உங்களில் யாருக்கெல்லாம் தாய்நாடு போக விருப்பம் இருக்கு?'' என்று அமைச்சர் கேட்க, ஆளாளுக்கு முகத்தைப் பரிதாபமாக பார்த்துக் கொள்கின்றனர், அந்த இலங்கைத் தமிழ் அகதிகள். திடீரென்று கூட்டத்தில் இருந்து, `தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் போவோம்!' - அதிரடியாய் ஒரு குரல். அதைக்கேட்டு அமைச்சர் மட்டுமல்ல, அதிகாரிகளும் ஆடிப் போய்விட்டனர். என்ன இது? அமைச்சர் எதற்காக அப்படியொரு கேள்வி கேட்கவேண்டும்? அங்கிருந்து இப்படியொரு பதில் வரவேண்டும்.
வேறொன்றுமில்லை. ஈழப் பிரச்னையில் ஆர்வம் காட்டிவரும் தமிழக முதல்வருக்கு திடீரென்று என்ன தோன்றியதோ? அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களுக்கும், அவரவர் பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யுமாறு அதிரடியாக ஓர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதையடுத்து கடந்த சனி, ஞாயிறுகளில் அமைச்சர்கள் குறைகேட்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆலாந்துறை பூலுவபட்டி, மேட்டுப்பாளையம் வேடர்காலனி, ஆளியாறு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள மக்களை, இந்தப் பகுதி அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட கலெக்டர் பழனிகுமார் சகிதம் சென்று குறைகேட்பு முகாம் நடத்தினார். அவர் முதலில் சென்ற முகாம் பூலுவபட்டி. இங்கே மொத்தம் 270 குடும்பங்களில் 960 பேர் தங்கியுள்ளனர். அமைச்சர் வந்தவுடன் முகாமில் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மக்களிடம் நலம் விசாரித்தார்.
"எங்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. அதற்கு ஏதாவது தீர்வு செய்யுங்க'' என்றனர் சில பெண்கள். உடனே கட்டித் தர கலெக்டருக்கு ஆணை பிறப்பித்தார் அமைச்சர். ``ரேஷன் கடைகளில் போடும் அரிசி பற்றாக்குறையாக இருக்கிறது. மண்ணெண்ணெய் போதுமானதாக இல்லை. மாதாந்திர உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும். பள்ளிப் பிள்ளைகளுக்கு ஸ்காலர்ஷிப் வேண்டும்'' என்று ஆளாளுக்குக் குமுற, அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்ட அமைச்சர், நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
மனவளர்ச்சி குன்றிய மற்றும் உடல் ஊனமுற்ற ஐந்து பேருக்கு மொத்தம் பத்தாயிரம் ரூபாயைத் தன் சொந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து, அதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு அகதிகள் முகாமின் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.
இளைஞர் ஒருவர், தான் இன்ஜினீயரிங் படிக்க, குறிப்பிட்ட ஒரு கல்லூரி இரண்டு லட்ச ரூபாய் டொனேஷன் கேட்டதாகவும், அதற்காக படாதபாடுபட்டு கடன் வாங்கி அந்தக் கல்லூரியில் சேர்ந்ததாகவும், தன்னைப் போல பல இளைஞர்கள் திண்டாடுவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.
