மனித உரிமைகளுக்கு அடிப்படையானது சுயநிர்ணய உரிமையே; அதற்காகவே நாம் போராடுகின்றோம்; இது பயங்கரவாதம் அல்ல: பா.நடேசன்
'மனித உரிமை'களுக்கு அடிப்படையானது 'சுயநிர்ணய உரிமை'யே; அதற்காகவே நாம் போராடுகின்றோம்; இது பயங்கரவாதம் அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் நாளினை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உரையாற்றிய போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
எமது தேசத்தில் இவ்வாறான சூழலில் அனைத்துலக மனித உரிமைகள் நாள் போன்ற நிகழ்வுகளை கொண்டாடி அதை நினைவூட்டுவதில் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடையவேண்டும்.
இன்றைய இந்த அனைத்துலக மனித உரிமைகள் நாளானது எல்லா நாடுகளிலும் எல்லா மனித உரிமை அமைப்புக்களாலும், அரச அமைப்புக்கள் பல்வேறுபட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் என பல்வேறு கட்டமைப்புக்களும் இந்த நிகழ்வைக் கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள்.
ஆனால், மனித உரிமை நாளான இன்றைய நாளை உரிமையோடு கொண்டாடக்கூடிய உரிமை எங்களைப்போன்ற மனித உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரு தேசிய இனத்திற்கு மிகவும் அதிக அளவில் இருக்கின்றது.
இந்த மனித உரிமையானது எல்லோருக்கும் சமமாக இருந்தாலும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் மக்களாகிய நாங்கள் இதனைக் கொண்டாடுவதில் பெருமைப்பட வேண்டும்.
தமிழீழத்தைப் பொறுத்த மட்டில், எங்களது மக்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் பல வருடங்களாக இந்த மனித உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராடிக்கொண்டு வருகின்றோம்.
இன்று ஐம்பது வருடங்களுக்கு முன்னரல்ல அதற்கு முன்னரே எங்களுடைய இனம் மனித உரிமைகளுக்காக போராடத் தொடங்கி விட்டது.
1948 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசிடம் இருந்து சிங்கள அரச தலைவர்களுக்கு அதிகாரம் கைமாற்றப்பட்ட அன்றிலிருந்தும் ஏன் அதற்கு முன்னரே எங்களுடைய இனத்தினுடைய- எங்களுடைய மக்களுடைய உரிமைகள் பறிக்கப்பட தொடங்கிவிட்டது.
ஆனால், 1948 இல் இருந்துதான் ஒவ்வொன்றாக கல்வி கற்கின்ற உரிமை பல ஆயிரம் வருடங்களாக பூர்வீக நிலங்களில் பரம்பரை பரம்பரையாக சந்ததி சந்ததியாக வாழ்ந்து வந்த நில உரிமை, அதேபோன்று எங்களுடைய இனத்தின் பிரதான மூலக்கருவான மொழியுரிமை, இவ்வாறு எல்லா உரிமைகளும் எங்களுடைய மொழியுரிமை, கல்வியுரிமை, நிலத்தில் வாழ்கின்ற உரிமை என்று ஒவ்வொரு உரிமைகளாக சிங்கள அரசினால் பறிக்கப்பட்டது.
இவ்வாறு பறிக்கப்பட்ட இந்த உரிமைகளை பெறுவதற்காக அன்றைய பழைய அரசியல் தலைமைகள் அகிம்சை வழியில் அறப்போர் வழியில் போராட்டங்களை நடத்தினார்கள்.
ஆனால், அந்த உரிமைகள் வழங்கப்படுவதற்கு மாறாக உரிமைகள் பறிக்கப்பட்டதுமல்ல இந்த உரிமைக்காக போராடிய போராட்டங்கள் ஆயுத வன்முறை மூலம் சிங்கள தேசத்தினால் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது.
இன்று எங்களுடைய இனத்தை முற்று முழுதாக அழித்தொழிக்க வேண்டுமென்ற நோக்குடன் சிங்கள அரசினுடைய இந்த பயங்கரவாதச் செயல் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை படுமோசமான மனித உரிமை மீறல்களாக எங்களுடைய மக்களின் மீதும் எங்களுடைய தேசத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றது.
மனித உரிமைகள் என்பது எங்களுடைய தேசத்தின் எங்களுடைய இனத்தின் மீது மட்டுமல்ல இந்த உலகில் மனித இனம் தோன்றி எப்பொழுது ஏற்றத்தாழ்வுகள், வர்க்க முரண்பாடுகள் மற்றும் ஓரினம் இன்னொரு இனத்தினை ஒடுக்குகின்ற அடக்குமுறைச்செயல்கள் எங்கெல்லாம் தோற்றம் கொண்டனவோ அன்றே இந்த மனிதஉரிமைகள் பேணப்படுகின்ற தேவை இந்த உலகத்தில் ஆரம்பித்து விட்டது.
