சிறிலங்கா இராணுவத் தளபதியின் கருத்தால் தமிழகம் கொந்தளிப்பு

தமிழ்நாட்டு 'அரசியல் ஜோக்கர்கள்' இலங்கையில் போரை நிறுத்துமாறு கோருவதை இந்திய கொங்கிரஸ் அரசாங்கம் செவிமடுக்காது என சிறிலங்காவின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்தானது தமிழக அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு 'சண்டே ஒப்சேவரு'க்கு செவ்வியளித்துள்ள அவர் கூறியிருந்ததாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டால், அரசியல் கோமாளிகளான நெடுமாறன், வைகோ மற்றும் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைக்கும் வருமானங்கள் குறைந்து விடும்.இந்தியா, இலங்கைப் பிரச்சினையில் கவனமான செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே அது வன்னியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது. விடுதலைப் புலிகளுடனான போரில், அப்பாவித் தமிழ் மக்கள் எவரும் துன்புறுத்தப்படவில்லை என்று இந்தியாவிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்தியா உதவ வேண்டும் என்று கோருகிறோம். நாட்டின் கிழக்குப்பகுதி இராணுவ நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் எங்களது திறமை சிறப்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே அணுகுமுறையைத் தான் வன்னி பகுதியை மீட்பதிலும் இராணுவம் மேற்கொண்டுள்ளது.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் டில்லியில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத்தின் மீது குற்றம் சுமத்துவதில் ஈடுபட்டிருப்பது கவலை அளிக்கிறது. எனினும், இந்தியா இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்று நம்புகிறோம். விடுதலைப் புலிகளுடன் எமது படைகள் போர் நிறுத்தம் செய்வதில் இந்தியா எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில்தான் விடுதலைப் புலிகளை இந்தியா வைத்துள்ளது. புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை குற்றவாளியாக ஏற்கனவே இந்தியா அறிவித்துள்ளது.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பின் இலங்கை பிரச்சினை குறித்து இந்தியா தனது நிலையைத் தெரிவித்துள்ளது. எனவே, புலிகளுக்குச் சாதகமான நிலை எதுவும் இந்திய தரப்பில் ஏற்படப் போவதில்லை. புலிகளுடனான போரில் பீரங்கி தாக்குதலால் 16 ஆயிரம் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் 10 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின் மீண்டும் களம் திரும்பியுள்ளனர். தற்போதைய போரில் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின் முல்லைத்தீவு பகுதியையும் மீட்பது உறுதி''. இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள், சிறிலங்கா தளபதி சொல்லி இருப்பது உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. இங்குள்ள தமிழக தலைவர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் அடிப்படையில் ஒருவரைப் பற்றி மற்றொருவர் விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் இன்னொரு நாட்டவர் தமிழகத் தலைவர்களை இவ்வாறு விமர்சிப்பது எந்த காலத்திலும் ஏற்க முடியாது. அப்படி விமர்சித்திருந்தால் அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

இதேவேளை, சிறிலங்கா தளபதி சரத் பொன்சேகா தமிழக அரசியல் வாதிகளை கோமாளிகள் என்று தெரிவித்த கருத்துக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் கொந்தளிக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: ''இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் முறையிட்டுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்துள்ள போர்ப் படைத் தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கையைப் பொறுத்தவரையில் ராஜபக்ச அதிபராக இருந்தாலும், போர்ப் படைத் தளபதி சரத் பொன்சேகாதான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போல பேசியும், செயல்பட்டும் வருகிறார். எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இலங்கையின் குரலாகவே, அந்த நாட்டு அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, பொன்சேகா தனது கோமாளித்தனமான விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சவும் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். சிறிலங்காத் தூதரை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால் இங்குள்ள சிறிலங்காத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்க வேண்டும். சிறிலங்காப் படைத் தலைவரின் இந்த விமர்சனத்தைத் தமிழக முதல்வர் உடனடியாக பிரதமரின் கவனத்துக்கும், வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் என்று டில்லிக்கு எடுத்துக் கூற வேண்டும். அத்துடன், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இன்னும் 48 மணி நேரத்துக்குள் கொழும்புக்கு அனுப்பி, நேரிலும் எச்சரிக்கை விடச் செய்ய வேண்டும். அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டையை நிறுத்தும் படி வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் தன்மானத்துக்கு சிறிலங்காப் போர்ப் படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் என்பதை டில்லிக்கு எடுத்துக் கூற வேண்டும்''. இவ்வாறு அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் அவரின் தரைப்படைத் தளபதியுமான சரத் பொன்சேகாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இந்தியாவிலிருந்து சிறிலங்கா தூதுவரை வெளியேற்ற வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,இலங்கைத் தீவில் தமிழ்க் குலத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு இராணுவத் தாக்குதலை நடத்தித் தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்து வருவதை சிங்கள அரசு நிறுத்த வேண்டும்; போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், 'தமிழக அரசியல் கோமாளிகள் சொல்வதை இந்திய அரசு கேட்காது' என்று சிறிலங்கா இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கொக்கரித்து உள்ளார்.

