உதவும் கரங்கள்


‘பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது' என்பார்கள், அதுதான் இப்போது வன்னியில் நடக்கிறது. இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து வயல்களிலும், வாய்க்கால் ஓரங்களிலும், தென்னந்தோப்புகளிலும் காடுகளிலும் தங்கியிருந்த மக்களை மழைவெள்ளமும் ‘நிஷா' புயலும் கடுமையாகத் தாக்கியுள்ளன.

கடந்த 25ம் திகதி பெய்த மழை வன்னியின் எல்லாக் குளங்களிலும் அபாய நிலையை உருவாக்கியது. விசுவடுக்குளம், இரணமடுக்குளம், கல்மடுக்குளம், உடையார்கட்டுக்குளம், முத்தையன்கட்டுக் குளம், தண்ணிமுறிப்புக்குளம் என எல்லாக்குளங்களும் உடைப்பெடுக்கும் நிலைக்கு வந்தன. வெள்ளம் எல்லா இடங்களிலும் தன்னுடைய ருத்திர தாண்டவத்தை ஆடியது. பல வீடுகள், குடிசைகளை அது அடித்துச் சென்றுவிட்டது. சில வீடுகளில் நுழைந்து நின்று கொண்டது. வாசலில் கழற்றிவிட்ட செருப்புகள் முதல், சமையற் பாத்திரங்கள், உடுப்புகள் என மிதிக்கும் பொருட்களையெல்லாம் அது அடித்துச்சென்றது.

இரவிரவாகக் கொட்டிய மழை, எல்லோருடைய தூக்கத்தையும் கலைத்துவிட்டு, இருக்குமிடங்களில் இருந்தே சங்களை வெளியேற்றியது. சனங்கள் இரவோடிரவாக பாடசாலைகளுக்கும் தேவாலயங்களுக்கும் நனைத்தபடியே இடம்பெயர்ந்தர்கள். அட, மழைதான் இப்படித்தாக்கிவிரட்டுகிறது. என்றால், மன்னார் கடலில் உருவாகிய ‘நிஷா' புயல்வேறு அதனோடு சேர்ந்துகொண்டது.

மணிக்கு எண்பது கிலோ மீற்றர் வேகத்திலடித்த புயற்காற்றின் தாக்கம் யாழ்ப்பாணத்தில்தான் கணிசமாக இருந்தது. அங்கே மின்சாரம் இல்லை. வீதிகளில் போக்குவரத்துக்கள் இல்லை. பல வீடுகளுக்கு கூரைகள் இல்லை. இன்றும் பல இடங்கள் - தாழ்ந்த நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.




புயல் எல்லாவற்றையும் நாசமாக்கியது. யாழ் மருத்துவமனையின் பல விடுதிகள், வெளிநோயாளர் பிரிவுப் பகுதி எல்லாம் வெள்ளம் ஏறிக்கடந்தாடியது. போதாக்குறைக்கு ‘நிஷாவின் கூத்து வேறு. குருநகர், பாசையூர், ஈச்சமோட்டை, தீவுப்பகுதிக்குடியிருப்புகள், நாவாந்துறை, காரைநகர் பிரதேசம் எல்லாவற்றிலும் மக்கள் என்ன, ஏது என்றே தெரியாமல் திகைத்துவிட்டனர். இந்தப் பகுதிகளில்தான் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. யாழ்ப்பாணத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இப்படியொரு ஊழிக்கூத்து - அனர்த்தத்தைக் கண்டிருக்கிறோம் என்றார்கள் முதியவர்கள்.

குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் இதுவொரு புதிய அனுபவம். தலைமுறை தோறும் இப்படி ஏதோ ஓர் அனுபவம் வந்து சேர்ந்துவிடுகிறது. இயற்கையும் கொஞ்சம் கூடுதல் சுவாரஷ்யமான விளையாட்டுகள்போலத்தான். அவளிடம்தான் எத்தனை விளையாட்டுகள் உண்டு. சுனாமி, புயல், வெள்ளம், வரட்சி என்று யாழ்ப்பாணத்தில் வீசிய காற்றின் வேகம் வன்னியில் இல்லையென்றாலும் மணிக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் அது வீசியது. பல கூரைகளை அது கொண்டுபோயேவிட்டது.

