ஒபாமாவின் வெற்றியின் பின்னால் கிளம்புகின்ற முக்கியமான கேள்விகள்

நான்கு நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றிருக்கிறார். அந்த வெற்றியின் முக்கியத்துவம் யாதெனில் பராக் ஒபாமா ஒரு கறுப்பு இன ஆபிரிக்க வழித்தோன்றலாக இருப்பதேயாகும். ஒரு கறுப்பின தந்தைக்கும் வெள்ளைத்தாய்க்கும் மகனாகப் பிறந்தவர் ஒபாமா. அதனால் அவர் ஒரு தூய கறுப்பினத்தவர் அல்லர் என வாதிடும் ""தூயகறுப்பின வாதிகள்' என்போரும் இருக்கின்றனர்.

இருப்பினும் அவர் தந்தையைப் போன்று ஒரு வெள்ளையினப் பெண்ணை மணம் புரியாது ஒரு கறுப்பின பெண்ணையே மணந்து தன்னை ஒரு ஆபிரிக்க அமெரிக்கராகவே அடையாளப்படுத்தி வந்திருக்கிறார் என வாதிடுவோரும் இருக்கிறார்கள்.இவை இனநிறவகை சார்ந்த நோக்குகளே அன்றி அவற்றுக்கு அப்பாலானவை அல்ல. ஆனால் இவற்றுக்கும் அப்பாலான சூழ்நிலைகளில் வைத்தே பராக் ஒபாமாவின் வெற்றியையும் வெள்ளை மாளிகைப்பிரவேசத்தையும் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாட்டையும் காண வேண்டியுள்ளது.

எதிர்வரும் ஜனவரி இருபதாம் திகதி பராக் ஒபாமா அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் பதவி ஏற்று குடிபுகப் போகிறார். வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பார்க்கும் போது ஒரு வரலாற்று வினோதத்தைக் காண முடிகிறது. 1789 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஷ் வாஷிங்டன் பதவி ஏற்று வெள்ளை மாளிகைக்கு சென்ற காலம் முதல் அந்தப் பதவி வெள்ளையர்களிடமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கறுப்பர்களான நீக்குரோ மக்கள் பலர் அந்த மாளிகையில் அடிமைகளாகச் சேவகம் செய்தே வந்திருக்கிறார்கள்.அத்தகைய ஒரு மாளிகையில் 220 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஆபிரிக்க அமெரிக்க கறுப்பரான பராக் ஒபாமா முதலாவது கறுப்பின ஜனாதிபதியாகி பதவி ஏற்கப் போகிறார் என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவ நிகழ்வு தான்.

இந்நிகழ்வின் ஊடே ஒரு முக்கியமான சில கேள்விகள் எழுந்து நிற்கின்ற யதார்த்தத்தை காணத்தவறவிடக்கூடாது. இக் கறுப்பினத்தவரான ஜனாதிபதி பராக் ஒபாமா யாருடைய அமெரிக்காவிற்கு எத்தகைய அமெரிக்கர்களுக்கு எவ்வாறான பிரதிநிதியாக பணிபுரியப்போகிறார் என்பதே அக்கேள்விகளாகும்.

இப்பொழுது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பராக் ஒபாமா ஜனநாயக கட்சியில் நின்றே வெற்றி பெற்றிருக்கிறார். ஏற்கனவே இருதடவைகள் அப்பனையும், மகனையும் (ஜோர்ஜ் புஷ்,ஜோர்ஜ் டபிள்யூ புஷ்) பதவியில் இருக்கவைத்த கட்சி குடியரசுக்கட்சியாகும். இந்த இரண்டு கட்சி ஆதிக்கத்திற்குத் தான் அமெரிக்கா கொடுத்துவரும் விளக்கம் பலகட்சி ஜனநாயக்க ஆட்சி முறை என்பதாகும். இவ்விருகட்சிகளில் ஒன்றை ஆட்சிபீடம் ஏற்றும் வகையில் தான் அமெரிக்காவின் அரசியல் அமைப்பும் ஏனைய அரசியல் அரசாங்க நிறுவன அமைப்புகளும் மட்டுமன்றி தேர்தல் முறைமைகளும் ஆக்கப்பட்டிருக்கிறது. இதில் அமெரிக்க ஆளும் வர்க்கமும் அதன் கொள்கை வகுப்பாளர்களும் மிகக் கவனமாகவே இருந்து வருகிறார்கள்.

