முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 68 படையினர் பலி; 75 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு
முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடனும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடனும் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.
இதில் சிறிலங்கா படையினர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
ஏகே எல்.எம்.ஜி - 08
ரி-81 ரக எல்.எம்.ஜி - 01
ஆர்.பி.ஜி - 04
கவச எதிர்ப்பு எறிகணை செலுத்தி - 02
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 08
ரி-56 ரக துப்பாக்கிகள் - 02
உள்ளிட்ட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் பகுதியில் நேற்று காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலை பிற்பகல் 12:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.
இதில் சிறிலங்கா படையினர் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
Comments