சிறிலங்காவிற்கு எவ்வகையிலும் தோல்வியே நேரும்!

நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ தேசம் மாவீரர்களை நினைவு கூருகிறது. ஒரு புறம் சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களும், மறுபுறம் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குமாக தமிழீழ மக்கள் பலத்த இடர்களை அனுபவிக்கின்ற வேளையில் நடைபெறுகின்ற மாவீரர் தினம் இது.

கடந்த முறை சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்த பல துயிலும் இல்லங்கள் இன்றைக்கு எதிரியின் வல்வளைப்புக்குள் அகப்பட்டுப் போய்க் கிடக்கின்றன. இந்த துயிலும் இல்லங்களுக்கு மாவீரர்களின் உறவுகள் சென்று ஒரு நிமிடம் கண்ணீர் விட்டு தம்மை ஆற்றிக் கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயினும் தமிழீழ விடுதலையையும் மாவீரர்களையும் தமது நெஞ்சில் இருத்தியுள்ள மக்கள் இடம்பெயர்ந்து பல துன்பங்களை சந்திக்கும் நிலையிலும் மாவீரர்நாளை நினைவுகூருகின்றார்கள்.

இதற்கிடையில் மாவீரர் தினத்திற்குள் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவோம் என்று சவால் விட்ட சிங்களப் படைகள் கிளிநொச்சியை கைப்பற்ற முடியாத நிலையில் நிற்கின்றன. விடுதலைப் புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டுவதாக சிங்களப் படையினர் கூறுகின்றனர்.

கிளிநொச்சியை பல முனைகளில் சிங்களப் படைகள் முற்றுகையிட்டுள்ளன. ஒரு புறம் பூநகரியில் இருந்து பரந்தனை நோக்கி முன்னேற முயல்கின்றன. மறுபுறம் அக்கராயனில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முயல்கின்றன. ஆனால் இரண்டு முயற்சிகளும் இதுவரை சிறிலங்காப் படைகளுக்கு கைகூடவில்லை.

பூநகரியைக் கைப்பற்றியதும் சிறிலங்காப் படையினர் முகமாலையில் ஒரு முன்னகர்வை செய்வதற்கு கடும் முயற்சி எடுத்தனர். தொடர்ந்து நான்கு நாட்கள் சிறிலங்காப் படையினர் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். தினமும் கடும் இழப்புகளோடு சிறிலங்காப் படைகள் பின்வாங்கின. நான்காவது நாள் ஒரு கிலோமீற்றர் தூரம் முன்னேறி இருப்பதாக சிறிலங்காவின் படைத் தரப்பு கூறியது.

இந்த நான்கு நாள் சண்டைகளில் 200இற்கும் மேற்பட்டு படையினர் கொல்லப்பட்டும் 300இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்தும் போயினர். இந்த இழப்புக்களைக் கண்டு கதிகலங்கிப் போன சிறிலங்கா அரசு ஒரு கிலோமீற்றர் தூரம் முன்னேறியதாகச் சொல்லி திருப்திப்பட்டுக் கொண்டு முகமாலையில் தனது படைநடவடிக்கையை நிறுத்திக் கொண்டது.

இதையடுத்து பூநகரியில் இருந்து பரந்தனை நோக்கியும் அக்கராயனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் ஒரு பாரிய படை நகர்வை சிறிலங்கா அரசு மேற்கொண்டது. சில நாட்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் ஆகோரத் தாக்குதலினால் முறியடிக்கப்பட்டன.

இந்தச் சண்டைகளில் சிறிலங்காப் படைகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய ஆயிரம் படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளதாக “பாதுகாப்புக் கண்காணிப்பகம்” என்கின்ற அமைப்பை நடத்து முன்னாள் அமைச்சராகிய மங்களசமரவீர தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறான தகவலைத் தெரிவித்தனர்.