அந்த வகையிலேயே பராக் ஒபாமா அமெரிக்காவின் பெருமுதலாளிகளின் கட்சிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதியாகவே வெற்றி பெற்றிருக்கிறார். அமெரிக்க அரசியல் அமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உண்டு என்ற போதிலும் முதலாளித்துவ வரம்புகளையும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் நடைமுறைப்படுத்துபவராக அன்றி அவற்றை மீறிச் செல்லும் ஒருவராக இருக்கப் போவதில்லை. ""அமெரிக்காவிற்கு மாற்றங்கள் தேவை' என்ற சுலோகத்தையே பராக் ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தில் அழுத்தமிட்டு உயர்த்தி வந்துள்ளார்.

இது சராசரி அமெரிக்க மக்களுக்கு தேவைப்படும் ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் அமெரிக்கா இன்று பொருளாதார அரசியல் இராணுவத் தளநிலைகளில் கடுமையான பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்கி நிற்கின்றது. இவற்றில் மாற்றங்கள் தேவை என்ற பொதுசன அபிப்பிராயம் அமெரிக்க மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், உலகை ஆள நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்திற்கு தன்னை இழக்காது பலவீனமடையாது எவ்வாறு சவால்களுக்கு முகம் கொடுப்பது என்பது மிகப்பெரும் பிரச்சினையாகவே உள்ளது.

தற்போது அமெரிக்காவிலும் மேற்குலகிலும் எழுந்துள்ள நிதிநெருக்கடியும் பொருளாதாரச் சரிவும் மிக முக்கியமான பிரச்சினையாகி நிற்கிறது. அதேவேளை ஈராக் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு யுத்தங்களில் கால்களை ஆழப்புதைத்த அமெரிக்காவினால் அதிலிருந்து மீள முடியாது அடிமேல் அடி வாங்கி வருகின்றது. அவற்றுடன் சோஷலிசம் சாகடிக்கப்பட்டுவிட்டது எனக் கூறி தனது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலான உலகமயமாதலை முன்தள்ளி மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார வளங்களை கைப்பற்றி வந்தது. இந்த உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் கீழ் கடந்த மூன்று தசாப்த காலத்தில் வறுமை, பசி, பட்டினி நோய்கள் வேலையின்மை, சூழல் மாசடைதல், உள்நாட்டு யுத்தங்கள் என்பனவே மேலோங்கி வளர்ந்து காணப்படுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அறங்காவல் நிலையங்கள் போன்று இயங்கி வந்த உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இன்று செயலற்று நிற்கின்றன. ஆரம்பத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதியும் ஆலோசனைகளும் வழங்கி வந்த அந்த நிறுவனங்கள் இன்று வறுமை கல்வியின்மை வேலையின்மை பற்றிய வெறும் புள்ளி விபரங்களை மட்டும் வெளியிடும் நிலையங்களாகக் காட்சி தருகின்ற பரிதாப நிலையைக் காண முடிகிறது. இவற்றின் தோல்வி அமெரிக்காவினதும் மேற்குலகினதும் தோல்வியேயாகும். மாக்சிசமும் சோஷலிசமும் தவறு எனக் கூறி முதலாளித்துவத்திற்குப் புதுப் பூச்சடித்து உலக மயமாதலாகக் காட்ட முற்பட்ட அமெரிக்காவும் மேற்குலகமும் இன்று முகக் குப்புற வீழ்ந்து போகும் நிலைக்கு உள்ளாகி நிற்கின்றன. முதலாளித்துவமும் அதன் உச்ச கட்டமான ஏகாதிபத்தியமும் எவ்வாறு தமது சொந்த விதிகளால் நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் உள்ளாகும் என்பதை எடுத்துக் காட்டி வந்த மாக்சிசமும் சோஷலிசமும் மீண்டும் ஒரு முறை தனது நிசத்தையும் சுயத்தையும் நிரூபித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்கு உள்ளாகி நிற்கிறது.

