வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம்.
இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான்.
எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வடதிசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது.
ராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக் காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச் சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைத்தது. நமது காலடியில் இலங்கை திரிகோணமலையில் இன்னொரு ராணுவ தளம் அமைக்க முயன்றது. அப்படி அமைந்தால் எப்போது எரிமலை வெடிக்கும் என்ற அச்சத்தோடுதான் இந்தியா உறங்க வேண்டியிருக்கும். எனவே, திரிகோணமலையில் ராணுவ தளம் அமைவது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று இலங்கை அரசை அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி எச்சரித்தார். பலன் கிடைத்தது.
ஆனாலும் தமது ராணுவ தள முயற்சியை அமெரிக்கா கைவிட்டு விடவில்லை. உலகில் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு யுத்தம் நடைபெற வேண்டும். அப்போதுதான் அதன் ஆயுத வியாபாரம் செழித்துக் கொழிக்கும். எனவே, அவசியப்பட்டால் அடிவானத்தில் கூட ராணுவ தளம் அமைக்கும்.
அப்படித்தான் இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக திரிகோணமலையில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியைக் கைவிட்ட அமெரிக்கா அதற்கு அப்பால் தென் திசையில் டிகோ கார்ஷியா தீவில் தளம் அமைத்திருக்கிறது. அந்த ராணுவ தளம் கன்னியாகுமரியிலிருந்து சரியாக 900 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது, இதே ராணுவ தளத்திலிருந்துதான் அதன் போர் விமானங்கள் புற்றீசல்களாகப் பறந்து சென்றன.
டிகோ கார்ஷியா ராணுவ தளம் என்பது நமது காலடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்ற வெடிகுண்டு. வாஷிங்டனிலிருந்து விசையை அழுத்தினால் இங்கே குண்டு வெடிக்கும். எனவே, அந்த ராணுவ தளம் அமைந்த பின்னர் தென் திசை கடற்பகுதியின் பாதுகாப்பை இந்திராகாந்தி பலப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கையில் எந்த நாடும் அழுத்தமாகத் தடம் பதிப்பதை அவர் விரும்பவில்லை.
காரணம், இந்துமாக் கடலில் இலங்கை கேந்திரமான இடத்தில் அமைந்திருக்கிறது. குறிப்பாக, கப்பல் போக்குவரத்தில் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இளைப்பாறும் இடமாக இருக்கின்றது. இதனைத் தொட்டுக் கொண்டுதான் வர்த்தகக் கப்பல்கள் செல்கின்றன. எனவே, இந்தக் கடல் மார்க்கத்தில் அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கிறது.
இன்னொரு பக்கம், பாகிஸ்தானும் சீனமும் இலங்கையில் தமது ஆதிக்க நங்கூரத்தை இறக்கி இருக்கின்றன. கதிர் காமம் அருகே ஐயாயிரம் கோடி ரூபாயில் சீனம் ஒரு துறைமுகத்தையே அமைத்துத் தருகிறது, எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அந்த நாட்டிற்கு இலங்கை அனுமதி அளித்திருக்கிறது. அதேபோல் பாகிஸ்தானின் ஆயுத உதவிகள் பல்கிப் பெருகி இருக்கின்றன. எத்தகைய தலையீடுகள் இலங்கையில் அடியெடுத்து வைக்கக் கூடாது என்று அன்னை இந்திரா எச்சரிக்கையாக இருந்தாரோ, அந்த ஆபத்துக்கள் அங்கே கால் பதித்திருக்கின்றன. அதனைப் பற்றி இன்றைய மத்திய அரசு கவலைப்படவில்லை.
இலங்கையில் மூன்று இடங்களில் அமெரிக்கத் தளங்கள் அமைத்து அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதனைப் பற்றியும் இங்கேயுள்ள அமெரிக்கச் சட்டாம் பிள்ளைகள் இலங்கையை எச்சரிக்கவில்லை.
