நிதி வசூல், நிவாரணம் என இலங்கை விவகாரத்தில் புதிய திசை நோக்கி கவனம் ஈர்த்திருக்கிறது தமிழக அரசு.
''இதேபோன்ற நெருக்கடியான சூழ்நிலை ஒரு வருடத்துக்கு முன்பு ஏற்பட்டபோது, இதே ஈழத் தமிழர்களுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டி இலங்கைக்கு அனுப்ப முயற்சித்து, தோற்றுப் போனாரே எங்கள் அய்யா... அவருக்கு என்ன பதில்?'' என்று பழ.நெடுமாறன் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. நாம் நெடுமாறனையே சந்தித்தோம்.
''நிதி வசூல் பற்றி உங்கள் கருத்தென்ன?''
''2006-ம் ஆண்டின் இறுதியில், தமிழகம் முழுவதிலுமிருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டினோம். அவற்றை பாதிக்கப்பட்ட மக்களிடம் சேர்க்கக்கோரி இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்குக் கடிதம் எழுதினோம். சில மாதங்கள் கழித்து, 'கால தாமத்துக்கு வருந்துகிறோம். நீங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்துங்கள்' என்று சொல்லிவிட்டனர். பல்வேறு முயற்சி களுக்குப் பிறகு, 'அரிசி, பருப்புகள் கெட்டுப் போகின்றன. மருந்துகள்
காலாவதி தேதியை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் உதவவேண்டும்' என்று முதல்வர் கருணா நிதிக்கு கடிதம் எழுதினேன். ரியாக்ஷன் இல்லை. அதனால், 'நாங்களே படகுகள் மூலமாகப் பொருட்களை எடுத்துச் செல்வோம்' என்று அறிவித்தோம். உடனே, எங்களைக் கைது செய்தார்கள். ஆகவே, நான் சாகும்வரை உண்ணா விரதம் இருக்க நேரிட்டது. அப்போது கருணாநிதி சார்பாக டாக்டர் ராமதாஸ் வந்து, 'முதலமைச்சருடைய வாக்குறு தியை நீங்கள் நம்பலாம். உடனே, உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்' என்றார். நானும் கைவிட்டேன். ஆனால், அதன் பிறகும் எதுவும் நடக்கவில்லை. எல்லாமே வீணாகிவிட்டது. இருந்தாலும், இன்று அதே முயற்சியை தமிழக முதல்வர் எடுத்திருப்பது எனக்கு ஓரளவு நிம்மதி தருகிறது. எப்படியாவது மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் போய்ச் சேர்ந்தால் சரிதான்.''
''இலங்கை அரசு இந்தப் பொருட்களை, பாதிக்கப் பட்ட மக்களிடம் சேர்த்துவிட முடியுமா?''
''சுனாமி வந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டது ஈழத் தமிழர்கள்தான். இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான உதவிப்பொருட்கள் குவிந்தன. இதை வழங்குவது குறித்து நார்வே பிரதிநிதிகள் தலைமையில் இரண்டு சிங்களவர்கள், இரண்டு தமிழர்கள்கொண்ட குழு முடிவெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டது. 'அப்படிச் செய்தால், அது புலிகளுக்குத்தான் போய்ச் சேரும்' என்று இலங்கை அதிபராக இருந்த சந்திரிகா அதற்கு ஒப்புக்கொள்ளாததுடன், அந்த உதவிப் பொருட்களைத் தன்னிடமே வைத்துக்கொண்டார்.
ஆக, சர்வதேச சமூகம் கொடுத்த உதவியையே தன்னிடம் வைத்துக்கொண்ட ஒரு அரசு, இப்பொழுது இந்தியா கொடுக்கும் உதவியை ஒழுங்கான முறையில் கொண்டுபோய் சேர்க்குமா என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. எனவே, இந்தப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐ.நா. அமைப்பு மூலம் வழங்கவேண்டும். அதை மேற்பார்வையிட தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவேண்டும். இதற்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகள். ஆர்ச் பிஷப்புகள், மௌலானாக்கள் போன்ற சமயப் பெரியோர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்லலாம்.''
''முதல்வர் கருணாநிதி அரசியல் ஞானி. அவர் இலங்கை வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆங்கில நாளேட் டுக்கு அளித்துள்ள பேட்டியில் ராஜபக்ஷே அழைப்பு விடுத்துள்ளாரே?''
''இது பிரச்னையை திசை திருப்புவதற்கான ஒரு தந்திரம் தான். ஏற்கெனவே இந்திரா பிரதமராக இருந்தபோது, ஜி.பார்த்தசாரதி போன்ற மூத்த ராஜதந்திரிகள் மற்றும் அரசு பிரதிநிதிகள் அனுப்பப்பட்டு, வட்டமேசை மாநாடு கள் நடத்தப்பட்டன. அதன்படி தமிழர்களிடம் அதிகாரங்களைக் கொடுப்பதற்கான 'அனெக்சர்-சி' திட்டத்தை ஜெயவர்த்தனே ஒப்புக்கொண்டார். திட்டம் நிறைவேறுவதற்குள் இந்திரா படுகொலை செய்யப் பட்டுவிட்டார். உடனே திட்டத்தை குப்பையில் போட்ட ஜெயவர்த்தனே, ஜி.பார்த்தசாரதி வந்தால் இனிமேல் பேசமாட்டோம் என்றும் சொல்லிவிட்டார். இப்படிப்பட்டவர்கள் வரிசையில்தான் ராஜபக்ஷேவும் வருகிறார். எனவே, அழைப்பை நம்பிப் போவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்யவேண்டும்.''
''இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளை அளிக்காவிட்டால், சீனாவும் பாகிஸ்தானும் முந்திக் கொள்வார்கள். இதனால் நமக்குதான் ஆபத்து என்பதல்லவா இந்திய அரசின் நிலைப்பாடு..?''
''பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சொல்கிற காரணம்தான் இது. இந்தியா ஆயுத உதவி அளித்துவருவதால் சீனாவிலும் பாகிஸ்தானிலும் ஆயுதம் வாங்குவதை இலங்கை நிறுத்திவிட்டதா என்ன? இலங்கைக்குப் பக்கத்தில் இந்தியா தவிர, வேறு எந்த நாடும் கிடையாது. அப்படியிருக்க, எதற்காக இவ்வளவு ஆயுதங்கள்? சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏன் இவ்வளவு அக்கறை? ஒன்று இந்தியாவைத் தாக்கவேண்டும்... அல்லது இலங்கைத் தமிழர்களைத் தாக்கவேண்டும். அதுதானே உண்மை! ராஜபக்ஷே இந்தியாவை ஏமாற்றுகிறார். இந்திய அரசும் அதையே சொல்லி தமிழர்களை ஏமாற்றுகிறது.
இந்திரா பிரதமராக இருந்தபோது, திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படை தளம் அமைப்பது பற்றி ஜெயவர்த்தனே ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட் டார். இதை அறிந்ததும், 'இந்துமாக் கடலில் அந்நிய ராணுவ தளம் அமைவது இந்தியாவுக்கு எதிரான செயல். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என்று பகிரங்கமாக எச்சரித்தார் இந்திரா. பயந்துகொண்டு வாலைச் சுருட்டிக்கொண்டார் ஜெயவர்த்தனே. அது மாதிரி இரும்புக் குரலில் சொல்வதற்கு இன்றைய இந்திய அரசுக்குத் துணிவில்லை.''
''இலங்கையில் நடக்கும் இனப்போரை தடுத்து நிறுத்தவே முடியாதா?''
''ஏழு வருடங்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்தின் வலிமை வாய்ந்த ஆனையிறவு முகாமை புலிகள் நிர்மூலமாக்கினர். மூவாயிரம் சிங்கள வீரர்கள் அப்போது இறந்து போனார் கள். ஆனையிறவைத் தாண்டி யாழ்ப்பாணத்தை நோக்கி புலிகள் முன்னேறினார்கள்.
யாழ்ப்பாணத்தில் முப்ப தாயிரம் சிங்களச் சிப்பாய்கள் சிக்கிக்கொண்டனர்.
அந்தக் கட்டத்தில் இந்தியா தலையிட்டு, புலிகள் மேற் கொண்டு முன்னேறக்கூடாது என்று தடை விதித்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டார்கள்.
அவர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுத்ததைப்போல தமிழர்களைக் கொல்லவேண்டாம் என இலங்கைக்கு இந்தியா நிர்ப்பந்தம் கொடுக்கமுடியாதா?
அது உள்நாட்டுப் பிரச்னை என்று கைகழுவுவதற்குக் காரணம், இந்திய அரசின் உயர் பதவிகளில் இருக்கும் சில தமிழின எதிரிகள்தான். இங்கே, மத்திய உளவுத்துறையின் ஆணைப்படி அறிக்கை விடும் தலைவர்களில் ஜெயலலிதாவும் ஒருவர்.''
''அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்து கொண் டீர்கள். அங்கே தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மத்திய அரசுக்கு கெடுவும் நிர்ணயிக்கப் பட்டது. அது பற்றி..?''
''போர் நிறுத்தம் பற்றியும், இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு தொழில் நுட்ப உதவிகள் செய்வதை நிறுத்துவது பற்றியும் அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த இரண்டு முக்கியமான தீர்மானங்களைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இலங்கை அரசு பிரதிநிதிகளோடு பேசிவிட்டு தமிழகம் வந்து முதல்வரிடம் அதனைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இதுபற்றி வாயே திறக்கவில்லை. அப்படி இருக்கையில், எம்.பி-க்கள் ராஜினாமா என்கிற நிர்ப்பந்தம் அப்படியேதான் இன்னமும் இருக்கிறது. எனவே, முதல்வர் கலைஞர் மீண்டும் ராஜினாமா விஷயத்தை முன்னிலைப்படுத்தி, மத்திய அரசை வற்புறுத்தி இலங்கைத் தமிழர் விடிவுக்கு வழிகோல வேண்டும். நாங்களும் இந்த விஷயத்தை கலைஞரிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்!''
- எம்.பாலச்சந்திரன்
நன்றி: ஜூனியர் விகடன், Nov 05, 2008
Comments