முன்னாள் இந்தியப் பிரதமர் தொடங்கி இன்றைய சிங்கள அதிபர் முடியச் சுட்டிக் காட்டும் தலைப்பு ஈழத் தமிழர் சிக்கலைப் பொறுத்த அளவில் இந்தியப் பிரதமர்களும் சிங்கள அதிபர்களும், பிரதமர்களும் ஒரே மாதிரியான அளவுகோலையே கையாண்டு வருகின்றனர் என்ற உண்மையை வெளிப்படுத்துவதற்கேயாகும். ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி மேற் கொள்ள ஏற்பாடு செய்த இந்திராகாந்தி தான் கச்சத் தீவைச் சிங்கள அரசுக்குத் தூக்கிக் கொடுத்து இன்றவும் தமிழக மீனவர்களின் தீரா இன்னலுக்கும் இழிவுக்கும் அடிப்படை அமைத்துத் தந்தார்.
கொள்கைகளையும் கோட்பாடுகளையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு ஒவ்வொரு தேர்தலிலும் புதுப் புது அணி காணும் பிழைப்புவாத அரசி யல் நடத்தி, தம் கட்சிக்குள் கருத்து முரண்பட்ட பங்காளிகளை வேரறுப் பதையும், கொல்வதையும், சிறையில் அடைப்பதையும் செய்யும் கட்சியின் தலைவர்தாம், ஈழத்தில் போராளிகள், ‘சகோதர யுத்தம்’ நடத்தி, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களைக் கொன்ற தாகக் குற்றம் சுமத்துகிறார்.
புலிகளின் தலைவரைக் கொல்ல நடுவண் அரசின் உளவுத்துறை அமைப் பான ‘ரா’ பிற போராளிக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் திட்டங்களையும் வழங்கியதுதானே ‘சகோதர யுத்தம்’ நிகழக் காரணம். வியட்நாம் பாணியில் பொம்மை அரசுகளை உருவாக்கி அமெ ரிக்கத் தலையீடு நிகழ்ந்ததற்கு இணை யாக ஈழத்திலும் பொம்மை அரசுகள் உருவாவதைத் தடுக்கவும், அமைப் பைத் தற்காத்துக் கொள்ளவும் சகோதர யுத்தம் ஒன்றுதானே வழியாக இருந்தது.
கிழக்குப் பாகிஸ்தானில் மனித உரிமை ஒடுக்குமுறை நிகழ்ந்து இலட்சக்கணக்கான அகதிகள் இந்தியா வுக்குள் வந்து தஞ்சமடைந்தனர். அமெரிக்கா பாகிஸ்தானிய அரசுக்கு ஆதரவாக நின்றது. 1971-ன் இலையுதிர் காலத் தொடக்கத்தில் இந்திரா காந்தி அரசு முறையிலான ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் கிழக்குப் பாகிஸ்தான் தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளும் நிலையிலிருந்து விலகி நிற்கச் செய்வதில் வெற்றி கண்டார். ஐக்கிய நாடுகள் அவையின் பாது காப்புக் குழுவில் பாகிஸ்தானிய அர சுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படாதவாறு தடுத்தார்.
அக்டோபர் 31, 1971-ல் இலண் டனில் அம்மையார் உரை நிகழ்த்தும் போது “நாள்தோறும் இந்தியாவுக்குள் வந்து குவிந்து கொண்டிருக்கும் அகதி கள் விவரிப்பதை நாம் கேட்கும்போது உலகில் மிக அரிதாகவே இத்தகைய அக்கிரமங்களும் காட்டுமிராண்டித் தனங்களும் நிகழ்வதை உணர்கிறோம்” என்று பறை சாற்றினார். அதற்கு முன்பாகவே எல்லைப் புறக் காவல்படையின் மூலம் 10,000 கிழக்குப் பாகிஸ்தானியர்களுக்கு கொரில்லாப் போர்ப் பயிற்சி அளித்து வந்தார். முக்தி வாகினி என்ற எழுச்சி மிக்க அரசு எதிர்ப்புப் படை உருவாக்கத் தில் மட்டுமின்றி அந்தப் படையுடன் இந்தியப் படையும் ஊடுருவிக் கலந்து ஆயுதப் போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்ல ஏற்பாடு செய்தார். இறுதியில் வெளிப்படையான போரை நடத்தி கிழக்கு பாகிஸ்தான் ‘வங்காள தேசம்’ என்ற புதிய நாடாக மலரச் செய்ததை உலகு அறியும்.
