இந்திய அரசுக்கு இந்த அவமானம் தேவைதானா?

போர் நடத்திதான், தமிழ் மக்களின் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்பதை அறிவித்துச் செயல்படும் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றுதான் ஜனதா விமுக்தி பெரமுனா. இன்று இலங்கையில் நடைபெறும் ஆட்சிமுறை ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது. ஒற்றையாட்சி மொழி, சிறுபான்மையை நசுக்கக்கூடிய பாசிச இயல்பை சட்டபூர்வாகப் பெற்றுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஒற்றையாட்சிக்குப் பதிலாக, கூட்டாட்சிதான், பிரச்னையைத் தீர்க்கும் என்பதை ஏதாவது ஒரு காலத்தில் இலங்கையிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் உதட்டளவிலாவது பேசியிருக்கின்றன. ஜனதா விமுக்தி பெரமுனாவின் கொள்கை இதில் வேறுபட்டுவிட்டது. சிங்கள மக்களின் மேலாண்மைக்குப் பொருத்தமுடைய ஒற்றையாட்சி தான் இலங்கைக்கு ஏற்புடையது என்று இந்தக் கட்சி கூறுகிறது.

தலைமன்னார், தலைநகர் கொழும்பு ஆகியவற்றில் விடுதலைப் புலிகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது பற்றி, ஜனதா விமுக்தி பெரமுனாவின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் கேரத் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான இடங்களில் பாதுகாப்பிற்கென்று இந்திய ராணுவத்தால் அமைத்துத் தரப்பட்டிருக்கும் ராடார் கருவிகள் மூலம், சரியாகக் கண்காணித்து தகவல் அளிப்பதில் ஏற்பட்ட குறைபாடுதான், புலிகளின் விமானங்கள் தப்பிச் செல்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதில் எழுப்பியிருக்கும் கேள்வி இந்திய ராணுவத்தின் நம்பகத்தன்மையைப் பற்றியது. எந்த நாட்டிற்கு காவலாளியாகச் சென்றாலும் அந்த நாட்டிற்கு நம்பிக்கை மிக்க காவலாளியாக இருக்க வேண்டாமா என்ற காவல் நேர்மையை இந்தக் கேள்வி எழுப்பிப் பார்க்கிறது. இந்தக் கேள்வியில் இலங்கையில் வாழும் சிங்கள மக்கள் நியாயம் இருப்பதைப்போல உணர்ந்தாலும், இந்தியர்களாகவும் தமிழர்களாகவும் வாழ்ந்து வரும் நமக்கு ஒருவிதமான அவமான உணர்ச்சியை இது தோற்றுவித்துவிட்டது. ஆயுத உதவியும் செய்து, இத்தகைய கேவலமான அவப் பெயரையும் நாம் சூட்டிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது.

இந்திய நாடாளுமன்றத்திற்குத் தெரியாமலும் இந்திய மக்களுக்குத் தெரியாமலும் இந்தியா, இலங்கை ராணுவத்திற்குச் செய்த உதவி இது. ராணுவம் ஒரு நாட்டின் கௌரவமாகப் பேசப்படுகிறது. அதுவும் இந்திய ராணுவம் குறித்த பல பெருமைகள் நாடாளுமன்றத்தால் பலமுறை புகழப்பட்டுள்ளது. அந்த ராணுவத்தை தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் அனுப்பியதில் ஏற்பட்ட அவமானத்திற்கு யார் பொறுப்பேற்பது? கடந்த மூன்று மாதங்களாக இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ராணுவ உதவி செய்கிறதா என்ற கேள்வி இந்திய அரசாங்கத்திடம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. ஒரு நீண்ட மௌனத்தின் மூலம் இந்தக் கேள்வியை மரணக்குழியில் புதைத்து விடவே இந்திய அரசு விரும்பியது. எப்படியோ வலுவடைந்த தமிழகத்தின் போராட்டங்கள் இந்திய அரசின் வாயைத் திறக்க வைத்துவிட்டது. மெல்ல வாய் திறந்து இந்திய அரசாங்கம் கூறியது. இந்தியாவின் ராணுவப் பாதுகாப்பு காரியங்களுக்காகவே இலங்கைக்கு உதவி செய்யும் அவசியம் எழுந்தது என்று. நமது நாட்டின் பாதுகாப்பில் அரசாங்கத்தின் அக்கறை பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