இத்தகைய ஒரு சூழலிலேயே ஒரு ஆபிரிக்க அமெரிக்கரான பராக் ஒபாமா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமைப் பதவியான ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் நிறத்தால் கறுப்பராக இருப்பினும் வர்க்க நிலைப்பாட்டால் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யக் கூடிய வர்க்க வளர்ச்சி பெற்ற கறுப்பர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இனநிற வேறுபாடுகளுக்கு உள்ளாகி இருக்கும் அமெரிக்க நீக்குரோ மக்கள் மத்தியில் இன்று மேலோங்கி இருப்பது வர்க்க வேறுபாடுதான். இனநிற ஒதுக்கலை நடைமுறைப்படுத்தியதன் மூலம் அமெரிக்க நீக்குரோ மக்கள் பொருளாதாரக் கல்வி நிலையங்களில் மிகப் பின்தங்கியவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

அமெரிக்க சனத்தொகையில் 14 சதவீதமான அம்மக்கள் மத்தியில் வறுமை, வீடின்மை, சுகாதாரக் கல்வியின்மை மிகப்பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றன. இதேபோன்று தான் அமெரிக்காவின் சிறுபான்மையினரான ஹிஸ்பானியர்களும் ஏனையவர்களும் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான இனநிறப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் அமெரிக்க மக்களுக்கு ஒபாமா எத்தகைய தீர்வை முன்வைத்து நடைமுறைப்படுத்தப் போகிறார். கறுப்பின மக்களின் விடுதலைக்குக் குரல் கொடுத்த மாட்டின் லூதர் கிங் கண்ட கனவு பற்றிச் சிலர் நினைவு கூர்ந்து எழுதி வருகிறார்கள். அந்தக் கறுப்பின விடுதலைக்கான கனவை முதலாவது கறுப்பின ஜனாதிபதியான பராக் ஒபாமா நனவாக்குவாரா என்பதே இங்கு முக்கியமாகிறது.

ஆனால், பராக் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்தை உற்று நோக்கினால் சில குறிப்பான விடயங்களைக் காண முடியும். தனது பிரசாரத்தின் போது தான் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்ற படிவம் வெள்ளை இன அமெரிக்கர்கள் மத்தியில் படிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே இருந்து வந்துள்ளார். அதே போன்று அமெரிக்க பெரு முதலாளிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் தனது பிரசாரத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள யூதப் பெருமுதலாளிகளிடம் ஆதரவு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் அவசியமானதாகும். அமெரிக்காவின் ஆளும் வர்க்க கொள்கை வகுப்பாளர்கள் எவரும் அமெரிக்காவில் உள்ள யூதச் செல்வாக்கைப் புறந்தள்ள இயலாது. அதனாலேயே பராக் ஒபாமா தனது வெளிநாட்டு சுற்றுப்பயணப் பிரசாரத்தில் இஸ்ரேலுக்கு சென்று இஸ்ரேலிய ஆளும் வர்க்கத்தினருக்கு ஆதரவு உத்தரவாதத்தை கொடுத்து வந்ததுடன் ஈரான் மீதான கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

கடந்த ஐந்து வருட ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் அமெரிக்காவுக்கு உலக அளவில் பெரும் அவமானத்தைப் தேடித் தந்துள்ளது. அதே வேளை அமெரிக்க மக்களிடம் கடும் எதிர்ப்பையும் தோற்றுவித்து வந்துள்ளது. அதனாலேயே ஒபாமா ஈராக் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி சாதகமாக பிரசாரம் மேற்கொண்டார். அதேவேளை செப்டம்பர் 11 நிகழ்வின் வெறுப்பு, ஆத்திரம் ,சோகம் இன்னும் அமெரிக்க மக்கள் மத்தியில் வெவ்வேறு அளவுகளில் இருந்து வருவதை கவனத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான்மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி மேலும் அமெரிக்க துருப்புக்களை அங்கு அதிகரிக்கப்போவதாகவும் கூறிக்கொண்டமையும் கவனிக்க வேண்டியதாகும்.

மேலும் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் தனது கறுப்பினத் தோற்றத்தைக் கொண்டு ஒபாமா வீழ்ந்து வரும் அமெரிக்க செல்வாக்கைத் தூக்கி நிறுத்த முயற்சிப்பார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இத்தகைய ஒரு கறுப்பின அமெரிக்க ஜனாதிபதியை அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கை வகுப்பாளர்கள் நன்கு பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தெளிவானதாகும். இதற்கு இனநிறவர்க்க மேனிலையாக்கம் பெற்ற அமெரிக்க கறுப்பரான ஒபாமா தகுந்தவராகவே காணப்படுகிறார். நேற்றுவரை இவ்வாறான உயர் வர்க்க கறுப்பர்கள் வெள்ளை ஜனாதிபதிகளின் கீழ் தமது விசுவாசமான சேவையை ஆற்றி வந்திருக்கிறார்கள். இதில் கோலின் பவல், கொண்டலீசா ரைஸ் போன்றவர்கள் பிரசித்தமானவர்கள். ஆதலால் இனநிறத்திற்காக பராக் ஒபாமா அமெரிக்காவின் உழைக்கும் கறுப்பு அல்லது வெள்ளை என சாதாரண மக்களுக்கு சாதகமாகச் செயல்படுவாரென யாரும் எதிர்பார்த்தால் அது வேறும் வெற்று எதிர்பார்ப்பு மட்டுமேயாகும்.

இத்தகைய எதிர்பார்ப்பை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து தெரிவிக்கப்படும் வாழ்த்துக்களில் காணமுடிகிறது. வேடிக்கை யா?தனில் நமது தமிழர் தரப்பு தலைவர்கள் எனப்படுவோர் சிலர் இலங்கை தமிழர் விடிவுக்கு ஒபாமாவின் வெற்றி வழிவகுக்கும் என கூறியுள்ளமைதான். தற்போது இலங்கை தமிழருக்காக பேசி சிறையிலிருந்து வரும் வைகோ ஏற்கனவே பராக் ஒபாமாவை அமெரிக்காவில் சந்தித்துப் பேசி அவருடன் நின்று புகைப்படம் எடுத்ததையும் சாதகமானது என்றே கூறப்படுகிறது. இவற்றுடன் ஒபாமா ஒரு ஆஞ்சநேயப் பக்தன் என்னும் கதை ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளது. இவையாவும் வெறும் ஊடகங்களும் நப்பாசைகளுமேயாகும். ஒபாமா கறுப்பராக இருப்பினும் உலக மேலாதிக்கத்திற்காக நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனாதிபதி என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. எமது தமிழ் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு சூட்டோடு பதில் கொடுத்திருக்கிறார் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் றோபேட் பிளாய்க். ""பராக் ஒபாமா ஜனாதிபதியாக வெற்றிபெற்ற போதிலும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படமாட்டாது. இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கை முன்பு போல் தொடரப்படும்' என்றே கூறியுள்ளமை வெறும் குஞ்சம் கட்டும் தமிழர் தரப்புக் கருத்துக்களை மறுத்துரைப்பதாகவே காணப்படுகிறது.

எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அவற்றின் ஜனாதிபதிகளையும் அவர்களின் உலக மேலாதிக்கப் போக்கையும் புரிந்து கொள்ளாது வெறுமனே இன நிறக் காரணங்களை மேலெழுந்தவாரியாக வைத்து நோக்குவது அறியாமை என்று கூறுதல் வேண்டும். இதற்கு பல பத்தாயிரம் மைல்கள் சென்ற அமெரிக்காவில் உதாரணம் தேடவேண்டியதில்லை. அயல் நாடான தமிழ் தேசியவாதிகளின் தாய்வீடானதுமான இந்தியாவில் எத்தனை ஜனாதிபதிகள் வந்து போனார்கள். தமிழன், சீக்கியன், முஸ்லிம், இந்து தலித், வடஇந்தியன், தென்னிந்தியன் என்றவாறும்.

யாவற்றுக்கும் மேலாக இப்போது ஒரு பெண்ணும் ஜனாதிபதியாகினர். இவர்கள் எல்லோரும் பதவிக்கு வந்த போது "எலும்பில்லா நாக்கினால் எல்லாம் பேச முடியும்' என்று கூறப்படுவது போன்று மையுடைய பேனாவால் அரசியல் ஆய்வாளர்கள் என்போர் சிலர் தத்தமது அக விருப்பை ஆய்வாக எழுதித் தள்ளினர்.


காலகண்டன்

Comments