2008.09.12ம் நாளிலிருந்தே அதிர்ந்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சி - பூநகரி - பரந்தன் சாலையிலும் சூடு பறக்கிறது. வன்னியின் கிழக்கே அளம்பில் வரைக்கும் வந்து விட்டது சிங்களப்படை. மாங்குளம் ஒலுமடு என்றொல்லாம் பரவியுள்ளனர். முகமாலையிலும் முறுகல் நிலையே நிலவுகிறது. இதுதான் இன்றைய களநிலவரம். எத்தனையும் மறக்க வேண்டிய தேவையில்லை. மறைப்பதானால் விளையப்போகும் நலன்களுமில்லை. உள்ளதை உள்ளபடியே உரைப்பதன் மூலம் உண்மைநிலையை உணர்ந்து கொள்வோம்.
சிங்களப்படையின் வலுமிகு படைப்பிரிவுகள் களத்தில் நிற்கின்றன. சிறப்புக் கமாண்டோக்கள், கெமுனுகோவா, கஐபா போன்ற சிறப்புப் பயிற்சி பெற்ற அணிகளே களத்தில் நிற்பதை காண முடிகிறது. குறிப்பிட்ட படையணிகளைக் கொண்டுள்ள 57வது டிவிசன் கிளிநொச்சி களமுனையிலும், 58வது டிவிசன் பூநகரி - பரந்தன் சாலையிலும் 61, 62, 63, டிவிசன்கள் ஓமந்தை தொடக்கம் கொக்காவில் வரையிலும் 59வது டிவிசன் அளம்பில் பகுதியிலும் 64வது டிவிசன் மணலாற்றை அண்டிய பகுதிகளிலும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
அதாவது போரிடும் திறன் உள்ள அனைத்துப் படைகளும் எமது மண்ணிலேயே நிற்கின்றனர். ஏ. சந்திரசிறி தொடக்கம் ஜெகத் ஜெயசூரிய வரையான மூன்று மேஐர் ஜெனரல்களும், ஐந்து பிரிகேடியர்களும், ஏழுவரையான கேணல்களும், பதினைந்திற்கு மேற்பட்ட லெப்.கேணல்களும் தமது படையினரை வழிநடத்தி வருகின்றனர். 1999இல் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான கார்கில் போரில் கூட இந்தளவு படைத்தளபதிகள் பங்கு பற்றியதாக தகவல் இல்லை.
சிங்களத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கூறுவது உண்மையாக இருந்தால் ஐந்தாயிரம் சிறுவர்களுக்கு எதிராகவே இப்பெரும் படைப்பலத்தை பயன்படுத்துகிறார். சிங்கள சனாதிபதி ராஐபக்ச மிகப்பெரும் படையானது தனது எதிரியை முற்றாகத் தோற்கடிக்கும் வரை தான் வெற்றி பெற்றதாக கூறவே முடியாது. அதுவே உண்மையும் கூட... இப்போது வென்றவர் யார்? தோற்றவர் எவர்? என்பதை விலாவாரியாகப் பார்ப்போம்.
சிங்களப் படைகள் கூறிவரும் நான்காவது ஈழப்போரில் மட்டும் 12 ஆயிரம் சிங்களப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகலை கூறுபவர் ஐக்கியதேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார, அவர் சாதாரண ஆளில்லை, சிங்களப் படைகள் வெல்ல வேண்டும். தமிழர் படைகள் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பதில் குறிப்பாக இருப்பவர் தமிழர் போராட்டத்தில் தோல்விக்காக எதிர்க்கட்சியில் இருந்து கூட முழுஒத்துழைப்பை வழங்கி வரும் ரணில் விக்கிரமசிங்க அவர்களது அணியில் முதன்மையானவர் ஆக அவர் பெய்யான தகவலை வெளியிட மாட்டார் என்பது திண்ணம்.
உண்மையான படையிழப்பைக்கூடக் குறைத்து வெளியிடவே விரும்புவார். அப்படி குறைத்து வெளியிடும் தகவலே 12ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின் உண்மையில் கொல்லப்பட்ட சிங்களப்படைகளின் தொகை எதுவோ தெரியாது.
இதனிடையே இராணுவ இழப்புக்களை அரசாங்கம் மூடி மறைப்பதாகவும் உண்மையான இழப்புக்களை சிங்கள மக்களுக்குக் கூறி அதன் மூலமாக சிங்களப்படைகளை செம்மையாக வழிநடத்த விளைந்த மங்கள சமரவீர பாதுகாப்பு கண்காணிப்பகம் என்னும் பாதுகாப்புத் தகவல் மையத்தை ஆரம்பித்தார்.
