தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.
பொருளடக்கம்
1 பெயர்த் தோற்றம்
2 'தமிழு'ம் 'ஈழ'மும்
3 தற்காலத்தில் 'ஈழம்'
4 வெளி இணைப்புகள்
பெயர்த் தோற்றம்
ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத்தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.
'தமிழு'ம் 'ஈழ'மும்ஈழம்
என்ற சொல்லுக்குப் பாளி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.
தற்காலத்தில் 'ஈழம்'
இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன்படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.
அரசியல் அமைப்பு
தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதன்று. தமிழீழ பகுதியில் பெரும்பான்மை நிலப்பரப்பின் பகுதியின் நிர்வாகம், நீதிமன்றம், கட்டமைப்புகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி பெரும்பாலான அம்சங்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்த பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ, நிர்வாக அடிப்படையில் துண்டிக்கப்பட்டதாக அமைந்துள்ளது.
தமிழீழத்தில் முஸ்லீம்கள்
தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை முஸ்லீம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லீம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழீழத்தில் சிங்களவர்
ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள். தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.
தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை
இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இந்திய வம்சாவழித் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றதெனலாம்.
தமிழீழ மொழிகள்
தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்)பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளி தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.
தமிழீழத்தில் சமயங்கள்
தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். தமிழ்க் கிறிஸ்தவர்களின் ஈழப் போராட்டத்துக்கான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் முஸ்லீம் மற்றும் பெளத்தம் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.
கல்வி
தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கித்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.
பொருளாதாரம்
தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். தற்சமயம் ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.
உலகமயமாதல்
நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு NGOs, நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முக பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.
எதிர்காலம்
தமிழீழத்தின் எதிர்காலம் அதன் அரசியல் நிலைமைகளிலேயே தங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைத்தால் தமிழீழம் ஒரு வளர்ச்சிமிக்க சமூகமாக பரிணமிக்க சந்தர்ப்பம் உண்டு.
Comments