‘தற்காலிகக் குடியிருப்புத்தானே இன்னும் எங்காவது இடம்பெயரவேண்டி வந்தாலும் என்று ஆணிவைக்காமல், கூரையைப் போட்டிருந்த ‘கூரைத்தகடு வைத்திருந்தவர்கள் இரவிரவாக கூரைக்குமேல் கயிற்றைப்போட்டு இழுத்துப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். மரங்கள் முறிந்து வீழ்ந்தன. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்படி மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் விசுவமடு-றெட்பானாப் பகுதியில் விஜயகுமார் என்ற 23 வயதுடைய இளம்பெண் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். உடையார் கட்டுப் பகுதியில் பெருக்கெடுத்தோடிய வெள்ளத்தில் 52 வயதுடைய சூசைப்பிள்ளை மரியதாஸ் என்பவர் அடித்துச் செல்லப்பட்டார்.

பொதுவாகவே வன்னி கிழக்கு தாழ்நிலப் பகுதி மக்கள் பெருமளவுக்கு வாழும் பகுதி அல்ல இது. பெரும்பகுதிகாடு. அம்பகாமம் விசுவமடு உடையார்கட்டு, தேவிபுரம், வள்ளிபுனம், முத்தையன் கட்டு, இரணமடு ஆகிய குளங்களின் மேற்பகுதி முழுவதும் காடு. அதாவது மாங்குளம் முல்லைத்தீவு வீதிக்கு வடக்கேயும் பரந்தன் முல்லைத்தீவு வீதிக்கு தெற்கிலும் புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதிக்கு மேற்கிலும் ஏ-9 வீதியின் கிழக்கிலும் உள்ள பெரும்பகுதி குளங்களும் காடுகளும் நிறைந்தது.

குளங்களின் வடபுறங்கள் மட்டும் குடியிருப்புகள். குடியேற்றத்திட்டங்கள். இதிலும் பாதிக்குமேல் வயல் நிலம். ஏனையவை நீரோடும் தாழ்வுநிலங்கள். பொட்டல் வெளிகள். சதுப்பு நிலங்கள், பொதுவாகவே தாழ்வு நிலப்பகுதி என்பதால் சாதாரண மழைக்கே இந்தப்பகுதிகளில் நீர்பிடித்துவிடும். இந்தநிலையில் இப்போது அடைமழை தாழமுக்கம், புயல் என்றால் நிலைமை எப்படி இருக்கும் என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மக்களுக்கு வேறுவழியே இல்லை. எப்படியாவது இந்தப் பகுதிகளில் இருந்துதான் ஆகவேண்டும். எனவே இரட்டிப்பு அல்லது மூன்று மடங்கு பாதிப்புகளை மக்கள் சந்தித்தே ஆகவேண்டும்தான். கண்ணீரின் மேல் கண்ணீர். துப்னத்தின் மேல் துன்பம். வேதனையே வாழ்வு என்ற தொடர்கதையில் இன்று வன்னிமக்கள்.

இப்படித்துன்ப்படும் மக்களுக்கு மெல்லிய ஒரு ஒளிக்கீற்றாக, சிறு ஆறுதலாக தமிழர் புனர்வாழ்வுக்கழகம்தான் செயற்படுகிறது. வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு அமைப்புகளை அரசாங்கம் வெளியேற்றியுள்ளதால் மக்களுக்கான உடனடி உதவிகள் கிடைப்பதில் பெரும்நெருக்கடி. உள்@ர் தொண்டர் அமைப்புக்களுக்கான உதவு பொருட்கள் பிறவசதிகளையும் அரசாங்கம் தடுத்துள்ளதால் அவை செயற்படமுடியாத நிலையை அடைந்துள்ளன.

ஆக, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மட்டுமே மிஞ்சியிருக்கின்ற செயற்படுகின்ற ஒரே ஆதரவுக்கரம். மழை, புயல், வெள்ளம் எல்லாவற்றுக்குள்ளும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத் தொண்டர்கள் மட்டுமே இயங்கினார்கள்.

வாகனங்களில் மக்களை மீட்பதிலிருந்து சமைத்த உணவு உலர்பொருட்கள் எல்லாவற்றையும் தன் சக்திக்குட்பட்ட வகையில் புனர்வாழ்வுக்கழகம் வழங்கிவருகிறது. இரவுபகல் என்றில்லாது இரதப் பணி தொடர்கிறது. இந்த நேரத்தில் பார்த்து புனர்வாழ்வுக்கழகத்தின் 71 மில்லியன் பணத்தை சிறிலங்கா அரசு முடக்கியிருக்கிறது. எப்படியிருக்கிறது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கருணையும் ஜனநாயகமும் இன சம்துவமும்?

ஆனால், புலம்பெயர்மக்களின் உயரிய பங்களிப்புகள் வன்னி மக்களின் துயர் துடைப்பதில் அக்கறையோடிருக்கும் வரையில் கொஞ்சம் ஆறுதல்.

தானாடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள்! அது சும்மாவா?.

மாக்ஸ்வெல் மனோகரன்


Comments