நாம் நினைக்கலாம், அண்மைக்காலங்கள் பல நூறு வருடங்களுக்குள் தான் இந்த மனித உரிமை மீறல்கள் தோற்றம் கொண்டுள்ளனவென்று. எங்கெல்லாம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இல்லையோ அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்பதுதான் அர்த்தம்.
இந்த உலகத்தில் ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் எப்போது தோற்றம் பெற்றனவோ; அன்றே இந்த மனித உரிமைகள் மீறப்பட ஆரம்பித்து விட்டது.
ஆனால், மனித உரிமை மீறல்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும்; பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெற்றன. அந்த மனித உரிமைகள் பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெற்றபோது அதற்கு எதிரான போராட்டங்களும் போராட்ட வடிவங்களும் மாறிக்கொண்டே போகின்றன.
இவ்வாறுதான் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை எங்களுடைய மக்களின் மனித உரிமைகள் எவ்வாறு படிப்படியாக மீறப்பட்டு வந்ததோ அவ்வாறே அந்த மீறல்களுக்கு எதிரான போராட்டங்களும், போராட்ட வடிவங்களும் தோற்றம் பெற்றன.
எங்களுடைய மக்களின் ஒட்டுமொத்தமான மனித உரிமைகளை மீளப்பெறுவதற்காக மட்டுமல்ல, எங்களுடைய தேசத்தில் சகல மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக, சகோதரத்துவமாக வாழ்வதற்கான ஒரு விடுதலைப் போராட்டமாக எங்களுடைய மனித உரிமைகளுக்கான போராட்டம் இன்று பெரிய வளர்ச்சி நிலையை அடைந்திருக்கின்றது என இன்றைய அனைத்துலக மனித உரிமைகள் நாளில் நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளலாம்.
இந்த மனித உரிமை மீறல்கள் என்பது எங்களுடைய தேசத்தில் மட்டுமல்ல பல தேசங்களிலும் இந்த மனித உரிமை மீறல்களை யார் செய்கிறார்கள்?
அநேகமான உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் ஐம்பது வருட காலத்தினுள் மனித உரிமை மீறல்கள் யாரால் புரியப்பட்டது என்றால் உண்மையில் ஆதிக்க சக்திகளால் அரச அதிகார பீடங்களினால்தான் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
பல்வேறு தேசிய இனங்களை இந்த அதிகார பீடங்கள் தங்களுடைய அதிகாரங்களினுள், ஆதிக்கத்தினுள் கொண்டு வரும்போது தான் ஒட்டுமொத்தமாக அந்தந்த தேசத்தினுடைய அந்தந்த தேசிய இனத்தினுடைய மனித உரிமைகள் பறிக்கப்பட்டன. இதற்கு எதிராகத்தான் விடுதலைப் போராட்டங்கள் தோற்றம் கொண்டன.
உலகத்தில் எந்த அரசினுடையதும் ஆதிக்க அடக்குமுறைகள் எவ்வாறுதான் அதியுச்சத்திற்குப் போனாலும் மனித உரிமைகளுக்கான போராட்டம் அதைவிட வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பதுதான் உலக வரலாறு.
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள தேசிய இனங்கள் விடுதலை பெற்று நாடுகளாக இருக்கின்ற எண்ணிக்கை அண்ணளவாக 44.
ஆனால், இன்றைக்கு அது இருநூறைத் தாண்டிவிட்டது. இது எதனை எடுத்துக்காட்டுகின்றது எனில் எவ்வாறான அடக்குமுறையும் அதாவது, ஆதிக்க அதிகார சக்திகளுடைய அடக்குமுறை வடிவங்கள், தேசிய இனங்கள் மீதும் அந்த மக்கள் மீதும் ஏவிவிடப்பட்டாலும் மனித உரிமைக்கான போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்கவோ அல்லது அடக்கவோ அல்லது முற்றாக அழிக்க முடியாது என்பதுதான் உலக வரலாற்றினுடைய மனித வரலாற்றினுடைய எடுத்துக்காட்டும் நிரூபிக்கப்பட்டு வருகின்ற உண்மையாகும்.
அந்தவகையில் அன்று தொட்டு இன்று வரை எங்களுடைய தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், சிங்கள அரச அதிகார பீடத்திற்கு எதிராகவும் சிங்கள அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இடம்பெற்று தற்போது எங்களுடைய போராட்டம் அதியுச்ச நிலையை அடைந்திருக்கின்றது.
