ஈழத்தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் வி.பி.சிங்கின் பெயர் இடம்பெற்றே தீரும். ராஜிவ்காந்தி அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக் கொண்ட புண்ணியம் இவருக்கே உரித்தானது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் மைந்தனாக ஜூன் 25, 1931-ல் பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங்கை, மண்டா என்ற அரச குடும்பம் தத்தெடுத்துக்கொண்டது. பூனேவில் இருக்கும் ஃபெர்குஸன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அப்போதே அவருக்கு காதல் வந்துவிட்டது. காதலியின் பெயர், காங்கிரஸ். வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது சிங்குக்கு அதீத ஈர்ப்பு இருந்தது, தனக்குச் சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுக்கும் அளவுக்கு.
ஜவாஹர்லால் நேரு காலத்தில் அரசியலில் தடம் பதித்து மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டு வந்த இவரை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தவர் இந்திரா காந்தி. 1980-ல் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக வி.பி.சிங்கைத் தேர்வு செய்தார். கொள்ளை என்றாலே அவருக்கு அறவே பிடிக்காது. நிஜ வாழ்விலும் சரி, அரசியலிலும் சரி. இவர் முதல்வராக இருந்தபோது கொள்ளைக்காரர்களின் அட்டூழியம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.
தான் முதல்வராக வந்தவுடன் அவர்களை வேரோடு அழிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அந்தக் கொள்ளையர்களாலேயே தன்னுடைய சகோதரர் கொல்லப்பட்டதை அடுத்து, வாக்குத் தவறிய தான் இனியும் பதவியில் நீடிக்கக்கூடாது என்று சொல்லி பதவியை ராஜினாமா செய்தார். வெறும் மாநில அரசியல்வாதியாக இருந்த வி.பி. சிங்குக்கு தேசிய கவனம் கிடைத்தது அதன்பிறகுதான்.
1984_ல் அமைந்த ராஜிவ் அமைச்சரவையில் சக்திவாய்ந்த நிதித்துறை இவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நடிகர் அமிதாப்பச்சன், தொழிலதிபர் திருபாய் அம்பானி உள்ளிட்ட பல பிரபலங்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் அம்பானியின் பாலியெஸ்டர் தொழிலுக்கான மூலப்பொருளான சுத்திகரிக்கப்பட்ட டெரிப்தாலிக் அமிலத்தை இறக்குமதி செய்வதற்கு சில கெடுபிடிகளை விதித்தார். இதனால் அம்பானிக்கு பெரும் சிக்கல் உருவானது.
காங்கிரஸ் கட்சியின் நிதியாதாரங்களாக இருந்தவர்கள் மீது அவர் எடுத்த நடவடிக்கைகள் ராஜிவை தர்மசங்கடப்பட வைத்தன. உடனடியாக பாதுகாப்புத்துறைக்கு மாற்றப்பட்டார். அங்கும்போய் மனிதர் வெறுமனே நின்றுவிடவில்லை. ஆயுதக் கொள்முதல் தொடர்பாக பல சங்கதிகளைத் தோண்டித் துருவத் தொடங்கினார். போஃபர்ஸ் பற்றிய பல அந்தரங்கமான தகவல்கள் அவர் வசம் சென்றுவிட்டதாக ராஜிவுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
பிறகு போஃபர்ஸ் விவகாரத்தில் ராஜிவ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த வி.பி.சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனமோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார். பிறகு, 1988-ல் ஜனதா கட்சி, லோக் தளம் ஆகிய கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற கட்சியை உருவாக்கினார். அதன் தலைவரும் அவரே. பிறகு ஜனதா தளம் தலைமையில் மாநிலக் கட்சிகளான தி.மு.க., தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத் ஆகியவற்றை இணைத்து தேசிய முன்னணி என்ற அணியை உருவாக்கினார். அதன் தலைவராக இருந்தவர் என்.டி. ராமராவ்.