ஐக்கியதேசியக் கட்சியின் முழுஒத்துழைப்புடனே அத்தகவல் மையம் இயங்குகின்றது. கடந்தவாரம் நடைபெற்ற பாதுகாப்பு கண்காணிப்பக ஊடகச் சந்திப்பில் ஐ.தேசிய பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா பங்கு பற்றியிருந்தார்.
விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு தமது ஒத்துழைப்பு கிடைக்குமென்றும் அரசாங்கம் பேரிழப்புக்களை சிங்கள மக்களுக்கு கூற வேண்டுமென்பதே திஸ்ஸ அத்தநாயக்காவின் நிலைப்பாடு.
பாதுகாப்பு கண்காணிப்பக ஊடக சந்திப்பில் கருத்துக்கூறிய மங்கள சமரவீர கொழும்பு நகர மருத்துவ மனைகளில் மட்டும் 1265 படையினர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அனுராதபுரம் மருத்துவமனையில் 700படையினர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். (அநுராதபுரத்திலுள்ள விக்ரறி இராணுவ மருத்துவமனை பொலநறுவை காலி, காரம்பிட்டிய, களுத்துறை, நாகொட மற்றும் வவுனியா, மன்னார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட படையினர் விபரம் அவருக்கு கிட்டவில்லை)
காயமடைந்த படையினரை மீண்டும் களமுனைக்கு அனுப்புவதாகவும் அதனை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் சரத்பொன்சேகா மீது குற்றம் சாட்டியிருந்தார். களத்தில் கொல்லப்படும் படையினர் விபரத்தை அவர்களது குடும்பங்களுக்கு அறிவிப்பதில்லை என்றும் கொல்லப்படும் படையினர் காணாமற்போனோர் பட்டியலில் இணைக்கப்படுவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டினார்.
மேற்படி விபரங்களால் ஆத்திரமடைந்த சரத்பொன்சேகா, மங்கள சமரவீர போன்ற பேடிகள் போர் பற்றி பேசக்கூடாது என்றும் அவர் தேசத்துரோகி என்றும் கொச்சையாகக் கருத்துக் கூறினார். மங்கள சமரவீர கூறிய விடையங்களினால் சிங்கள மக்கள் குழப்பமடைந்து விடுவார்களோ? என்ற அச்சம் காரணமாகவே சரத்பொன்சேகா தரம் தாழ்ந்து கருத்துக் கூறினார்.
வெற்றி பெற்றவர் தரம் தாழ்ந்து கதைப்பாரா? ஆக படைத்தரப்பிற்கு கிடைத்திருப்பது வெற்றியா தோல்வியா அத்துடன் நிக்காத சரத்பொன்சேகா சிங்கள ஊடகர் திஸ்ஸ ரவீந்திர பெரேராவை வலிந்து அழைத்துக் கருத்துக் கூறியிருந்தார். 'கடந்த காலங்களில் 14ஆயிரம் படையினர் காயமடைந்துள்ளார்கள். அவர்களில் 12ஆயிரம் பேர் விடுதலைப்புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் எறிகணை காரணமாக காயமடைந்தார். அவர்களில் 8000பேர் மீண்டும் களமுனைக்குச் செல்லக்கூடிய நிலையில் உள்ளனர்" என்று கூறியுள்ளார்.
எனவே அவரது கூற்றுக்கமைய 6000படையினர் ஒருபோதுமே போர்க்களத்திற்கு திரும்ப முடியாதவர்களே. மேலும் கருத்துக் கூறிய சரத் பொன்சேகா 'காயமடைந்தவர்களை நான் போர்க்களத்திற்கு அனுப்பவில்லை. வவுனியா பின்தளம் மற்றும் கொழும்பு பிரதேச பாதுகாப்புக்காகவே அவர்களை ஈடுபடுத்தியுள்ளேன்" என்று கூறினார்.
மங்கள சமரவீரவிற்கு எதிர்க்கருத்து கூறுவதாக நினைத்து பல இராணுவ இரகசியங்களையும் வெளியிட்டு விட்டார். தன்னிலை மறந்த தரைப்படைத்; தளபதி அவரால் வெளியிடப்பட்ட இராணுவ இரகசியங்களாகக் கீழ்வரும் விடயங்களைப் பகுத்துப் பார்க்கலாம்.
1. காயமடைந்த களமுனையிலிருந்து அகற்றப்பட்ட படையினர் தொகை14000
2. 6000 பேர் களமுனைக்குத் திரும்ப முடியாதவர்கள்.