ஒன்றரை ஆண்டுக்கு மேலாக நடக்கும் சண்டைகளில் தற்பொழுதே விடுதலைப் புலிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வருவதாக சிறிலங்காப் படைத் தரப்பு கூறுகிறது. சிறப்புப் பயிற்சி பெற்ற படையணிகளை விடுதலைப் புலிகள் சண்டைகளில் ஈடுபடுத்தத் தொடங்கியிருப்பதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

முகமாலை, பூநகரி, அக்கராயன் போன்ற பகுதிகளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தந்த பேரிழப்புகளைக் கண்டு சிறிலங்காப் படைத் தரப்பு சற்று ஆடித்தான் போயிருக்கிறது. மேலும் முன்னேற முன்னேற விடுதலைப் புலிகளின் இந்த எதிர்ப்பு வலுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலையை காரணம் காட்டிக் கொண்டு பரந்தன், கிளிநொச்சியை நோக்கிய நகர்வை சிறிலங்காப் படைகள் தாமதப்படுத்துகின்றன. இந்த நேரத்தில் மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் (ஏ34) ஒரு முன்னகர்வை மேற்கொள்வதற்கு சிறிலங்காப் படைகள் முயன்று வருகின்றன.

ஏதாவது ஒரு முனையில் கடும் இழப்பு ஏற்பட்டு முன்னகர முடியாத நிலை ஏற்பட்டால், உடனடியாக வேறு ஒரு முனையில் முன்னேறுவதை சிறிலங்காப் படைகள் தற்போதைய படை நடவடிக்கையில் ஒரு வழமையாகக் கடைப்பிடித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கிளிநொச்சி சமர் பற்றிய செய்திகளை குறைத்துக் கொண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கின்ற சண்டைகளை பற்றிய செய்திகளை சிறிலங்கா அரசு வெளியிட்டு வருகின்றது.

மாங்குளத்தில் இருந்து ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒலுமடுவை சிறிலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்காப் படைத் தரப்பு கூறுகிறது. இந்தப் பாதையில் சிறிலங்காப் படைகள் தொடர்ந்தும் முன்னேறுவது வன்னியில் மேலும் ஒரு பரந்த பிரதேசத்தை விடுதலைப் புலிகள் இழப்பதற்கு வழிவகுக்கும்.

தற்போதைய நடவடிக்கையில் இடங்களுக்கான வினியோக வழிகளை துண்டிப்பதன் மூலமாகவே சிறிலங்காப் படைகள் பல இடங்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன. இதனாலேயே பல இடங்களிலிருந்து விடுதலைப் புலிகள் சண்டை செய்யாது பின்வாங்க வேண்டியும் ஏற்பட்டது. சிறிலங்காப் படைகளாலும் பல இடங்களை நோக்கி வேகமான நகர்வுகளை செய்ய முடிந்தது.

தற்பொழுது முல்லைத்தீவில் நெடுங்கேணிக்கு அருகில் உள்ள கஜபாபுரத்தில் சிறிலங்காப் படையினர் நிலை கொண்டுள்ளனர். இந்த நிலையில் படையினர் மேலும் சில கிலோமீட்டர்கள் முன்னேறி நெடுங்கேணியைக் கைப்பற்ற, அப்படியே ஒலுமடுவில் நிலைகொண்டுள்ள படையினரும் சில கிலோமீட்டர்கள் முன்னேறினால், தெற்கு வன்னியில் நிலைகொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் அணிகளுக்கான வினியோகப் பாதைகள் துண்டிக்கப்பட்டோ அல்லது அச்சுறுத்தலுக்கோ உள்ளாகும் நிலை ஏற்படும். இது வன்னியின் தெற்குப் புறத்தையும் விடுதலைப் புலிகள் இழப்பதற்கான நிலையை உருவாக்கும்.

தற்பொழுது மேற்கு வன்னி முற்று முழுதாக சிறிலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பில் அகப்பட்டிருக்க, வன்னியின் தெற்குப் புறமும் சிறிலங்காப் படைகளிடம் அகப்பட்டால், அது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை மிகவும் சுருக்கி விடும்.

ஆகவே கிளிநொச்சி நோக்கிய நகர்வுகளில் ஏற்படும் இழப்புகளினால் சிறிலங்காப் படைகளின் கவனம் வன்னியின் தெற்குப் பக்கமாக திரும்புவது தமிழர்களுக்கு சாதகமான விடயம் அல்ல.

சிறிலங்காப் படைகள் நினைத்தது போன்று விடுதலைப் புலிகளின் பலத்தை அழிக்க முடியாது போனதுதான் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது. தற்போதைய படைநடவடிக்கையை சிறிலங்காப் படையினர் சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய பொழுது, அவர்களுடைய முக்கிய நோக்கமாக பெருமளவிலான விடுதலைப் புலிகளை அழிப்பதில்தான் இருந்தது.