``நானே அந்தக் கல்லூரி நிர்வாகியிடம் பேசி அடுத்த மூன்று வருடங்கள் கட்டணமில்லாமல் படிக்க ஏற்பாடு செய்து தருகிறேன். ஏற்கெனவே தந்த டொனேஷனையும் திருப்பித்தரச் சொல்கிறேன்'' என்று உறுதியளித்த அமைச்சர், என்ன நினைத்தாரோ, "எதுக்காக எல்லோரும் அங்கே இங்கே என்று ஏதேதோ காலேஜுக்குச் செல்கின்றீர்கள்? கலைஞர் கருணாநிதி இன்ஜினீயரிங் கல்லூரி எங்களுடையதுதானே? அதனால், படிக்க வேண்டும் என்பவர்கள் அங்கே வாருங்கள். இலங்கைத் தமிழர்கள் என்றால், இலவசமாகவே சீட் தருகிறேன்!'' என்று சொல்ல, குறைசொல்ல வந்த மக்கள் அனைவரும் தங்களை மறந்து அமைச்சரின் அதிரடி அறிவிப்புக்குக் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில்தான், ``உங்களில் யாருக்காவது சொந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமா?'' என்று கேட்டார். ``நாங்க இங்கேயே மக்களோட மக்களா இருந்து பழகிட்டோம். இங்குள்ள பள்ளிகளில் பிள்ளைகள் படிக்கிறாங்க. அதைக் கெடுத்துட்டு தாயகத்துக்குப் போக முடியாது. அங்கே அமைதி திரும்பினா எல்லோரும் போயிடுவோம்!'' என்றனர். அதில் ஒரு துடுக்குத்தனமான பேர்வழி எழுந்து, ``தமிழ் ஈழம் மலர்ந்தால்தான் போவோம்!'' என்று சொல்ல, அமைச்சர் ஒரு மாதிரியாகிப் போனார். உடனே சுதாரித்துக்கொண்ட அமைச்சர், "அப்படியெல்லாம் பேசக்கூடாது. எங்களால் பிரிவினையை ஆதரிக்க முடியாது. அதுதான் இங்கே உள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடு. `அமைதி திரும்பினால் போதும். நாங்கள் செல்கிறோம்' என்று சொல்லிப் பழக வேண்டும்(?)'' என்று பொறுமையாக எடுத்துரைத்தார்.
இதே மாதிரி மேட்டுப்பாளையம் வேடர் காலனி அகதிகள் முகாமிலும் குறைகேட்பு நடந்தது. அதிலும் நலிந்தோருக்கு தனது சொந்தப்பணத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாய் வழங்கினார் அமைச்சர்.
தனிப்பட்ட முறையில் முகாம் இளைஞர்கள், இளைஞிகள் சிலரிடம் பேசியபோது, ``நிச்சயம் எங்கள் தாயகம் தனி தமிழ் ஈழமாக மலரும். அப்போதுதான் தாயகம் திரும்புவோம்'' என்றனர் அழுத்தம் திருத்தமாக.
எல்லாம் சரி. ஏன் இந்த திடீர் குறைகேட்பு முகாம்? அதைப் பற்றி பல ஹேஸ்யங்கள் உலா வருகின்றன. ``சில வாரங்களுக்கு முன்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவினாசியில் உள்ள அகதிகள் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, அவர்களுக்கு தன் கட்சி சார்பாக மூட்டை மூட்டையாக அரிசி வழங்கினார். அதையொட்டி அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டார். அதில் ஆடிப்போய்த்தான் முதல்வர் தம் அமைச்சர்களை அனுப்பி குறைகளைக் கேட்டு நிவர்த்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்!'' என்றார் ஒருவர். இன்னொருவரோ, ``அதெல்லாம் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா ஓர் அறிக்கையில் `இலங்கைத் தமிழர்களின் துயரைப்பற்றி கருணாநிதி பேசுவது இருக்கட்டும். இங்கே உள்ள அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் அகதிகள். அதை முதலில் தீர்க்கட்டும்' என்று சொல்லியிருந்தார். அதன் எதிரொலிதான் இது!'' என்றார்.
ஆனால், வேடர்காலனி அகதிகள் முகாமைச்சேர்ந்த முதியவர் ஒருவரோ, "இலங்கையில் கிளிநொச்சியை முழுமையாக புலிகளிடமிருந்து இரண்டொரு நாட்களில் சிங்கள ராணுவம் பிடித்துவிடும் என்று இங்குள்ள அரசாங்கம் கருதுகிறது. அதன்பிறகு இலங்கை அரசு தமிழர்களுக்கு தனி மாநிலம் என்று சொல்லி ஏதாவது ஜாலங்களை மக்களுக்குக் காட்டும். அந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசாங்கத்தை இலங்கை அரசு அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒருவேளை நடந்தால், இங்குள்ள தமிழ் அகதிகளைத் தாயகத்திற்கு அனுப்ப வேண்டிய வேலைகளை துரிதமாகச் செய்ய வேண்டி வரும். அப்படி ஒரு சூழ்நிலை அமைந்தால், இங்குள்ள அகதிகள் தாய்நாடு செல்லத்தயாராக இருக்கிறார்களா? அவர்கள் மனநிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஒத்திகை நடந்திருப்பதாக எங்களுக்குத் தோன்றுகிறது. மத்திய அரசு இட்ட கட்டளையை தமிழக அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான்!'' என்றார் உணர்ச்சி பொங்க
- குமுதம் ரிப்போட்டர்
Comments