அன்று வங்கதேசம் பிரிவதற்கு என்ன புறக்காரணங்கள் நிலவினவோ அதே புறக்காரணங்கள் தான் இன்று ஈழச்சிக்கலிலும் நிலவுகின்றன. வங்காள தேசம் உருவாக பொருளாதாரக் காரணங்கள் மட்டு மின்றி மொழியும் முக்கியக் காரணமாக விளங்கியது. 1948-ல் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த முகமது அலி ஜின்னா “உருது மொழி மட்டுமே பாகிஸ்தான் முழுமைக்கும் ஆட்சி மொழியாக இருக்கும்” என அறிவித்தார். மேற்கில் முகாஜிர் களாலும் கிழக்கில் பீகாரிகளாலும் மட்டுமே பேசப்பட்டு வந்த உருது மொழிக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி முரண்பாடுகளை உருவாக்கியது. மேற்குப் பாகிஸ்தானின் பெரும் பான்மையோர் பஞ்சாபி, சிந்தி ஆகிய மொழிகளையும் கிழக்குப் பாகிஸ் தானில் பெரும்பாலானோர் வங்காள மொழியையும் பேசி வந்தனர்.
மொழிச் சிக்கல் கிழக்குப் பாhகிஸ்தானில் பெருங்கிளர்ச்சி ஏற்படு வதில் முடிந்தது. பிப்ரவரி 21, 1952-ல பல மாணவர்களும் பொதுமக்களும் காவல் துறையின் தாக்குதலால் உயிரிழக்க நேர்ந்தது. அந்த நாள் ஒவ்வோர் ஆண் டும் வங்காள தேசத்திலும் மேற்கு வங்காளத்திலும் மொழிப்போர் தியாகி கள் நாளாக அனுசரிக்கப்பட்டு வரு கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் கல்வி, பண்பாடு, அறிவியல் அமைப்பு 1952-ம் ஆண்டில் நிகந்த இக்கொலைகளின் நினைவாக 1999-ல் பிப்ரவரி 21-ஆம் நாளை ‘அனைத்து நாடுகளின் தாய்மொழி நாள்’ என அறிவித்தது. கிழக்குப் பாகிஸ்தானில் ‘இனப் படுகொலை’ நிகழ்வதாக உலகுக்கு இந்திராகாந்தி அறிவித்தது மிகவும் முக்கியமானதாகும்.
கிழக்குப் பாகிஸ்தானியர் - ஈழத் தமிழர்கள், உருது மொழி - சிங்கள மொழி, ஒன்றுபட்ட பாகிஸ்தானில் இரண்டாந்தரக் குழுமக்களான கிழக்குப் பாகிஸ்தானியர்
ஒன்றுபட்ட இலங்கையில் இரண்டாந்தரக் குடி மக்களான ஈழத்தமிழர்கள், பாகிஸ் தானிய அரசின் படைகளால் மிருகத் தனமாகச் சித்திரவதை செய்யப்பட்டும் கொல்லப்பட்டும் வந்த கிழக்குப் பாகிஸ்தானில் ‘இனப்பாடு கொலை’ - ஈழத்தில் ஆயுதமேந்திய போராளிக் குழு - விடுதலைப் புலிகள் - என்றால் சிலருக்கு ஒவ்வாமை!
இப்படி வங்காள தேசம் உருவா வதற்கு அத்துணைக் காரணங்களுக்கும் கூடுதலாகவே தமிழீழம் மலர்வதற்குக் காரணங்கள் உள்ளன. ஆனால் வங்க தேசத்துக்கு ஓர் அணுகுமுறையும் தமிழீழத்துக்கு ஓர் அணுகுமுறையும் கடைப்பிடித்து வருகிறது இந்திய அரசு. இந்திரா காந்தி அம்மையார் செய்யத் தவறியதைக் காட்டிலும் மிகப் பெரிய தவறைச் செய்தவர் இராஜீவ் காந்தி என்பதைச் சொல்வதற்கே அஞ்சுகின்ற நிலையை உருவாக்கியுள்ளனர் தேச பக்த சிகாமணிகளான தமிழ்நாட்டுக் காங்கிரஸ் காரர்கள்.
“இந்தியப் படையே வெளி யேறு” என்று பழ. நெடுமாறன் 23 பக்க அளவிலான விரிவான கட்டுரையைச் சிறு நூலாக வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது : “உடன்பாடு கையெழுத்தான பிறகு இன்றுவரை சுமார் ஐயாயிரத் திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்திய ராணுவத்தினாலும் அவர்களது கைக் கூலிகளினாலும் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டிருக் கின்றன. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்திய ராணுவத்தினால் கற்பழிக்கப் பட்டிருக்கின்றனர். சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்திய ராணுவச் சிறை முகாம்களில் இன்னமும் சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பல நூற்றுக் கணக்கானவர்களின் கதி என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.” இழிவைச் சுமந்து கொண்டு திரும்பிய இந்திய அமைதிப் படையை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வரவேற்கச் செல்லவில்லை என்பதை வைத்து அரசியல் நடத்தியவர்களே இன்றும் அந்தப் பணியை நாணமின்றிச் செய்து வருகின்றனர்.
