‘நிஷா’ சூறாவளி வெள்ளத்தால் வன்னியில் பேரவலம் ஆனால் தொண்டுப்பணிக்குத் தொடர்ந்தும் தடை



‘நிஷா’ சூறாவளி வன்னியில் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தால் அங்கு பல நூறாயிரக் கணக்கில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றனர் என்ற தகவல் நெஞ்சை நெருடுகின்றது.
‘பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த’ மாதிரி, யுத்த அனர்த்தங்களால் அல்லற்பட்ட வன்னி மக்களை இயற்கையும் சேர்ந்து வஞ்சித்து பேரவ லப்பட வைத்திருக்கின்றது என்ற செய்தி மனதை உலுப்புகின்றது.

வன்னிப் பெரு நிலப்பரப்பு மீது கொழும்பு அரசு பெரும் எடுப்பில் தொடுத்துள்ள கொடூர யுத்தம் காரணமாகத் தமது வீடு, வாசல்கள், நிலபுலங்களை எல்லாம் விட்டு வெளியேறி, உடுத்த உடையோடு இடம்பெயர்ந்த பல நூறாயிரம் மக்கள், காடுகளில் மரங்களின் கீழும் புதர்களிலும் ஒதுங்கி அவலப் பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே, நிஷா சூறா வளி என்ற இயற்கை அரக்கனும் வன்னியைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறான்.

ஏற்கனவே இடம்பெயர்ந்து, வெள்ளம் தேங்கக் கூடிய தாழ் நிலங்களில் தங்கியிருந்த இந்த மக்களை நிஷா சூறாவளியும் அதனால் எழுந்த பெரு வெள் ளமும் சேர்ந்து ஒரேயடியாகப் பதம் பார்த்திருக்கின்றன.

பல்லாயிரக் கணக்கில் அவலப்பட்டு, அல்லல் பட்டு தவிக்கும் வன்னி மக்களுக்கு - உண்ண உணவின்றி, குடிக்க சுத்தமான தண்ணீரின்றி, உடுக்க உடையின்றி, தங்க இடமின்றி, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளின்றி அல்லாடும் அத்தமிழ் மக்களுக்கு - அவசர அவசரமாக அத்தியாவசிய மனித நேய சேவைகளை விரைந்து வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

ஆனால், அந்த மக்களைத் தனது படைகளின் ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் வைத்திருக்கும் கொழும்பு அதிகார வர்க்கமோ வன்னி அவல நிலை குறித்தோ அங்கு எழுந்துள்ள மனிதப் பேரவல நெருக்கடி பற்றியோ சிரத்தையே காட்டாமல் வன்னியைக் கைப்பற்றி, புலிகளை அழித்தொழிப்பது குறித்து மட்டும் இச்சமயத்திலும் பிதற்றிக் கொண்டிருக்கின்றது.

வன்னியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலையை ஒட்டி, அந்த மக்களுக்கு விரைந்து உதவுவதற்கு இவ்விடயத்தில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்ற - பக்கச்சார்பற்ற - மனிதநேய முகவர் அமைப்புகள் தயாராகக் காத்திருக்கின்றன. ஆனால், அந்த அவசர - அவசிய - மனிதநேய உதவி களை வழங்க விடாமல் இலங்கை அரசின் தடை உத்தரவு குறுக்கே இடைஞ்சலாக நிற்கிறது.

மாவிலாறு அணைக்கட்டு மூடப்பட்டதால் ஒருசில ஆயிரம் சிங்கள விவசாயிகளின் வயல் நிலங்கள் வாடுகின்றன எனத் தெரிவித்து - அதற்கு நியாயம் பெறுவதற்காக - கொடூர யுத்தத்தையே ஆரம்பித்த கொழும்பு அரசு, வன்னியில் பல்லாயிரக் கணக் கில் அப்பாவித் தமிழ் மக்கள் பெரும் சூறாவளி வெள் ளத்துள் சிக்கிப் பரிதவிக்கும்போது கூட மனிதநேய தொண்டுப் பணியாளர்களை வன் னிக்குள் செல்லவிடாது தடுக்கும் தனது கட்டுப் பாட்டைத் தொடர்ந்து நீடித்துத் தனது பௌத்த - சிங்களப் பேரினவாதப் போக்கை வெளிப்படையாகவே உறுதிப்படுத்தி நிற்கின்றது.

பெரு வெள்ளத்தினால் சூழப்பட்டு, மீளவே முடியாத பேரவலத்துக்குள்ளும் சொல்லொணா துன்ப துயரங்களுக்குள்ளும் வன்னி மக்கள் சிக் குண்டு பேரிடர்படும் இச்சமயத்தில், அந்த மக் களுக்கு அவசர - அவசிய - மனிதநேயத் தொண்டு உதவிகள் கிட்டுவதற்கு வசதியாக அத்தகைய மனித நேய உதவிப் பணியாளர்கள் வன்னிக்குச் செல்வதற் குத் தான் விதித்திருந்த தடையை நீக்குவது குறித்து மீள ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் கொழும்பு அரசுக்கு வந்துள்ளது என மனித உரிமை கள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் பிரட் அடம்ஸ் கூறியிருக்கின்றார்.

இச்சமயத்தில் சரியான முடிவை எடுப்பதற்கு அவர்கள் தவறுவார்களேயானால், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்புகள் போன்றவற் றுக்கான பொறுப்பையும் (குற்றத்தையும்) கொழும்பு அதிகார வர்க்கமே ஏற்கவேண்டி நேரும் என்றும் அடம்ஸ் குறிப்பிட்டிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

"இலங்கை அரசு, உதவி வழங்கும் நிறுவனங் களுடனான தனது விளையாட்டை இத்துடன் நிறுத் திக்கொண்டு, மக்களின் உயிரைக் காக்கும் அத்தியாவசியப் பணியை உதவி வழங்கும் மனிதநேய அமைப்புகள் விரைந்து ஆற்றுவதற்கு இடமளித்து, அதற்கேற்ப தனது தடை நடவடிக்கையை விலக்கிக் கொள்ளவேண்டும்" - என அடம்ஸ் மேலும் கோரியிருக்கின்றார்.

தனது ஆக்கிரமிப்பு இலக்கைக் கொடூர யுத்தம் மூலம் எப்படியும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்ற கங்கணத்துடன் போர்வெறித் தீவிரத்தில் சன்னதம் கொண்டு ஆடுகின்ற இலங்கை ஆட்சித்தரப்பின் காதுகளில் இந்த வேண்டுகோள் விழுமா?

அது துர்லபம் என்பதே யதார்த்தமாகும்.


Comments