்லை. மிகவும் அவசர சிகிச்சைத் தேவைப்படும் நோயாளிகளை தூக்கிச் செல்வதற்கான ஆம்புலன்ஸ் போன்ற எந்த வசதிகளும் கிடையாது. இதனால் மிதிவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமே நோயாளிகளை எடுத்துச் செல்லும் நிலை இருக்கிறது.

இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு புறம், குண்டு வீச்சுகளினால் காயம்பட்டவர்கள் மறுபுறம் என மருத்துவமனைகள் எப்போதும் நிரம்பியே இருக்கின்றன. ஆனால் அத்தனை நோயாளிகளையும் கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. பெரும்பாலும் மருத்துவ உதவியாளர்களே சிகிச்சைகளை கவனிக்க வேண்டும். வன்னிப் பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனைகளில் பெரியதும் ஓரளவு வசதிகள் உடையதுமான கிளிநொச்சி மருத்துவமனை, அண்மையில் சிங்கள ராணுவத்தின் விமான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. இருந்த ஒரே நல்ல மருத்துவமனையும் சிதைக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சை என்பதே பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

பொதுவாக ஈழத் தமிழர்கள் கல்விக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வந்திருக்கின்றனர். கல்விக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் காரணமாக, மக்கள் இடம் பெயரும் போது, பள்ளிகளும் இடம் பெயரும் விந்தையான சூழல் நிலவுகிறது. பள்ளிகள் இடம் பெயர்வது என்பது, வெறும் உபகரணங்களின் இடப்பெயர்வு அல்ல. அப்பள்ளியில் பயின்ற, பயிலுகின்ற அனைத்து மாணவர்கள் பற்றிய ஆவணங்களையும் பாதுகாப்பாக இடம் மாற்றுவது மிகப் பெரும் பணி. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 115 பள்ளிகள் இடம் பெயர்ந்துள்ளன. ஒன்றிணைக்கப்பட்ட பள்ளிகள் பிரதான பள்ளிகளில் இயங்குகின்றன. சில இடங்களில் ஒரே வளாகத்தில் 10 பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கும் நிலையும் உள்ளது. இந்த எதிர்பாராத சூழல் காரணமாக ஆசிரியர்கள், வகுப்பறைகள், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் பற்றாக்குறைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த இடப்பெயர்வின் அழுத்தம் மாணவர்களையும் வெவ்வேறு விதங்களில் பாதித்துள்ளன. தேசிய மட்டத்திலான தேர்வுகள் மற்றும் பாடத்திட்டங்கள் சீரற்றவையாக உள்ளன. தங்களின் தேர்வுகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலையில், கல்வியை மேற்கொண்டு தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்ததருணங்களில் சிங்கள விமானங்கள் பள்ளி வளாகத்தில் குண்டு வீச்சை நடத்திய காரணத்தினால், பள்ளிக்கூடங்களை விட்டு நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

உளவியல் தாக்கம் என்பதும் மிகவும் அதிகப்படியானதாகவே இருந்துள்ளது. பல மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர். வகுப்புகளோ, தேர்வுகளோ எது நடந்து கொண்டிருந்தாலும் விமான சத்தம் கேட்டால் எழுந்து ஓடி பதுங்கு குழிகளுக்குள் இறங்கிவிட வேண்டும் என்பது, குழந்தைகளுக்கு ஒரு பயிற்சியாகவே அளிக்கப்பட்டுள்ளது. குண்டு சத்தத்திற்கு அஞ்சி கண்ணையும் காதையும் இறுக மூடித் திறப்பதற்குள் - அருகிலிருந்தவர் செத்து விழும் கொடுமையை காண நேரும் குழந்தைகள், பெரும் மன அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். பெற்றோரை விட்டு பள்ளியில் இருக்கும் நேரத்தில், இதுபோன்ற அனுபவங்களினால் மிகப் பெரிய அளவில் பாதுகாப்பின்மை மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால் பெற்றோரை விட்டு பள்ளிக்கு வரவே அஞ்சுகின்றனர். வெளியேறிய இடங்களில் உள்ள ஆசிரியர்களும் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, அவர்கள் இந்தப் பள்ளிகளின் தற்காலிக வளாகங்களில் இருந்து வெகு தூரத்தில் இடம் பெயர்ந்துள்ளதால், தங்களின் பள்ளிகளில் தொடர்ந்து கற்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விட, இடப் பெயர்வு என்பது பெரும் சமூகச் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. ஓர் ஊரில் பல தலைமுறைகளாக ஒரே சமூகமாக கூடி வாழ்ந்த மக்கள் பல திசைகளில் சிதறும் பொழுது, சமூகப் பிணைப்பு பாதிக்கப்படுகிறது. திருமணம் போன்று வாழ்வில் இயல்பாக நடக்க வேண்டிய நிகழ்வுகள் அதனதன் போக்கில் நடக்க இயலாமல் தேக்கம் ஏற்படுகிறது. இதனால் பல ஆண்களும் பெண்களும் திருமண வயதைக் கடந்தும் திருமணம் ஆகாமல் வாழ்கின்றனர். எந்தவொரு அவலத்திலும் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே என்பதற்கு இச்சமூகமும் விதிவிலக்கல்ல. அடிக்கடி நிகழும் சாவு, உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலை, நிரந்தர வாழ்விடம் இன்றி மாறிக் கொண்டேயிருப்பது போன்றவை, குழந்தைகள் மனதில் பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இனம், மொழி, மதம், தேசம் ஆகியவற்றை கடந்த துயரம் இது. இத்தகைய அவலம் உலகில் எந்தப் பகுதியில், யாருக்கு நேர்ந்திருந்தாலும் அத்துயரைத் துடைக்க முன் நிற்பதே - மனித நேயமிக்க ஒவ்வொருவரின் கடமை. உண்மைக்கு முன்னால் நடுநிலைமை என்று ஒன்று இல்லை. ஆனால், போருக்கு முன்னால் நடுநிலைமை என்பது உண்டு. போரினால் அல்லலுறும் மக்களின் பக்கம் நிற்பதே அது.

- பூங்குழலி


நன்றி: கீற்று


Comments