புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது வான் குண்டுத் தாக்குதல்: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் பெருமளவு பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவிலும் பிற்பகல் 1:00 மணியளவிலுமாக இரு தடவைகள் சிறிலங்கா வான்படையின் கிபீர் மற்றும் மிக்-27 ரக வானூர்திகள் ஐந்து தடவைகளுக்கு மேல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த சத்தியசீலன் சத்தியராஜ் (வயது 17), சு.விதுசாயினி (வயது 10) மற்றும் செல்வராஜா செல்வறஞ்சன் (வயது 04) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இதில் பொதுமக்களின் பெருமளவு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதலினால் புதுக்குடியிருப்பு வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
மேலும், முல்லைத்தீவு நகர் மீதும் அதனையண்டிய கிராமமான சிலாவத்தை மீதும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:00 மணிவரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் அளம்பிலைச் சேர்ந்த குமாரசிங்கம் மரியராணி (வயது 45) மற்றும் மாதிரிக் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனி அப்பன் (வயது 32) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
Comments