படைபலம் பேணப்படுவதற்கு அரசியல் மயமாக்கல் தேவை


கடந்த வாரம் பல எதிர்பார்ப்புக்களுடன் கழிந்து சென்றுள்ளது. விடுதலைப்புலிகள் மாவீரர் வாரத்தை கடைப் பிடிக்கும் வாரம் என்பதனால் இலங்கை அரசு நாடு முழுவதும் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இலங்கை முழுவதும் பதற்றம் நிறைந்த ஒரு சூழ்நிலையே காணப்பட்டது. மாவீரர் தினத்திற்கு முன்னர் கிளிநொச்சி நோக்கி அல்லது பரந்தன் சந்தி நோக்கி ஒரு பாரிய நகர்வை மேற்கொள்வதற்கு இலங்கை படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் எதிர் பார்த்த பலனை கொடுக்கவில்லை.

முகமாலை களமுனையில் மேற்கொள்ளப்பட்ட படை நகர்வுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த் தாக்குதலை மேற்கொண்டதால் அங்கு மேற்கொள்ளப்பட்ட படை நகர்வுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனைத்தொடர்ந்து பூநகரியை கைப்பற்றிய 58 ஆவது படையணியின் 2 ஆவது மற்றும் 3 ஆவது பிரிகேட் படையணிகளை சேர்ந்த 17 ஆவது மற்றும் 12 ஆவது கெமுனுவோச் றெஜி மென்ட், 8 ஆவது சிங்க றெஜிமென்ட் ஆகிய படையணிகள் குஞ்சுப்பரந்தனை நோக்கிய நகர்வில் ஈடு பட, 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டை சேர்ந்த 3 ஆவது கெமுனுவோச் றெஜி மென்ட், 9 ஆவது விஜயபா, 8ஆவது 10 ஆவது சிலோன் இலகுகாலாட் படையணிகள் என்பன அக்கராயனின் வடக்கில் இருந்து நகர்வை மேற் கொண்டிருந்தன.

இதன் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) கடும் மோதல் மூண்டிருந்தது. இந்த சமரில் 43 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 70 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 8 இராணுவத்தினரின் உடல்களும், ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர். மேலும் முறிகண்டிக்கு வடக்காக நடைபெற்ற மோதல்களில் 35 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். அரச தரப்பு இது தொடர்பில் எதுவும் தெரிவிக்கவில்லை.



எனினும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இழப்புக்கள் அதிகம் என வேறு தகவல்கள் தெரிவிப்பதுடன், படை நடவடிக்கைகளும் அதன் பின்னர் ஒரு முடக்க நிலையை அடைந்துள்ளதை காணக் கூடியதாக உள்ளது. இதனிடையே 58 ஆவது படையணியின் பரந்தன் நோக்கிய நகர்வுகளை இலகுவாக்கும் நோக்கத்துடன், இராணுவத்தின் 8 பேர் அடங்கிய கொமாண்டோ சிறப்பு அணி ஒன்று விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் நுளைந்த போது அவர்களை விடுதலைப்புலிகளின் 12 பேர் கொண்ட சிறப்பு அணி ஒன்று வழி மடக்கி தாக்கி அழித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலின் போது முற்றாக அழிக்கப்பட்ட சிறப்பு இராணுவ அணியின் சடலங்களில் பழுதடையாத நிலையில் உள்ள 7 சடலங்களை விடுதலைப்புலிகள் பின்னர் அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் கையளித்திருந்தனர். மாவீரர் தினம் நெருங்கி வந்த தினங்களில் இராணுவத்தின் நகர்வுத்திட்டங்கள் ஒரு முடக்கநிலையை அடைந்த போது பருவமழை வன்னியில் இடம் பெயர்ந்த மேலும் பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் பெய்த கடும் மழையினால் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் அதிக துன்பங்களுக்கும், தொற்றுநோய்களுக்கும் உட் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே அங்கு பெய்துவரும் கடும் மழை இராணுவத்தினருக்கும் பாரிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினரால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகள் பல வெள்ளத்தினால் அடித்துச் மக்களுக்கு செல்லப்பட்டுள்ளதுடன், வெள்ளத்தில் மிதப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளத்தினால் இராணுவத்தினரின் பல பதுங்குகுழிகள் அழிவடைந்துள்ளதாகவும், விடுதலைப்புலிகளின் தாக்குதலில் இருந்து தற்காப்பு தேடுவதற்கு கூட படையினர் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சிக்கு தெற்காக உள்ள சிறிய குளம் ஒன்றின் அணைக்கட்டு திடீரென உடைந்து வெள்ளம் பாய்ந்ததால் படைச் சிப்பாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மோதல்களில் காயமடையும் மற்றும் கொல்லப்படும் படையினரை ரி55 டாங்கிகள் மூலமே இராணுவத்தினர் அகற்றிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே வன்னியில் விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வு சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.

வன்னியில் உள்ள பல பகுதிகளிலும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் தீபங்களை ஏற்றியதுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது வருடாந்த மாவீரர் தின உரையினையும் ஆற்றியுள்ளார். விடுதலைப்புலிகளின் இந்த நிகழ்வை சீர்குலைக்கும் முனைப்புடன் இலங்கை வான்படையின் மிக்27 ரக குண்டு வீச்சு விமானங்கள் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது வியாழனன்று மாலை 5.15 மணியளவில் குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியிருந்தன.