"இந்திய அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்கவில்லை என்றும், இனியும் கேட்காது என்றும், இது குறித்து இந்தியப் பிரதமர் தம் கருத்தை எங்களிடம் தெரிவித்து உள்ளார்" என்றும் கூறி உள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத் தீர்மானத்தின் மை உலர்வதற்கு உள்ளாக, டில்லியில் இந்தியப் பிரதமரைச் சந்தித்துவிட்டு, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை போர் நிற்காது' என்று மமதையோடும், அடங்காத் திமிரோடும் மூர்க்கத்தனமாகப் பேசியது இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.

இந்த வெட்கக்கேடான இழிசெயலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காததால்தான், ராஜபக்சவின் ஏவுதலோடு சிங்களத் தளபதி தமிழகத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்திப் பேசும் துணிச்சலைத் தந்து உள்ளது. சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் தமிழக முதல்வர் கூட்டியபோதும் டில்லிக்குச் சென்று கட்சித் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்தபோதும்; இவையெல்லாம் கண்துடைப்பு நாடகம் என்றும் இந்திய அரசு போர் நிறுத்தத்தை வற்புறுத்தப் போவது இல்லை என்றும் தெரிவித்தேன். தற்போது சிங்களத் தளபதி, தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்தி உள்ள அக்கிரமம் மன்னிக்க முடியாத கொடுமை ஆகும்.

இலங்கையில் தமிழ் இன அழிப்புப் போரைச் சிங்கள அரசு நடத்துவதற்கு கதுவீகள், ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி, இராணுவ ரீதியான தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து இந்தப் போரைப் பின்னால் இருந்து இந்திய அரசு இயக்கி, தமிழ் இனத்துக்குத் துரோகம் இழைப்பதால் ஏற்பட்ட அகம்பாவமும் துணிச்சலும்தான் சரத் பொன்சேகாவை இப்படிப் பேச வைத்து உள்ளது.

இந்தியா உலகின் அணு ஆயுத வல்லரசுகளுள் ஒன்று ஆகும். ஆனால், சுண்டைக்காய் நாடான இலங்கையில் சிங்கள இனவாத அரசு, ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழகத்தை, அதன் சட்டமன்றத் தீர்மானத்தைக் கிள்ளுக்கீரையாக நினைத்து, மண்டைக் கொழுப்புடன், எக்காளமிடும் அவமானத்தை இந்திய அரசுதான் ஏற்படுத்தி உள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரை டில்லிக்கு வரவழைத்து, 'போர் நிறுத்தம் செய்கிறாயா? இல்லையா' என்று எச்சரிக்கை செய்வதற்குப் பதிலாக, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை சிறிலங்காவுக்கு தூது அனுப்பப் போகிறோம் என்று சொல்வதே மானக்கேடு ஆகும்.

'இனியும் பொறுப்பதற்கு இல்லை' என்று தமிழ் மக்கள் எரிமலையாகச் சீறவேண்டிய தருணம் ஏற்பட்டு விட்டது. இலங்கையில் தமிழ் மக்களைப் படுகொலை செய்துகொண்டே, இந்தியக் கடலிலும் நுழைந்து தமிழக மீனவர்களையும் தாக்கி கொலை பாதகம் செய்துகொண்டே இத்தனைக்கும் மேலாக தமிழகத் தலைவர்களைத் துச்சமாகக் கருதி கேலி புரியவும் ஏளனம் செய்யவும், சிங்களத் தளபதி முற்பட்டு விட்டார். இது தமிழ் இனத்துக்கும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இழைக்கப்பட்ட பெருத்த அவமானம் ஆகும்.

இந்தியப் பிரதமர் உடனடியாக சிறிலங்கா அரசுக்குப் பலத்த கண்டனம் தெரிவிக்க வேண்டும். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் நிபந்தனை அற்ற மன்னிப்புக் கோருமாறு இந்தியா நிர்பந்திக்க வேண்டும்; அப்படி மன்னிப்புக் கேட்காவிடில் சிறிலங்கா தூதுவரை இந்தியாவில் இருந்து மத்திய அரசு வெளியேற்ற வேண்டும். சிறிலங்கா அரச தலைவரும் தளபதியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், சிறிலங்கா தூதுவரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கோரி, டிசம்பர் 10ம் நாள் முற்பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் முன்பு எனது தலைமையில் கறுப்புக்கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழர்களின் மானம் காக்க நடத்தப்படும் இந்த அறப்போரில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இதேவேளை, சிறிலங்கா இராணுவத் தளபதியின் கருத்தானது தமிழகத்தின் பல்வேறு மட்டத் தலைவர்களையும் ஆத்திரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு சிறிலங்கா உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அது பெரும் கொந்தளிப்பாக மாறும் எனவும் அது சிறிலங்காவிற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தம் எனவும் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


Comments