நாங்கள் ஆயுதம் தூக்கிப் போராடுவது என்பது ஆயுதத்தின் மீது ஏற்பட்ட மோகத்தினாலோ விருப்பத்தினாலோ அல்ல. எங்களுடைய ஒட்டுமொத்த தேசத்தினுடைய எங்களின் மக்களினுடைய சகல மனித உரிமைகளையும்; மீட்டெடுப்பதற்காகவும் எங்களுடைய தேசத்தில் சுதந்திரமும் சமத்துவமும் சகோதரத்துவமும் கொண்ட ஒரு சமூகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு தேசத்தினை உருவாக்குவதற்காகத்தான் நாங்கள் இந்த ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கிறோம்.
உலகத்தின் எந்த இடத்திலே இடம்பெறுகின்ற விடுதலைப் போராட்டங்கள் என்றாலும் சரி, இந்த விடுதலைப் போராட்டங்களானது மனித உரிமை மீறல்கள் அதியுச்ச நிலையை அடைந்தபோதுதான் அங்கே தோற்றம் பெற்றன.
இவ்வகையான விடுதலைப் போராட்டங்களானது ஒட்டுமொத்தமான மனித உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களாக, அதாவது முழுமையாக விடுதலையை அடைவதற்கான போராட்டங்களாக நிகழ்ந்துவருகின்றன.
உலகத்தினுடைய விடுதலைத் தத்துவத்தினுள் பொதிந்திருப்பது என்னவென்றால் எல்லா மனித உரிமைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் சுயநிர்ணய உரிமை என்பதுதான் அடிப்படையாக இருக்கின்றது.
எல்லா உரிமைகளையும் உள்ளடக்குகின்ற ஒரு சொல்தான் சுயநிர்ணய உரிமை என்ற பதம். ஒரு தேசம், ஒரு இனம் தன்னுடைய எதிர்கால அரசியல் சமூக பொருளாதார வாழ்க்கையை தானே சுயமாக முடிவெடுத்து எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற உரிமைதான் சுயநிர்ணய உரிமை.
இதற்குள்தான் எல்லா மனித உரிமைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சாசனங்கள் ஒன்றிலிருந்து இறுதிவரை இதனையே சுட்டிக்காட்டுகின்றன. அங்கே சகல உரிமைகளும் தனிமனித உரிமைகள் மற்றும் ஒரு இனத்தினுடைய பொதுவான உரிமைகள் என எல்லாம் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை ஒரு பக்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் விடுதலை சாசனத்தை இன்னொரு பக்கமும் ஒப்பிட்டுப் பார்த்தால், எங்களுடைய விடுதலைப் போராட்டம் நீதிக்கும் தர்மத்திற்குமான போராட்டம் என்பது எல்லோரினதும் மனங்களுக்குப் புலப்படும்.
எங்களுடைய விடுதலைப் போராட்டமானது நீதியையும் தர்மத்தையும் உடையதும் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்ட சகல மனித உரிமைகளையும் உள்ளடக்கிய போராட்டமும் ஆகும். இருப்பினும் சில நாடுகள் எங்களைத் தடைசெய்திருக்கின்றன.
எங்களுடைய விடுதலை இயக்கத்தை தடை செய்திருக்கின்றவர்கள் 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய மக்கள் தங்களுடைய அடிப்படை உரிமையான வாக்குரிமையை பயன்படுத்தி, தங்களுடைய மனித உரிமையை பயன்படுத்தி, உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.
அதாவது, நாங்கள் தனியரசு அமைத்து சுயமாக வாழத்தான் விரும்புகிறோம் என்பதே அதுவாகும். அதன்பின்பு தொடர்ச்சியாக வந்த எல்லாத் தேர்தல்களிலும் எங்களுடைய மக்கள் தங்களுடைய அடிப்படை மனிதஉரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்தி இதனைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.
எமது மக்கள் தமது அரசியல் அபிலாசையை நிறைவு செய்யத்தான் உலகத்திலுள்ள எல்லா நாடுகளிடமும் எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு கேட்கின்றனர்.
எமது இயக்கம் மக்களினுடைய அபிலாசைகளுக்காக தங்களை முற்றுமுழுதாக அர்ப்பணித்து எங்களுடைய மக்களுடைய ஒட்டுமொத்த மனித உரிமைகளுக்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். அதற்குத்தான் எங்களுடைய தலைவர் தலைமை தாங்குகிறார்.
அதற்காகவே வழிகாட்டுகிறார். அவருடைய தலைமைத்துவத்தில் ஒட்டுமொத்த மனித உரிமைகளுக்கான போராட்டமாகவே இது இடம்பெறுகின்றது. ஓட்டுமொத்தமாக ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டமாகத்தான் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பார்க்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிட்டிருக்கின்ற சுயநிர்ணயத்திற்கான சுய உரிமைக்கான போராட்டமாகத்தான் பார்க்கவேண்டும். அரச பயங்கரவாத செயல்களை செய்கின்ற நாடுகளுக்கு உதவி செய்கின்ற நாடுகளுக்கும் இவ்வாறான தேசங்களுக்கும், எங்களுடைய போராட்டம் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட ஒரு நீதியான நியாயமான போராட்டம் என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையினுடைய, உலகிலுள்ள நாடுகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைக்குட்பட்ட மனித உரிமைகளை உள்ளடக்கிய ஒரு போராட்டமாகவே எமது விடுதலைப் போராட்டம் விளங்குகின்றது.
