வட்டக்கச்சி பொதுமக்களை இலக்கு வைத்து கண்மூடித்தனமான வான் தாக்குதல்: 6 மாத குழந்தை உட்பட இருவர் படுகொலை; 9 பேர் படுகாயம்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஆறு மாத குழந்தை உள்ளிட்ட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 7:20 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக போர் வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தின.

இதனைத் தொடர்ந்து முற்பகல் 10:00 மணியளவில் வட்டக்கச்சி மருத்துவமனை அருகில் உள்ள மக்கள் குடியிருப்பக்கள் மீதும் தாக்குதல் நடத்தின.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

இதில் வட்டக்கச்சி மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சைப் பிரிவு கடுமையான சேதங்களுக்குள்ளானது.

முழங்காவில் மருத்துவமனை இடம்பெயர்ந்து வட்டக்கச்சி மருத்துவமனையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடைபெற்ற போது வெளிநோயாளர் பிரிவில் 500 பேரும் உள்நோயளர் பிரிவில் 250 பேரும் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர்.

முதல் வான்தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு உடனடி சிகிச்சைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இரண்டாவது வான் தாக்குதல் மருத்துவமனைக்கு மிக அருகில் நடத்தப்பட்டதனால் உடனடி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தவர்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நின்ற மக்களும் அலறி அடித்துத்கொண்டு ஓடினர்.


[படம்: புதினம்]


[படம்: புதினம்]


[படம்: புதினம்]

அருகாமை பாடசாலையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிதறி ஓடினர்.

இதனால் மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படடுள்ளது.

இத்தாக்குதலில்

சுயநிதி (வயது 28)

ம.ரவிசங்கர் (வயது 36)

சி.ஜீவன் (வயது 27)

சி.சிந்துஜன் (வயது 8)

சி.விதுசன் (வயது 10)

ந.நந்தகுமார் (வயது 44)

மகேந்திரம் (வயது 59)

யே.யோகேஸ்வரன் (வயது 30)

சின்னத்தம்பி லக்சுமி (வயது 52)

ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதேவேளை, வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று நான்கு தடவை சிறிலங்கா வான்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பரந்தன் உமையாள்புரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாடு மேய்க்கச் சென்ற இருவர் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி வட்டக்கச்சி மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடரான சிறிலங்கா படையினரின் வான் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் கல்விப் பொதுத் தராதர சாதராண தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட்டக்கச்சி பிரதேச மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடராக சிறிலங்கா படையினர் வான் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் இத்தாக்குதல்களால் 1000-க்கும் அதிகமான தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



Comments