வட்டக்கச்சியில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீதான சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்துள்ளார்.
வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கட்சன் வீதி தகரப் பிள்ளையார் கோவிலடி மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

கட்சன் வீதி மற்றும் குடிமத்தி மக்கள் குடியிருப்புக்களில் சரமாரியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதன்போது, வீட்டில் துணி ஏணையில் உறங்கிக்கொண்டிருந்த ஐந்து மாத குழந்தையான ஜெயரூபன் அஜந்தா கொல்லப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாயாரான ஜெயரூபன் ஜேம்ஸ்ராணி (வயது 26) படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பகுதியில் ஏற்கனவே சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஆறு வயது சிறுமி பாடசாலை சீருடையில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments