கனடியன்ஹார்ட்(CanadianHART) அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமை நாளான டிசம்பர் 10 ரொறன்ரோ மாநாகரின் ஸ்காபுரோ பிரதேசத்தில் மனித உரிமை ஆர்வலர்களிற்கு கடிதம் எழுதும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பல கடிதங்கள் எழுதப்பட்டு தொலைநகல் மூலமும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பிவைக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின் பின்னர் உலகநாடுகளில் மனிதஉரிமையைப் பேணப் பாதுகாக்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10ம் திகதி மனித உரிமைப் பிரகடனம் செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆயினும் 60 ஆண்டுகள் கடந்து விட்ட இன்றைய பொழுதிலும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடாகவிருக்கும் சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களது மனிதஉரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களது நிம்மதியான வாழ்வு சிதைக்கப்பட்டு வருகின்றது. இதனை உலகின் கண்முன்னே வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கும் அதன் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களது மனித உரிமைகள் பேணப்படுவததை உறுதி செய்யவேண்டியும் கனடிய அரசிற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கடிதங்கள் அனுப்பும் நிகழ்வினை கனடியன்ஹார்ட் ஏற்பாடு செய்திருந்தது.
இதில் தமிழ் மக்கள் பலரும் கலந்து கொண்டு கடிதங்களை எழுதி அனுப்பிக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் ஆங்கிலத்தில் கடிதங்களை எழுத முடியாதவர்கள் தமிழில் சொல்லச் சொல்ல அதனை அங்கு இருந்த இளையவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அம் மக்களும் கடிதம் எழுதி அனுப்புவதற்கு உதவி செய்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
தமிழ் இளையோரின் முன்னெடுப்பில் பல்வேறு அமைப்புக்களையும் உள்ளடக்கி இலங்கைத் தீவில் இடம்பெயர்ந்து அல்லறும் தமிழ் மக்களிற்கு நிவாரணம் வேண்டி உருவாக்கப்பட்ட கனடியன்ஹார்ட்(CanadianHART) என்னும் இம் அமைப்பினதும் தமிழ் இளையோர் அமைப்பினரதும் முயற்சியின் பயனால் கடந்த வார இறுதியில் சமாதானத்திற்கான கனடிய கூட்டமைப்பு என்னும் அமைப்பு தனது எதிர்வரும் வருடத்திற்கான நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களது அல்லல்கள் தீரத் தாமும் உழைக்க வேண்டும் என்பதனை இணைத்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments