சிறீலங்கா தூதரகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட 60ம் ஆண்டின் சுதந்திரக் காட்சி ஊடாக தமிழினத்தின் பேரவலத்தை நியாயப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பரப்புரையை முறியடிக்கு முகமாக ஜேர்மனி வாழ் தமிழீழ மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை யேர்மனி பிராங்போட் நகரத்தில் சிறீலங்காத் தூதரகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சி மண்டப நுழைவாயிலுக்கு முன்பாக இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் கடும் மழையையும் பொருட்படுத்தாது பிராங்போட் மற்றும் அதனைச் சுற்றி உள்ள நகர மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறீலங்காத் தூதரகத்தின் பொய்ப் பரப்புரையை முறியடித்தனர்.
இதில் சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட அவலங்கள், யுத்த முன்னெடுப்புகள், படுகொலைகளை, ஆட்கடத்தல்கள் போன்ற விடயங்களை எடுத்துரைக்கும் பதாதைகள், சொற்கட்டுகள், நிழற்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டன. அத்துடன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஈழத்தின் இன்றைய நிலைமைய எடுத்துரைக்கும் யேர்மனி மற்றும் ஆங்கில மொழிகளிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழீழ மக்களால் மேற்கொள்ளப்பட்ட இன்றைய கவனயீர்ப்புப் போராட்டதை அகற்றுமாறு யேர்மனிக்கான சிறீலங்காத் தூதுவரால் காவல்துறையினரை ஊடாக மேற்கொள்ளப்பட்ட முற்றிகளுக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. நீங்கள் எவ்வாறு செய்ய இங்கு உரிமை இருக்கிறதோ! அதேபோன்று அவர்களுக்குக் இங்கு போராட்டத்தை நடத்த உரிமை இருக்கின்றது எனக் கூறி காவல்துறையினர் தமிழ்மக்களுக்கு ஒத்துழைப்பையும் வழங்கினார்கள்.
இக்கவனயீர்ப்பு போராட்டம் நாளை சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுவுள்ளது. இதில் பெருமளவான தமிழீழ மக்கள் நாளை கலந்துகொள்கின்றனர்.
இதேநேரம் நாளை சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் உண்ணாநிலைப் போராட்டம் நாளை சனிக்கிழமை ஹாம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
Comments