தமிழ் நாட்டி லுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அக்டோபர் 2இல் ஈழத் தமிழர்களின் நலன் காக்க வும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை நிறுத்தக் கோரவும், உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியது. மீண்டும் ஓர் எழுச்சி தமிழகம் முழுவதும் பரவியது. மாணவர்கள், வணிகர்கள், திரை உலகினர், சின்னத் திரையினர், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தோர் என இன்னும் பலரும் வெவ்வேறு போராட்ட வடிவங்களை மேற்கொண்டனர். தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் அதில் பங்கேற்காவிடினும், கலந்து கொண்ட கட்சிகள் இரண்டு வாரத்துக்குள் போரை நிறுத்தாவிடில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலகுவதெனத் தீர்மானம் நிறைவேற்றின.
நடுவண் அரசுக்கு நெருக்கடி என்றதும் எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோர் தீட்டிய திட்டப்படி சிங்கள அதிபரின் சகோத ரரும் ஆலோசகருமான பசில் இராச பக்சே டில்லிக்கு வந்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்தார். பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து முதலமைச்சரை சந்தித்து விளக்கம் அளிக்கிறார். அனைத்துக் கட்சித் தலை வர்களுடன் நிகழ்ந்திருக்க வேண்டிய சந்திப்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி இருவர் மட்டுமே உடனிருக்க போர் நிறுத்தம் குறித்த உடனடி உத்தரவாதம் இல்லாமலேயே முதல்வர் மன நிறைவு கொள்கிறார். சார்க் மாநாட்டுக்காக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வந்தார். அதற்குப் பிறகு அதிபர் இராஜ பக்ஷே இந்தியா ஒரு போதும் போரை நிறுத்தக் கோரவில்லை என்று தெளி வாகக் கூறியதோடு தாம் உறுதியாகப் போரை நிறுத்தப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
இப்பொழுது தமிழக முதல்வர் அனைத்துக் கட்சியினரையும் அழைத் துக்கொண்டு டெல்லி செல்லப் போகிறாராம். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் காங்கிரஸ்காரர்களை “டெல்லிக்குக் காவடி தூக்குபவர்கள்” என்று அண்ணா தலைமையிலிருந்த தி.மு.க. கேவலமாகப் பேசியது கருணா நிதிக்குத் தெரியாதா? இந்தி எதிர்ப்புப் போராட்டத் தின்போது நடுவண் அரசில் அமைச்சர் களாக இருந்த சி. சுப்ர மணியம், ஓ.வி. அளகேசன் ஆகிய காங்கிரஸ் காரர்களான தமிழர்கள் பதவி விலகியது வரலாறு அல்லவா?
“மைனாரிட்டி தி.மு.க. அரசு” என்று மீண்டும் மீண்டும் கூறும் செயலலிதா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் வடிவில் காட்சி தந்து கருணாநிதியின் அடி வயிற்றைக் கலக்குகிறாரா? ஈழத் தமிழர் பிரச்சினையில் தொய்வு ஏற்படப் பார்ப்பனியம் செய்து வரும் சூழ்ச்சிக்கு இடதுசாரி அமைப் பும் பலியாகி யிருப்பது மிகப் பெரிய கொடுமை. இனப் படுகொலை என்பதை மூடி மறைக்கப் பேசக் கூடாத பொய்களையெல்லாம் கூறி வருகிறது மார்க்சிஸ்ட் கட்சி.
மாலினி பார்த்தசாரதியை இனம் கண்டு கொதித்து எழுதிய தா. பாண்டியன் இடதுசாரி அமைப்புகளில் ஒன்றின் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்தானே. அவருக்குள்ள இனப் பற்று ஏன் பிற அமைப்புக்கு ஏற்படவில்லை? பூணூலின் தாக்கத்தி லிருந்து விடுபட முடியாவிட்டால் விடுதலைப் போராளிகளை அடையாளம் காண முடியாதபடி கண்கள் பார்வை இழந்துவிட்டதா..? இனி நாம் தில்லிக்குப் போவ தால் பயனில்லை. மன்மோகன் சிங் சென்னைக்கு வரவேண்டும். ஈழத் தமிழர் சிக்கல் குறித்து இங்குள்ள கட்சிகள், அமைப்புகளின் குரலுக்குச் செவி மடுக்க வேண்டும்.
சிங்கள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வரும் மன் மோகன் சிங்கும் இராஜபக்சேயும் நமக்கு வெவ்வேறாகத் தோன்ற வில்லை.
ஈழத் தமிழர்களைக் கருவறுப் பதில் அவர்கள் இருவரும் இணையும் போது நம் வெற்றுப் புலம்பல் எவ்விதப் பயனும் அளிக்கப் போவதில்லை.
மூன்றாவது எழுச்சி இந்தச் சிக்கலின் முடிச்சை அவிழ்க்க பிரணாப் முகர்ஜியும் மன்மோகன் சிங்கும் அலறியடித்துக் கொண்டு சென்னை நோக்கி வருவதாக அமையவேண்டும். அதற்கு இங்குள்ள தமிழீழ ஆதரவு அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டும்.
-தெ.சுந்தரலிங்கம்-
Comments