கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு,

வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதபட்டு தடைசெய்யப்படுமென மஹிந்த தெரிவித்துள்ளார்.

ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யபட்டு விட்டன.

83லும் 98லும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களளை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87ல், 2002ல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் புலிகள் மீதான தடையை அரை மனதோடு நீக்கியது அரசு.

ஆனாலும், இம் முறை மேற்கொள்ள உத்தேசித்துள்ள 'தடை' நகர்வில் பிராந்திய அரசியல் நகர்வொன்று பின்னிப் பிணைந்துள்ளது.

தமிழ்நாட்டு அழுத்தத்தால், கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய வெளிநாட்மைச்சர் பிரணாப் ஊடாக, புதிய காய்நகர்த்தல்கள் ஏதேனும் மேற்கொள்ளப்படலாமென ஊகிக்கப்டுகிறது.

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமோ அல்லது பேச்சுவார்த்தையோ ஏற்பட வேண்டுமென்ற கருத்து நிலையோடு சர்வதேச நாடுகள் சில, இருப்பதாகக் கருதும் அரசு, அதற்கான எதிர்கால களச் சூழல் உருவாகாமல் தடுக்க, முன்கூட்டியே விடுதலைப் புலிகளை தடை செய்யும் உத்தியை கையாள முயல்வது போல் தெரிகிறது.

உலக நாடுகளை, மிகத்தந்திரமாக கையாளும், நயவஞ்சகமான இராஜதந்திர அரசியல் பொறி முறையில், சிங்களத் தலைமைகள் மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளதை இனிமேல்தான் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் உணரப்போகிறார்கள்.

அரசின் மீது வீசப்படும் அம்புகளை, மிக இலாவகமாக தட்டித் திருப்பிவிடும் அரசியல் சாணக்கியத்தை புலிகள் மீது மூன்றாவது முறையாக விதிக்கப்படவிருக்கும் தடையூடகவும் புரிந்து கொள்ளலாம்.

அரசு மேற்கொள்விருக்கும் இத்தடை நாடகத்தால், தமிழ் மக்களோ அல்லது விடுதலைப்புலிகளோ பதிய பாதிப்புக்கள் எதனையும் பிரத்தியோகமாக முகம் கொள்ளப் போவதில்லை.

அதேவேளை, மஹிந்த ஜனாதிபதியாக பொறுப்பெற்ற காலம் முதல் இற்றைவரை மிக நுணுக்கமாக மேற்கொள்ப்பட்ட அரசின் பெயற்பாடுகளை நோக்க வேண்டும்.

மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்து கிழக்கு மாகாண கைப்பற்றலோடு சர்வதேசம் உருவாக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசு முறித்துக் கொண்டது. நோர்வே அனுசரணையோடு இயங்கிய கண்காணிப்புக் குழுவை வெளியேற்றியது.

ஐ.நா. சபையின் மனித உரிமைக் காண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவ மேற்குலகம் முன்னெடுத்த நகர்வுகளை, இந்திய உதவியுடன் முறியடித்ததது. ஜோன் ஹோம்ஸ், லூயிஸ் ஆர்பர் அம்மையார் விடுத்த அறிக்ககைளும் ஆட்சியாளர்களின் போர் நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தத் தவறிவிட்டன.

தமது இருப்பினைத் தக்க வைக்க, மேற்குலகம் முன்னெடுத்த அழுத்த நகர்வுகள் யாவற்றையும், பிராந்திய ஆதிக்க கனவில் மூழ்கியுள் இந்தியத் துணையோடு எதிர்கொண்ட அரசு தற்போது இந்தியாவின் இராஜதந்திர ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தயாராகிறது.

ஆயுதக் கொள்வனவிற்காக, சீனா,பாகிஸ்தான் ஆகிய நாடுகளை நாடி, இலங்கை செல்லக் கூடாதென்கிற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோகசரின் கூற்று, முன்னாள் இராணுவ தளபதிகள் மத்தியில் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் புலியழிப்பு நடவடிக்கைக்கு பூரணஆதரவு வழங்கும் இந்தியா, தனது கட்டுப்பாட்டிற்குள் இலங்கை இருக்க வேண்டுமென எதிhபார்ப்பதே இராணுவ மட்டத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதெனலாம்.

1988 -1991 வரை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த ஜெனரல் ஹமில்டன் வனசிங்க, மற்றும் முன்னாள் விமானப்படைத்தளபதி ஹரி குணதிலக போன்றோர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரன் அச்சுறுத்தலை கடுமையாக எதிர்த்ததோடு, எங்கும் சென்று ஆயுதம் வாங்கும் சுதந்திரம் இலங்கைக்கு உண்டெனப் பிரகடனம் செய்துள்ளனர்.

நீண்ட கால நிரந்தர நட்புச் சக்தி நாடுகளான சீனா, பாக்கிஸ்தானை ஒதுக்கி இந்தியாவுடன் உறவு கொண்டாடுவது தவறான இராஜதந்திரமென்பதே இவர்கள் கூறும் கனமான செய்தியின் அர்த்தமாகும்.

விடுதலைப்புலிகள் மீது தடை விதித்தால் பிரணாப் முகர்ஜியின் பயண வாய்ப்புக்கள் அற்றுப் போகும். அதேவேளை, அரசின் இராணுவத் தீர்வினை ஆதரிக்கும் ஒரு வழிப்பாதையிலேயே, மல்லாவிக் களமுனைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட ஏழு நாடுகளும் பயணிக்க நிர்ப்பந்திக்கப்படும்.

