நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கிளஸ்ரர் குண்டு (Cluster Bomb) பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 111 நாடுகள் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.
ஒஸ்லோ நகரசபை மண்டபத்தில் இம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர சபையின் வெளிப்புறத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 6:30 நிமிடம் வரை தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசு கிளஸ்ரர் குண்டுகளைப் பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது.
வன்னியில் கடந்த சனிக்கிழமை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கிளஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டு 5 வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டனர். 7 சிறார்கள் உட்பட்ட 21 பேர் படுகாயமடைந்தனர்.
அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக இந்த கிளஸ்ரர் குண்டு உள்ளது என்ற பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன.
உலக நாடுகளின் இந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டுக்கு ஆதரவாகவும்
அதேவேளை, சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கிளஸ்ரர் ரக பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றமையை உலகின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாகவும்
சிறிலங்கா அரசைக் கண்டிக்கக் கோரியும்
சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கோரியும்
இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
100-க்கும் அதிகமான உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் 200 வரையான அனைத்துலக உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
"கிளஸ்ரர் குண்டுகளால் தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும் சிறிலங்கா அரசைக் கண்டனம் செய்"
"தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை நிறுத்து"
"சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்து"
"அனைத்துலக சமூகமே, தமிழ் மக்கள் இன அழிப்பினை மௌனித்து பார்த்து இருப்பதேன்?"
"சிறிலங்கா: தோற்றுப்போன அரசு மட்டுமல்ல, பயங்கரவாத அரசு!"
போன்ற சிறிலங்கா அரசைக் கண்டிக்கும் பதாகைகளையும் கடந்த சனிக்கிழமை சிறிலங்காவின் கிளஸ்ரர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த மக்களின் படங்களையும் மக்கள் தாங்கி நின்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நோர்வேஜிய மக்களுக்கு சிறிலங்கா அரசு நடத்திவரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு கொடுமைகளை விளக்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த உடன்படிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக மாலை 5:30 நிமிடத்திலிருந்து நகர சபைக்கு வெளியில் சிறப்புரைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் யூணாஸ் ஸ்தோர உரையாற்றும் போது, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை எனவும், எந்தவகை ஆயுதங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, எந்த வகை ஆயுதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதற்கான புதிய பெறுமதியை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதில் கையொப்பமிடாத ஏனைய நாடுகள் மத்தியிலும் இந்த உடன்படிக்கை தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, அவற்றின் நிலைப்பாட்டில் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இந்தியா போன்ற பெரிய நாடுகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய அரச தலைவர் பராக் ஒபாமா மற்றும் வெளியுறவு அமைச்சர் கில்லாறி கிளின்டன் ஆகியோருடன் இதுவிடயம் தொடர்பாக பேச்சுக்களை நடாத்தவுள்ளதாக நோர்வே தலைமை அமைச்சர் ஜென்ஸ் ஸ்தொல்தன்பர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் யூனாஸ் ஸ்தோர ஆகியோர் தெரிவித்தனர்.
கிளஸ்ரர் குண்டு பாவனைக்கு எதிரான நிலைப்பாட்டினை பராக் ஒபாமா கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிருந்தமை கவனம் கொள்ளத்தக்கதாகும்.
இந்த ஆண்டு மே மாதம் அயர்லாண்ட் தலைநகர் டப்லினில் இடம்பெற்ற மாநாட்டில் இந்த உடன்படிக்கைக்கான முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
Comments