இன்று எங்களை தடைசெய்த நாடுகள் மனித உரிமைகள் பற்றிப்பேசுகிறார்கள். மனித உரிமைகள் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். எங்களுடைய தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் கூட எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் எங்கள் மீதான தடையை நீக்குமாறும் கேட்டதன் அர்த்தம் என்னவென்றால் எங்களுடைய போரட்டம் நீதியானது, தர்மமானது. எந்தவொரு இனத்தின் உரிமையை மீறுவதோ அல்லது எந்தவொரு தேசத்தை ஆக்கிரமிப்பதோ எமது நோக்கம் அல்ல. நாங்களே எங்களுடைய எதிர்கால அரசியல் அபிலாசைகளை தீர்மானிப்பதற்கான போராட்டமே இதுவாகும்.
எங்களுடைய மக்கள் ஐக்கியநாடுகள் சபையில் எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள், சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டம் இடம்பெறுகின்றது மக்களும் தமது எதிர்பார்ப்பு, அரசியல் அபிலாசைகள் என்பனவற்றை ஜனநாயக ரீதியாக உலகத்திற்கு எடுத்துக்காட்டிருக்கிறார்கள்.
அனைத்துலக சமூகம் என்றாலும் சரி உலக நாடுகள் என்றாலும் சரி இதை ஒரு சாதாரணமான ஒரு போராட்டமாக பார்க்காமல் முழு உலக சமுதாயமே ஏற்றுக்கொண்ட கொள்கைகள் கோட்பாடுகள் என்பனவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமாகத்தான் பார்க்கவேண்டும்.
மனித உரிமை சாசனத்தில் பலவிதமான சாசனங்கள் இருக்கின்றன. எல்லாவிதமான சாசனங்களையும் எடுத்துப்பார்த்தால் மனித உரிமை, நிலவுரிமை, மொழியுரிமை, வாழ்வுரிமை இப்படி பல்வேறுபட்ட உரிமைகள் இருக்கின்றன. இந்த உரிமைகள் எல்லாவற்றையும் சேர்த்துப்பார்க்கும் போது சுயநிர்ணய உரிமை தோற்றம் பெறும்.
இவ்வாறான சுயநிர்ணய அடிப்படையிலும் இறைமையின் அடிப்படையிலும் விடுதலையைப் பெறுவதற்கான முழுத்தகுதிகளும் தமிழீழ தேசிய இனத்திற்கு இருக்கின்றது. அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். வரலாறு ஏற்றுக்கொள்கிறது. வரலாற்றுச்சான்றுகளும் இருக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் ஒரு இனத்திற்கு என்னவிதமான உரிமைகள் இருக்கின்றதென தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. இதன்படி சுயநிர்ணய உரிமை எங்களுக்கு இருக்கின்றது. இதற்காகத்தான் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இவ்வளவு உயிர்த்தியாகம் செய்து போராடுகின்றோம்.
இந்த நேரத்தில் உலக நாடுகள் மனித உரிமைகளைப்பற்றி கதைப்பவர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். மனித உரிமை சட்டங்களை, மனித உரிமை சாசனங்களை உருவாக்கியவர்கள் யாரையும் ஏமாற்றுவதற்காக உலகத்திற்கு ஒன்றைச்சொல்லி இன்னொன்றைச் செய்வதாக இருக்கக்கூடாது.
நீதியான நியாயமான போராட்டங்களை அங்கீகரிப்பதற்கு முன்வர வேண்டும். எங்களுடைய இனம் காலம் காலமாக சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமான அரசாக இருந்ததென்பது வரலாறு.
இன்றைய மனித உரிமை நாளில் மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமைக்காக செயற்படுகின்ற அரசுகள், மனித உரிமை சட்டங்களை இயற்றுகின்ற ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்ற அமைப்புக்கள் எல்லோரும் எங்களை அங்கீகரிக்க வேண்டும்.
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனித உரிமைக்கான போராட்டம் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம். ஆகவே இந்த விடுதலைப்போராட்டத்தை, இவ்வாறான அனைத்துலக மனித உரிமைகள் நாள் போன்ற நாட்களில் நாங்கள் உலகத்தைப் பார்த்துக் எங்கள் மக்களினுடைய எல்லா உரிமைகளையும் நீங்கள் அங்கீகரித்து எங்கள் மக்களுடைய அரசியல் அபிலாசைகள் வெற்றிபெறுவதற்கு முழுஉலகமும் முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அவர்.
Comments