வீட்டிற்கொரு பிள்ளையை இராணுவத்திற்கு அர்ப்பணிக்க வேண்டுமெனக் கோரும் மஹிந்த, 2009ம் ஆண்டினை படையினரின் வெற்றி ஆண்டாக அறிவித்து, வரலாற்றுப் புத்தகத்திலிருந்து புலிகளைத் துடைதெறிவேனென சூளுரைத்துள்ளான்.

அதாவது இத்தகைய போர் முனைப்புச் செய்திகளின் பினபுலச் சூத்திரத்துள், பேரிழப்புகளை மறைக்க முற்படும் அரசியல் நாடகமொன்று புதைந்துள்ளதை அவதானிக்கலாம்.

போர்நிறுத்தமொன்று உருவானால், அதனைப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வார்களென்று இராணுவத் தளபதி சரத் கூறுவதில் நம்பிக்கை கொண்டுள்ள சிங்கள மக்கள், படையினரின் தொடர் இழப்புக்கள் தரும் வலியை தற்போது உணரத் தொடங்குகின்றனர்.

கடந்த வார நான்கு நாள் சமரில் 600 படையினர் கொல்லப்பட்ட செய்தி, தென்னிலங்கையெங்கும் பரவலாகப் பேசப்படுகின்றது. நத்தார் தினத்தன்று, கிளிநொச்சி படையினர் வசம் வீழ்ந்து விடுமென கூறப்பட்ட ஊகங்கள், கிளிநொச்சியைக் கைப்பற்ற சில காலம் செல்லும் என ஏற்றுக் கொண்ட கெஹெலியவின் கூற்றோடு பொய்த்துப் போயின.

களமுனைகளில் படையினரின் இழப்புகள் தினமும் நீண்டு செல்கின்றன. கிளிநொச்சியை இழந்தாலும், போராட்டம் தொடரும் என விடுதலைப்புலிகளின் அரசியல் துறைச் செயலாளர் பா. நடேசன் விடுத்த செய்தி, ஏனைய முன்னரங்க கள முனைகளில் சமர் புரியும் இராணுவத்தின் சிற்ப்புப் படையினரை கிளிநொச்சியை சூழவுள்ள ஐந்து முனைகளில் குவிவடையச் செய்துள்ளன.

விடுதலைப் புலிகளின் பலமான தாக்குதிறன் கொண்ட களம் நோக்கி படையினர் நகர்கின்றனர். யாழ்.குடாவில் பரவலாகக் காணப்பட்ட சந்திச் சோதனைச் சாவடிகள் மூடப்படுகின்றன.

மரண முற்றுகைக் களமாக மாறியுள்ள கிளிநொச்சி குறித்து இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதி வேலவன் கூறுகையில் 'நாங்கள் கடைசிப் போர் முறிப்புச் சமருக்குள் நிற்கின்றோம். எதிரியின் முன்னணி படையின் கடைசிப் படையினரைக் கொண்டு போரை நடத்துகின்ற கட்டத்திற்கு எதிரி தள்ளப்பட்டுள்ளான்' என்று கள நிலைவரத்தின் உண்மையான போர் பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளாh.

அதாவது அரசு விரும்பினாலும், போரை நிறுத்த முடியததொரு இக்கட்டான நிலைக்குள் அது தள்ளப்பட்டுள்ளதென்பதே உண்மையாகும். போரை நிறுத்தினால், படையினரின் இழப்புத் தொகை அம்பலமாகி, ஆட்சியதிகாரத்தை அதிர வைக்கக்கூடிய அளவிற்கு, சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிhப்பலைகள் நிச்சயம் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.

போரை நிறுத்தாமல் தினமொரு ஊர்பிடித்த செய்தியை கூறிக் கொண்டிருந்தால் புலிப்பாச்சலை எதிர்கொள் முடியாமல் பெரும் வரலாற்றுத் தோல்வியை மஹிந்த சந்திக்க நேரிடலாம்.

ஆகவே இத்தகைய சிக்கல்களில்; இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் இலங்கை அரசு தனது இறுதி ஆயுதங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது.

வன்னி பெருநிலப்பரப்பெங்கும் பரவாலக வீசப்படும் பரசூட் குண்டுகளும் கொத்தணிக் குண்டுகளும், முழுமையான பொருளாதார தடைகள் முன்னகர்வுகள் மற்றும் விடுதலைப் புலிகள் மீதான தடை முயற்சிகள் யாவும் இனவழிப்புகளின் வெளிப்பாடுகளாகத் தெரிகிறது.

ஆகவே போராடும் ஒடுக்கபட்ட மக்களுக்கே வரலாறு சொந்தம் என்ற செய்தியை மறுபடியும் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டிய கடப்பாடு தமிழ் மக்களுக்கு உண்டு. சர்வதேசத்தை தொடர்ந்து நம்பிப் பயனில்லை. அவர்கள் பலவானின் பக்கமே எப்போதும் சாய்வார்கள். இருப்பிற்கான போராட்டமே மனித குல வரலாறு.

- சி. இதயச்சந்திரன்-

நன்றி : வீரகேசரி.

Comments