அமெரிக்காவின் இலங்கைக்கான ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன- ஒரு ரிப்போட்

சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான படைத்துறை உதவிகளைப் புரிந்துள்ளது.

அமெரிக்க அரசு கடந்த 2006, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

2008ஆம் ஆண்டுப் போரில் அமெரிக்காவின் ஆயுதங்கள் (U.S Weapons at War 2008) என்ற தலைப்பில் புதிய அமெரிக்க மையத்தினால் (New America Foundation) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா 2007ஆம் ஆண்டு ஆயுத விற்பனையில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($23 billion), 2008ஆம் ஆண்டு 32 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($32 billion) ஆயுத விற்பனையில் பெற்றுள்ளது.



உலகின் ஆயுத விற்பனையில் அமெரிக்கா முதலாவது இடத்தையும் (123,963 மில்லியன் அமெரிக்க டொலர்), அதனைத் தொடர்ந்து ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முறையே அமைந்துள்ளன.

2006, 2007ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிடம் அதிகம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்துள்ள வளர்முக நாடுகளில் பாகிஸ்தான் (3,662.4 மில்லியம் டொலர்) முதலிடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து சவுதிஅரேவியா, இஸ்ரேல், ஈராக், கொரியா, ஐக்கிய அரபுக் குடியரசு, குவைத், எகிப்து, கொலம்பியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

2006, 2007ஆம் ஆண்டுகளில் இலங்கை போர் நடைபெறும் உலகின் முக்கிய 27 நாடுகளில் 20 நாடுகளிற்கு அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனையில் 11.2 பில்லியன் ($11.2 billion) வருமானத்தை அமெரிக்க அரசு பெற்றுள்ளது.

சிறிலங்கா அரசுக்கான ஆயுத விற்பனையில் 2006ஆம் ஆண்டு 14 இலட்சம் அமெரிக்க டொலரையும், 2007ஆம் ஆண்டு 3 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலரையும் அமெரிக்க அரசு வருமானமாகப் பெற்றுள்ளது.

இதன்மூலம் 2005ஆம்ஆண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்குவந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் தாயக பூமி மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளும் வல்வளைப்புப் போருக்கு மொத்தம் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்க அரசு விற்பனை செய்துள்ளது.


இதில் இன்னொரு முக்கிய விடயத்தையும் ஐரோப்பிய தொலைக்காட்சியின் சிறப்புச் செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார். அமெரிக்க அரசின் இந்தக் காலப்பகுதிக்கான மொத்த ஆயுத விற்பனை, ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய படைத்துறை உதவிகள், மற்றும் போர் நடைபெறும் நாடுகளுக்கான ஆயுத விற்பனை போன்ற அனைத்திலும் பாகிஸ்தான் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது.



இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசு, இந்தியாவுடன் எந்தநேரமும் போர் தொடுக்கும் நிலையிலுள்ள பாகிஸ்தானுக்கு தாக்குதல் வானூர்திகளையும் விற்பனை செய்திருப்பதுடன், அதிக படைத்துறை உதவிகளைப் புரிந்திருக்கின்றது. அமெரிக்க ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் பாகிஸ்தான் அரசு,

அந்த ஆயுதங்களையும், தனது உற்பத்தி ஆயுதங்களையும் இந்தியாவிற்குப் போட்டியாக கடன் அடிப்படையிலும், வேறு வகையிலும் சிறீலங்கா அரசிற்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது.

இந்தியாவுடன் உண்மையான நட்பு கொள்ளக்கூடியவர்கள் ஈழத்தமிழ் மக்களும், அவர்களின் தலைமையுமே என்பதும், இதற்கு தமிழீழம் அமைவதே சிறந்தது என்றும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கூறி வருவது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயம். உலகில் மக்களாட்சி பற்றியும், ஆயுத ஒழிப்பு, போர், பயங்கரவாதம் என்றெல்லாம் பேசும் மேற்குலக நாடுகள் கடந்த இரண்டு ஆண்டுகள் ஆயுத விற்பனையில் முன்னணியில் இருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது.

நன்றி:ஐரோப்பிய தொலைக்காட்சி


Comments