3. விடுதலைப் புலிகளின் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படையணி வீரர்களின் செயற்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர்களது எறிகணைகள் மிகத் துல்லியமாக எதிரி இலக்குகள் மீது வீழ்ந்து வெடிக்கின்றன.
4. விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருள் தட்டுப்பாடு இல்லை.(வெடிபொருள் வழங்கல் பாதையை முழுமையாகத் தடுத்து விட்டதாக கடற்படைத் தளபதி வசந்த கருணாகொட இன்றும் (09ஃ12) கூறினார்.)
5. தனது வலுவிற்கும் அப்பாற்பட்ட இலக்கை நோக்கி படைநடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு படைத்தளபதி தனது ஆளணி தொடர்பிலும் எதிரியின் எறிகணை துல்லியம் பற்றியும் ஊடகங்களுக்கு உரைப்பது சரியானதா? ஆக அவரது மனநிலையின் படி பார்த்தால் அவர் பெற்றிருப்பது வெற்றியா? தோல்வியா?
கொக்காவில் நகரம் முற்றாக கைப்பற்றப்பட்டு விட்டது என்று 2008.10.27 ஆம் நாளன்று அரசாங்கம் அறிவித்துள்ளது. 36நாட்கள் கடந்த நிலையில் இம்மாதம் முதலாம் நாளன்றும் கொக்;காவில் நகரத்தை கைப்பற்றியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அரச படைத்தரப்பு இந்தத் தடுமாற்றம் எதனைக்கூறுகிறது எமக்கு.
மூன்று மாதங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ரத்தினசிறி விக்கிரமநாயக்கா ஓகஸ்ட் 23ஆம் நாள் கிளிநொச்சியில் கொடியேற்றப் போவதாக சூளுரைத்தார்.
சிறிலங்காப் பிரதமரின் சூளுரை வெற்றி பெற்றதா? சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடிந்ததா? அல்லது காற்றில் பறக்க விட்டாரா? ஒருவேளை இனி மேல் கிளிநொச்சி நகரை அடைந்தால் கூட அது அவர்களுக்கு வெற்றியா என்பதே எழுப்பப்படும் கேள்வியாக இருக்கும். ஓகஸ்ட் 23இல் கொடியேற்ற முற்பட்ட ரத்தினசிறி விக்கிரநாயக்காவும், செப்ரெம்பர் 26இல் கிளிநொச்சியில் கொடியேற்றுவதாகச் சபதம் எடுத்த சரத்பொன்சேகா அவர்களும் இன்றைய நாள்வரை தோல்வியடைந்தவர்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் தான் நவம்பர் 26ஆம் நாளன்று கிளிநொச்சியில் கொடியேறும் என்றும் மாவீரர் நாள் அன்று கிளிநொச்சியில் சிங்கக்கொடி அசைந்தாடும் என்றும் பெரும் பரப்புரையை மேற்கொண்டிருந்தது சிங்களத் தரப்பு. 2008.11.27 மாவீரர் நாளன்று மாலை 4.30 மணிக்கு சிறிலங்கா சனாதிபதி கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட வெற்றிச் சய்தியை தானே பிரகடனப்படுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் ஏற்பாடுகளைக்கூட அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.
அன்றையநாள் றுறுறு. டுயமெயனயளைளநவெ. ஊழஅ. என்ற இணைய தளத்தில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பான தகவல் வெளிவந்தது. உண்மையிலேயே தேசியத் தலைவர் இவர்கள் மாவீரர் நாள் உரைவெளி வருவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாக கிளிநொச்சியை வென்றதான செய்தியை தனது வாயாலே நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். என்பதில் அரச தலைவர் குறியாக இருந்தார். அதில் அவர் வெற்றி பெறவில்லை.
இருப்பினும் கொக்காவில் சந்தியில் கிளிநொச்சி என்ற பெயர்ப்பலகையை வைத்து ஒளிப்படம் எடுத்து பெரும் பரப்புரை மேற்கொள்வதற்காக 27சிங்கள ஊடகர்கள் கொழும்பிலிருந்து கொக்காவிலுக்கு அனுப்புவதற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். ஐக்கியதேசியக் கட்சியின் கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முயற்சியும் கைகூடவில்லை.
உண்மையிலையே சிங்களத் தரப்பு போரியல் முதன்மை மிக்க வெற்றிகளை ஈட்;டியிருந்தால் எதற்காக இவ்வாறான ஊடகப்பரப்புரையில் ஈடுபடவேண்டுமென்ற கேள்வியும் எழாமலில்லை.