இலங்கையில் நடப்பது ஓர் உள்நாட்டுப் போர். எந்த பகை நாடும் இலங்கையுடன் போர் தொடுக்கவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான வரலாற்று ரீதியான இனஒடுக்குமுறையின் இன்றைய வடிவம், இந்த உள்நாட்டுப் போர். பயங்கரவாதத்தின் பெயரால் இந்தப் போரை நடத்துதல் ஆட்சியாளர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது. யுத்தத்தின் முழுச் சுமையையும் சுமந்து திரிபவர்கள் யார்? என்பதை மட்டும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். இன்று எல்லாவற்றையும் இழந்து, அகதிகளாய் நிற்கும் இலங்கையின் பூர்வகுடிகளான தமிழ் மக்கள்தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். போர் விமானம் பொது மக்களின் குடியிருப்புகளை வெறிகொண்டு தாக்கித் தரைமட்டமாக்குகிறது. ராட்சத கழுகுகளைப் போல விமானங்கள் அவர்களைத் துரத்தி அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் ஓடி ஓடி களைத்துவிட்டார்கள்.

மூன்று மாதங்களில் குறைந்தது பத்து இடங்களில் இடம்பெயர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். பட்டினியோடும் பயத்தோடும் வாழும் மக்களுக்கு பதுங்குக்குழிகள் தான் புகலிடம். ஆனால் அங்கும் பாம்புகளும், நாய்களும் பதுங்கியிருந்து இவர்களை வெறிகொண்டு கடிக்கத் தொடங்கி விடுகிறது. பாம்புக்கடியால் மட்டும் 200-க்கும் அதிகமானவர்கள் இறந்து போனதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மலேரியா கொசுக்கடியால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அரசுப் பகுதிகளுக்குள் வர இயலாமல் 4 லட்சம் மக்கள் இவ்வாறு அவதியுறுகிறார்கள். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அகதி முகாம்களில் மட்டும் 5 லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளை மனிதாபிமானத்துடன் அணுகுவதை விடுத்து, இந்தியா தங்கள் பாதுகாப்பு என்று கூறி, இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்வது சரிதானா? என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவின் தெற்கு எல்லையில், ராணுவ ரீதியாக ஒரு முக்கியத்துவமுடைய தீவு இலங்கை என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கையின் ராணுவப் பாதுகாப்பும், இந்தியாவின் ராணுவப் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது என்பதும் உண்மைதான். மக்கள்தொகையில் இலங்கை சிறிய நாடு என்றபோதிலும் இந்திய அரசாங்கத்தை பலமுறை ஏமாற்றியிருக்கிறது. ஏமாற்றுவதன் மூலம் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று இன்றும் அது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்திய - சீன போர், இந்திய - பாகிஸ்தான் போர் என்ற இரண்டு போர்களை இந்தியா சந்தித்தது. அப்பொழுதெல்லாம், இலங்கையின் கொழும்பு நகரம் தான் போர் விமானங்களுக்கான பெட்ரோல் நிரப்பிக் கொள்ளும் வசதியைச் செய்து கொடுத்தது. கச்சத்தீவும் பெருந்தன்மையோடு, இலங்கை அரசுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட, இந்திய மீனவர்களின் உரிமையை முற்றாக மறுத்ததுடன் கச்சத் தீவைச் சுற்றிய பகுதிகளில் நூற்றுக்கணக்கில் மீனவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் இலங்கை அரசு காரணமாக அமைந்துவிட்டது. திம்பு பேச்சு வார்த்தைக்குப் பின்னர் அமைந்த ஜெயவர்த்தனே, ராஜீவ் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதி ஒரே மாநிலமாக அமைய வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் முக்கியப் பகுதியை சூழ்ச்சியால் மாற்றிவிட்டது. இன்று நடைபெறும் உள்நாட்டுப் போரிலும் தூரத்து நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குவதன் மூலமும் இந்தியாவை மிரட்டிப் பார்க்கிறது. இதை இந்திய அரசு சரியாகப் புரிந்து கொள்ளல் அவசியம்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதிக்குப் பின்னர், அசைவற்று உறைந்து கிடந்த தமிழகம் உறக்கம் கலைந்து இலங்கைத் தமிழ் மக்களுக்கு சகோதர ஆதரவு தெரிவிக்க எழுந்து நின்றது. இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தாய்த் தமிழகத்தின் இந்த எழுச்சி, இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு இந்தியாவின் சார்பில் உடனிருந்து உதவிபுரிந்து வந்த அதிகாரவர்க்கத்திற்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. கூட்டணி சகாப்தத்தில் நுழைந்துவிட்ட, நமது அரசியலில் இது சில நிர்பந்தங்களை உருவாக்கியிருக்கிறது.