இலங்கை மீது இந்த நாடுகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அது ஒரு சின்னஞ்சிறிய நாடு. ஆனால் அதனைத் தங்கள் தளமாகப் பயன்படுத்த இந்த நாடுகள் போட்டி போடுகின்றன. ஆம். என்றாவது ஒருநாள் இந்தியாவிற்கு எதிராக இந்தத் தளங்கள் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகின்றன. ஆகவேதான் அன்னை இந்திராகாந்தி விழிப்பாக இருந்தார். அவருடைய பீடத்தில் இன்று அமர்ந்திருப்பவர்கள் தியானத்தில் இருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர் தொடர்பாக இதுவரை இந்தியாவுடன் செய்துகொண்ட எந்த ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு செயல்படுத்தவில்லை. கடைசியாக, ராஜிவ் காந்திக்கும் ஜெயவர்தனேவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாட்டைக் கூட இன்றைய ராஜபட்சே அரசு தீயிட்டுக் கொளுத்திவிட்டது. இதனைக் கூட ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று கேட்டால் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று மன்மோகன் சிங் அரசு மவுன விரதம் இருக்கிறது.
அதே சமயத்தில், ஈழப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும் என்று உபந்நியாசம் செய்கிறார்கள். அப்படித் தீர்வு காண விரும்புகிறவர்கள் அதிகாரிகளை மட்டுமே பயன்படுத்தக் கூடாது. உண்மையிலேயே ஈழப்பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அதன் ஆழத்தை, அதன் விரிவை, அதன் வரலாற்றை உணர்ந்த அரசியல் தலைவர்களும் இடம்பெற வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்.
இன்றைக்கு ஈழப் பிரச்னையை சிங்கள இனவாதக் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன? தனி ஈழம் அமைந்தால் அது அகண்ட இந்தியாவின் ஓர் அங்கமாகிவிடும் என்கிறார்கள். இந்தியா அதற்கு ஆசைப்படுகின்ற ஏகாதிபத்திய நாடு என்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்து தமிழ் ஈழத்தோடு சேர்ந்து தனி நாடாகிவிடும் என்று கதை கட்டுகிறார்கள். தமிழகம் தனி நாடு என்பதனை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், சிங்கள இனவாதிகளின் பிரசார அடிப்படையில்தான் இங்குள்ள அதிகாரிகள் ஈழப்பிரச்னையைப் பார்க்கிறார்கள். ஆகவே, அவர்கள் சிங்கள அரசின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறார்கள்.
ஈழப்பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வுகாண முடியாது என்று ஒரு பக்கம் இந்திய அரசு அருள்வாக்கு சொல்கிறது. ஆம். ராணுவ மோதல்கள் தீர்வாகாது. ஆனால், நடுநிலையில் நின்று நியாயத் தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒரு பக்கம் சிங்கள அரசிற்குத் தற்காப்பு ஆயுதங்கள் வழங்குகிறோம் என்கிறார்கள். உண்மையில் அந்த உதவிகள் ஈழத்தில் ரத்த ஆறுகள் பெருக்கெடுப்பதற்குத்தான் வகை செய்கின்றன. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
1962-ம் ஆண்டு இந்திய - சீன எல்லைப் பிரச்னை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சீனப் போர்க் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களில் நிறுத்துவதற்கான உடன்பாடு ஏற்பட்டது.
பங்களாதேஷ் யுத்தத்தின்போது பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் கராச்சி துறைமுகத்திலிருந்து கொழும்பு வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டுதான் கொல்கத்தா நோக்கிப் பயணப்பட்டன.
இப்படி இந்தியா சோதனைகளைச் சந்தித்தபோதெல்லாம் இலங்கையின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதற்கு இந்த உதாரணங்களே போதும். இனியும் இன்னொரு சோதனையென்றால் சிங்கள அரசு யாருக்குத் துணை நிற்கும்?
தம்மை என்றும் அச்சுறுத்தும் வகையில் தைவானில் ஒரு தளம் அமைவதை சீனம் அனுமதிக்குமா?
எனவே, ஈழப்பிரச்னையை அதன் உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி முகமூடி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டிய நேரமிது
Comments