ஆகவே மகிந்த ராஐபக்ச அவர்களது மனிதாபிமானத்திற்கான படுகொலை நடவடிக்கையின் போது 18000 படையினரை களத்திலிருந்து இழந்திருப்பதாக அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. 12000 படையினர் கொல்லப்பட்டதாக ஐக்கியதேசியக் கட்சி கூறியதனை அரசாங்கம் மறுக்கவில்லை. மறுப்பறிக்கைஇருந்ததன் மூலம் உயிரிழந்த படையினரின் எண்ணிக்கை அத்தொகையை விட அதிகமானது என்று பேரூண்மையை முதற்தடவையாக ஏற்றுக் கொண்டுள்ளது சிங்கள அரசு.
மன்னார் தம்பனைப் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் ஊடகமொன்றுக்கு கருத்துக் கூறிய சரத்பொன்சேகா 'இடங்களைக் பிடிப்பது எனக்குறிக்கோளில்லை இயலுமானளவு விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவுள்ள போராளிகளை களமுனையிலிருந்து அகற்றுவதிலேயே எனது முழுக்கவனமும் இருக்கிறது. நாளாந்தம் பத்துப் புலிகளைக் கொல்வதன் மூலம் சில மாதங்களுக்குள்ளேயே புலிகளையும் அழித்துவிடுவோம்" என்று கூறியிருந்தார். அவரது கூற்றுவெளியாகி 12மாதங்களுக்கும் மேல் சென்றிருந்தும் கூட அவர் கூறியதை சாதித்தாரா? அவரே கூறிய அவரது குறிக்கோளை அடைந்தாரா என்பது இங்கிருக்கும் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமான விடயம்.
'களப்பலியாகும் விடுதலைப் புலிகளுக்கு உயர்மதிப்பு வழங்கப்படுவதாகவும் விடுதலைப் புலிகள் ஒருபோதும் தமது போராளிகளின் வீரச்சாவை மறைப்பதுமில்லை என்று சிங்கள ஊடகர் ஒருவரே கருத்துக் கூறியிருந்தார்.
நாளொன்றுக்கு 500மில்லியன் ரூபாய்களைச் செலவிட்டு போரைத் தொடர்கிறது சிங்களம். அவர்களது கணக்கின் படி இருப்பதோ 5000 புலிகள் மட்டுமே. ஆனால் அடுத்த ஆண்டின் போர்ச் செலவாக 170 மில்லியன் பணத்தை ஒதுக்கியிருப்பதாகவும் அதற்கமைய ஒருபுலிவீரனுக்காக 39மில்லியன் ரூபாயை சிங்கள அரசு செலவிடப் போவதாகவும் குற்றம் சாட்டுகிறது. சிங்க ஏழல் ஏடான இருதின, படைத்தளபதியின் கூற்று நிதியொதுக்கீடு, இரண்டு வருடங்களாக அரசுடன் இணைந்திருக்க கருnஐயசூரியாவின் விலகிச் செல்வதற்கான முனைப்பு போன்றவற்றின்மூலம் சிங்களம் பெற்றிருப்பது வெற்றியா தோல்வியா என்பதை ஊகித்து உணரலாம். வெற்றிகளை ஈட்டும் தரப்பிலிருந்து விலகுவது பற்றி ஐயசூரியா போன்ற சிங்களப் போரினவாதிகள் யோசிப்பதே பெரிய விடயம்.
சிங்களத்தரப்பின் அறிக்கைகளுக்கமைய போராளிகளினால் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்ட படைத்தொகை 26000ஆகும். அதில் 18000பேர் ஒருபோதுமே களமுனைக்கு திரும்ப மாட்டார்கள். அவர்களில் எவருமே சாதாரணமான பின்தளப்பணிபுரியும் படையினருமல்ல. அனைவருமே உயர் பயிற்சி பெற்ற பட்டறிவு மிகுந்த போர் வீரர்கள் ஆவார். ஏனென்றால் சிறப்புப் படையணி (SF) கமாண்டோப்படையணிகளைச் சேர்ந்த அனைத்துப் படையணிகளையும் உள்ளடக்கியே 57, 58, 59, 60, 61, 62, 63, 64, ஏழு டிவிசன்களும் உருவாக்கப்பட்டன.
ஆகவே அந்த உயர்வலு மிக்க படையினரிலிருந்து தான் 26000 பேரும் களத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் உண்மை மீதியைக் காணலாம். அதேபோன்று களமுனையிலுள்ள படைப்பரம்பல் தொடர்பாகவும் எமது தரப்பில் முன்னைய சாதனைகள் போன்றவற்றையும் மதிப்பீடு செய்வதன் மூலமாகக் கண்டு வெற்றி தோல்வியைக் கொள்ள முடியும்.
த.தமிழ்நேசன்
Comments