1989 தேர்தலில் தேசிய முன்னணி, தேர்தலை எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தேசிய முன்னணிக்குக் கிடைத்தது. ஆனால் யார் பிரதமர் என்பதில் சிக்கல் உருவாகியிருந்தது. களத்தில் நின்றவர்கள் இருவர். வி.பி. சிங் மற்றும் தேவிலால். கூட்டணியின் முக்கியத் தலைவர்களிடம் கருணாநிதியும் என். டி. ராமராவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிசம்பர் 1, 1989. தேசிய முன்னணியின் ஆலோ-சனைக்கூட்டம் தொடங்கியது. வி.பி.?சிங் பேச எழுந்தார். `பிரதமர் பதவிக்கு திரு. தேவிலால் அவர்களின் பெயரை முன்மொழிகிறேன்.' - சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டார் வி.பி. சிங். அவ்வளவுதான். பதறிவிட்டார் தேவிலால். சட்டென்று எழுந்தவர், `நான் இந்தக் குடும்பத்தின் மூத்த சகோதரனாக இருக்க விரும்புகிறேன். ஆகவே, திரு. வி.பி. சிங் அவர்களின் பெயரை இந்தப் பொறுப்புக்கு முன்மொழிகிறேன்' என்று கூறிவிட்டார். அத்தோடு பிரச்னை முடிவுக்கு வந்தது.
வி.பி.சிங் என்ற விஸ்வநாத் பிரதாப் சிங் இந்தியா-வின் பத்தாவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். உண்மையில் தேசிய முன்னணியின் அரசுக்கு முட்டுக்கொடுத்தது எண்பத்தாறு எம்.பி.க்களைக் கொண்டிருந்த அத்வானி தலைமையிலான பாரதிய ஜனதாக்கட்சிதான்.
பத்து ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைக் கோப்புகளைத் தூசுதட்டி எடுத்ததுதான் பிரதமரான பிறகு வி.பி. சிங் செய்த மிகப்பெரிய காரியம். மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு செயல்வடிவத்துக்குக் கொண்டுவர விரும்புகிறது. ஆகவே, மாநில அரசுகள் உடனடியாக இதுவிஷயமாக தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும் என்று, எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதினார். அத்தோடு நின்றுவிடாமல், ஆகஸ்ட் 7, 1990 அன்று மத்திய அரசு நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்பையும் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
ஆனால் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்தது, வட இந்தியாவில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியிருந்தது. உயர்சாதி மாணவர்-கள் கலவரத்தில் ஈடுபட்டதோடு தீக்குளிக்கவும் முடிவு செய்தனர். விஷயம் பிரதமரின் கவனத்துக்கு வந்தது. தெளிவாகப் பேசினார். `இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுடன் சமரசம் செய்துகொண்டு அவர்-களுக்கு சலுகை வழங்குவதற்குப் பதிலாக பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக என்னுடைய பதவியையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்.'
மண்டலில் தப்பித்த அவருடைய அரசைக் காவு வாங்குவதற்கு, அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருவரே காரணமானார். அவர் பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ஜ.க. தலைவர் அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டபோது, அவரை பிகார் மாநிலம் சமஸ்தி-பூரில் வைத்து கைது செய்தது பிகார் அரசு.
என்னுடைய ஆதரவில் மத்தியில் ஆட்சி செய்துகொண்டு, என்னையே கைது செய்வதா என்று ஆத்திரப்பட்ட பா.ஜ.க., மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கிக்கொண்டது. வி.பி. சிங் அரசு பெரும்பான்மை இழந்தது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு-வரப்-பட்டது. அதில் அரசு தோற்கவே, பதவியை ராஜினாமா செய்தார் வி.பி. சிங்.
வெறும் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் கவிஞராகவும் ஓவியராகவும் இருந்த வி.பி. சிங்கை புற்றுநோயும் சிறுநீரகக் கோளாறும் விடாமல் துரத்தியதால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கினார். மருந்துகளின் உதவியோடு செயல்பட்டு வந்த வி.பி. சிங், டெல்லியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நவம்பர் 27 வரைதான் மருத்துவர்களால் அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது.
பல பிராந்தியக் கட்சிகளை ஒருகுடையில் திரட்டி, தேசிய அளவில் அணி அமைக்க முடியும். அந்த அணியை ஆட்சியில் அமர்த்தவும் முடியும் என்று நிரூபித்த புரட்சியாளர் வி.பி. சிங்!

Comments