ஆனால் அந்த நோக்கத்தில் சிறிலங்காப் படையினரால் வெற்றி பெற முடியவில்லை. ஜெயசிக்குறு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் சந்தித்த இழப்பினை விட, தற்பொழுது குறைந்த அளவிலான போராளிகளையே விடுதலைப் புலிகள் இழந்திருக்கின்றார்கள். அதுவும் ஜெயசிக்குறு சமரில் விடுதலைப் புலிகளின் சிறப்புப் படையணிகள் முக்கிய பங்கு வகித்தன. தற்போது நடைபெறுகின்ற நடவடிக்கையில் இந்த அணிகளின் பெரும் பகுதி பங்குபற்றாது ஏதோ ஒரு பணிக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டிக்கிறன.

ஏற்கனவே உள்ள சிறப்பு அணிகளோடு மேலும் புதிய சிறப்பு அணிகளை விடுதலைப் புலிகள் உருவாக்கி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் சர்வதேச வல்லரசுகளின் முற்று முழுதான ஆதரவுடன் படை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு ஒரு குறிப்பிட்டளவு முன்னேற்றத்தை களமுனையில் காண்பது தவிர்க்க முடியாதது. இந்த நிலையில் வன்னியை சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்தாலும் விடுதலைப் புலிகள் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பார்கள் என்பதை இந்தியா போன்ற சில நாடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சில நூறு போராளிகளே வடக்கிலும் கிழக்கிலும் கரந்தடிப் போர் முறையில் ஈடுபட்டனர். அதுவும் சாதரண துப்பாக்கிகளுடன்தான் கரந்தடிப் போரை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்கு வன்னி ஆக்கிரமிக்கப்பட்டால் ஒரு கரந்தடிப் போரை நடத்துவதற்கு தமிழீழத்தில் இடம் போதாத ஒரு நிலை இருக்கின்றது. காரணம் விடுதலைப் புலிகளின் எண்ணிக்கையும் ஆயுதங்களும் பல்கிப் பெருகி விட்டன. அந்த நிலையில் அவர்கள் சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி சண்டை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இலங்கை முழுவதும் பரவி இடம் விட்டு இடம் நகர்த்தக் கூடிய சிறியரக எறிகணைகளையும் கனரக ஆயுதங்களையும் கொண்டு போராடும் ஒரு இயக்கம் சிறிலங்காவிற்கு ஏற்படுத்தக் கூடிய அழிவுகள் சொல்லில் அடங்காதவை.

இன்றைக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை விட அங்கேயுள்ள படையினரின் எண்ணிக்கை நூறு மடங்கு அதிகம். ஆயினும் படையினரால் எதுவும் செய்ய முடியவில்லை. விடுதலைப் புலிகள் படை முகாம்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்துகின்றனர். அம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பிரதேசங்களில் ஊடுருவி அதிரடித் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

மரபுப் போரிலும் அதரடித் தாக்குதலிலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பல ஆயிரம் போராளிகள் சிறிலங்கா முழுவதும் பரவி சண்டையை தொடர்ந்தால் ஏற்படக் கூடிய விளைவுகளை சிறிலங்கா அரசு உணர்ந்த காரணத்தினால்தான், பெருமளவு போராளிகளை அழிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு படை நடவடிக்கையை தொடங்கியது. ஆனால் அதனது எண்ணம் ஈடேறவில்லை.

இப்பொழுது வன்னியில் நிலைகொண்டிருக்கும் கடும் பயிற்சி பெற்ற புலிகள் ஒரு பாய்ச்சலை நடத்தி சிறிலங்காப் படையினரை அழிக்கப் போகின்றார்கள். அல்லது சிறிலங்கா முழுவதும் பரவி சிறிலங்காவிற்கு அழிவைக் கொடுத்து, சிறிலங்கா அரசை மண்டியிட வைக்கப் போகின்றார்கள்.

வன்னிக்குள் தொடர்ந்து நகர்ந்தாலும் தோல்வி, நகராவிட்டாலும் தோல்வி என்ற நிலையில் சிறிலங்கா அரசு நிற்கின்றது. இந்த நிலையில் நிலங்கள் பறிபோவதினால் வீணாகச் சலிப்புறாது, போராட்டம் எந்த வடிவம் எடுத்தாலும் போராடுகின்ற போராளிகளுக்கு துணையாக நிற்போம் என்று இந்த மாவீரர் நாளில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டியது எம்முடைய கடமையாகும்.

- வி.சபேசன் (27.11.08)

Comments