கடந்த வருடமும் இதே போன்ற தாக்குதலை வான்படை விமானங்கள் நிகழ்த்தியிருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது உரையில் தற்போதைய படை நடவடிக்கை அதற்கான எதிர்விளைவுகள் தொடர்பாக அதிகம் குறிப்பிடாத போதும், சில முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

* "வன்னி மண் மீது சிறீலங்கா அரசு முழு படை வளத்தையும், ஆயுத வளத்தையும், பொருளாதார வளங்களையும் வாரி இறைத்து பெரும் போரை நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றது. இந்த போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதுடன், விரிவாக்கம் பெற்றும் வருகின்றது. எனினும் உலகில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் சந்திக்காத பாரிய நெருக்கடிகளை விடுதலைப்புலிகள் சந்தித்து மீண்டெழுந்து வந்துள்ள நிலையில் தற்போதைய நெருக்கடி பெரியது அல்ல. அதனை மக்கள் பலத்துடன் முறியடிப்போம்

* "2001 ஆம் ஆண்டு படைச் சமவலு விடுதலைப் புலிகளின் பக்கம் திரும்ப முற்பட்ட வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. இந்த போர் நிறுத்தக் காலப்பகுதியில் இலங்கை அரசு படைத்துறை ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தன்னை கட்டியெழுப்பியுள்ளது.

அதற்கு உலகின் பல முன்னணி நாடுகளின் பங்களிப்புக்களும் முக்கியமானவை. 'அதாவது தற்போது நடைபெற்றுவரும் போரை கருதினால் இலங்கை அரசு மிகப்பெரும் படைவளம் கொண்டு விடுதலைப்புலிகளுடன் மோதி வருவது கவனிக்கத்தக்கது. 1999 இல் 9 டிவிசன்களை கொண்டிருந்த இராணுவம் தற்போது 15 டிவிசன்களை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.

வெற்றிநிச்சயம் படை நடவடிக்கையின் போது மாதம் ஒன்றிற்கு 432 மில்லியன் ரூபாய்களை செலவிட்ட அரசு தற்போது படை நடவடிக்கைக்காக மாதம் ஒன்றிற்கு 1275 மில்லியன் ரூபாய்களை செலவிட்டு வருகின்றது. வன்னி மீது 14.4 மில்லியன் கிலோ வெடிமருந்துகளை கொட்டியுள்ளதாகவும் அரசு மார் தட்டியுள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளை ஏவி விட்டதில் அனைத்துலகத்தின் முன்னணி நாடுகள் சிலவற்றின் பங்குகள் முக்கியமானவை.

மெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கை படையினருடன் கூட்டுப் பயிற்சிகளையும், ஒத்திகைகளையும் மேற்கொண்டிருந்தன. இலங்கை படையினரை தொழில்நுட்ப ரீதியாக இந்தியா கைதூக்கிவிட, அமெரிக்கா சிறப்புப் படையணிகளின் நடவடிக்கைகளுக்கும் ஆழ்கடல் நடவடிக்கைகளுக்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதங்களை வாரி வழங்கியிருந்தன. இவை தவிர போர் நிறுத்த காலத்தில் இந்த நாடுகள் பல, விடுதலைப் புலிகளின் மீது மேற்கொண்ட தடைகள் பேச்சுவார்த்தையின் சமநிலையை குழப்பியிருந்தது.

எனினும் இந்த சக்திகளின் கூட்டு முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால் உலகின் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட வேண்டும். அது தற்போது களத்திற்கு வெளியில் மெல்ல மெல்ல வலுப்பெற்றும் வருகின்றது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியானது மிகவும் முக்கியமானது. அதன் வலிமை அமெரிக்க அரசின், புலிகளுக்கு எதிரான கொள்கைகளில் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாது, மலேஷியா, தென்ஆபிரிக்கா, மொரிஷியஸ் உட்பட தமிழ் மக்கள் பரந்து வாழும் பல நாடுகளிலும், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஏற்பட்டுவரும் ஆதரவுகளும், எழுச்சிகளும் தற்போதைய போரியல் சூழ்நிலையில் மிகவும் முக்கியமானது.

விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் அது எதிரொலித்துள்ளது. அவர் தமிழகத்தின் ஆதரவுகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளதுடன், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களின் ஆதரவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அதாவது உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழினத்தின் ஆதரவுடன் போரிட்டு வருகின்றோம் என்ற கருத்தும் இங்கு முக்கியமானது.

அதாவது, விடுதலைக்காக போராடும் மக்கள் தமது அரசியல் முதிர்ச்சியை உயர்வாக பேணும் போதுதான், படைத்துறை வெற்றிகளைக்கூட தக்கவைக்க முடியும் என்பது உலகின் வரலாறு. ஒரு படைவலுச்சமநிலையை பேணுவதாக இருந்தாலும் மக்களின் அரசியல் உறுதித்தன்மையும், அரசியல் மயப்படுத்தல்களும் அவசியம். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உறுதிப்பாட்டை பேணுவதற்கு உலகின் ஒட்டுமொத்த தமிழினமும் தமது பலத்தை ஒருங்கே குவிக்க வேண்டும் என்ற பொருள் பொதிந்துள்ளது.

அது ஒரு இராஜதந்திர நகர்வு என்பதுடன், அதுவே காலத்தின் தேவையும் கூட. உலகில் பரந்து வாழ்ந்துவரும் பொஸ்னியர்களும், அல்பேனியர்களும் ஒன்று சேர்ந்தபோது அவர்களின் தேசங்கள் விடுதலையை கண்டிருந்தன. களமுனைகளில் எட்டப்படும் வெற்றிகளை தக்கவைப்பதற்கும், இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கும் களமுனைகளுக்கு அப்பால் இராஜதந்திர மற்றும் அரசியல் நகர்வுகள் தேவை. அதனை நோக்கியே இந்த வருடத்தின் மாவீரர் தின உரையின் பெரும்பகுதி அமைந்துள்ளது.

- வேல்ஸிலிருந்து அருஷ்


Comments