இலங்கையின் சிறப்புத் தூதர் பாசில் ராஜபக்ஷ வருகை இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான். ஆனால் இது இலங்கை அரசு நடத்தும் போலி நாடகம் என்பதைப் புரிந்து கொள்ள யாருக்கும் சிரமம் இல்லாமல் போய்விட்டது. பொதுமக்களில் ஒருவரைக் கூட கொல்லாத போர் ஒன்றை இலங்கையின் வடக்குப் பகுதியில் நடத்தப்போவதாக இலங்கை அரசின் சார்பில் வாக்குறுதி அளித்தார். எந்தப் போரிலும் முதலில் கொல்லப்படுவது சாதாரணமான குடிமக்கள்தான். அதிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று கூறப்படும் போரில் எவ்வாறு பொதுமக்களில் தமிழரில் ஒருவரைக்கூட கொல்லாத யுத்தத்தை நடத்தப் போகிறது என்பது நமக்குப் புரியவில்லை. கொல்லாமையை அடிப்படை ஆதாரமாகக் கொண்ட புத்த மதத்தைப் பின்பற்றும் இலங்கை இதற்கான தனி ஏற்பாட்டை வைத்திருக்கிறதா? என்பதும் புரியவில்லை. இந்த வாக்குறுதி எவ்வாறு பொய்மை நிறைந்தது என்பதை கிளிநொச்சி மருத்துவமனையின் ஏவுகணை தாக்குதல் உறுதி செய்தது. மருத்துவமனையின் இடிந்துபோன கட்டடங்கள் புகைப்படங்களோடு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் பாசில் ராஜபக்ஷவின் தில்லி வருகையை ஒட்டிய காலத்திலேயே நிகழ்ந்தது. இதன் பின்னர் 1300 குழந்தைகள் கல்வி பயிலும் பாடசாலை ஒன்று பரந்தன் என்னும் இடத்தில் குண்டு மழைக்கு இலக்கானது. மருத்துவமனையிலும், பாடசாலைகளிலும் குண்டு போடுகிறவர்களால் எவ்வாறு பொதுமக்களைக் கொல்லாத யுத்தத்தைப் பற்றி பேச முடிகிறது என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

இலங்கை அரசியலிலும் நெருக்கடிகள் கூடுதலாகிக் கொண்டே செல்கிறது. தேர்தல் முடிந்த பின்னர் ராஜபக்ஷவின் கட்சி பெரும்பான்மையை பெறாத கட்சியாகவே ஆட்சி அமைத்தது. வேறு கட்சிகளிலிருந்து 45 நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக எப்படியோ மாற்றிக் கொண்டது. 225 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சியின் இன்றைய ஆதரவு உறுப்பினர்கள் 120 பேர். இதில் 112 பேர் அமைச்சர்கள். இனவெறியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தான், ராஜபக்ஷவால் இப்பொழுது ஆட்சி நடத்தப்படுகிறது. யார் கூடுதலாக இனவெறி அரசியல் பேசுகிறார்களோ அவர்கள்தான் மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியும் என்ற இன வெறி சூழல் இலங்கையில் உருவாகியிருக்கிறது. இந்தத் தொடர்ச்சியின் விளைவுதான், ஜனதா விமுக்தி பெரமுனா இந்தியா தனது பாதுகாப்புப் பணியைச் சரிவரச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இதற்கு இந்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வியும் முக்கியமானதாகும்.

இலங்கையில் தமிழ் மக்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை இந்தியா வழங்கக் கூடாது என்பது முழு தமிழகத்தின் கோரிக்கை. இவ்வாறு ஒரு கோரிக்கையை முன் வைப்பதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது. இந்தப் பின்னணியில் தான் இந்திய ராணுவத்தின் மீது இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுனா சந்தேகத்தை எழுப்பி பகிரங்கமாக அவமானப்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் இந்த அரசு இலங்கையில் இருக்கும் அனைத்து ராணுவத்தினரையும் உடனடியாகத் திருப்பிப் பெற்று கொள்ளல் அவசியம். இந்தியா தனது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள இதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. இதைச் செய்யாவிட்டால், தொடர்ந்து அவமானப்படுவதற்கு இந்தியா தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சி. மகேந்திரன் தினமணி (தலையங்கம்) - கார்த்திகை 3, 2008

Comments