இந்திய இராணுவத்துக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கைகளுக்கு வைகோ, திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.12.08) தமிழீழ சிக்கல் குறித்து விளக்குவதற்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்தியா - சிறிலங்கா உடன்பாட்டின்படி, இந்திய அமைதிப் படையினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக சீமான் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
அப்பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி, மணியரன் ஆகியார் கலந்து கொண்டதால் அவர்கள் மீதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சீமானின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது ஈரோடு காவல்துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் ஜி கல்லுப்பட்டி என்ற சிற்றூரில் நடைபெற்ற 'மாயாண்டி குடும்பத்தார்' திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த சீமானை ஈரோடு மாவட்டக் காவல்துறையினர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் கைது செய்தனர்.
அதேபோன்று கொளத்தூர் மணியை சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகரில் உள்ள அவரின் வீட்டில் ஈரோடு காவல்துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து கொளத்தூர் மணி ஆதரவாளர்கள் முழக்கப் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளரான மணியரசன் சென்னை தியாகராய நகரில் கைது செய்யப்பட்டார்.
சீமான், கொளத்தூர் மணி ஆகிய இருவரும் ஈரோட்டில் உள்ள மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை நீதிமன்றத்தில் விளக்கிய காவல்துறையினர், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 505, சட்டத்திற்கு எதிரான செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 13(1) பிரிவு ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
அதை பதிவு செய்த நீதிபதி, இது தொடர்பான விவரங்களை சீமான் மற்றும் கொளத்தூர் மணியிடம் தெரிவித்தார். தொடர்ந்து இருவரையும் இம்மாதம் 31 ஆம் நாள் வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பின் இருவரும் கோவை சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து சீமானும், கொளத்தூர் மணியும் வெளியே அழைத்துவரப்பட்ட போது காவல்துறையைக் கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தின் போது காவல்துறை ஊர்தி, தனியார் மகிழுந்து (கார்) உட்பட பல ஊர்திகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட மணியரசன் நாளை காலை ஈரோடு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுவார் என்று தெரிகிறது.
சீமான் மற்றும் கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன் ஆகியோர் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
முன்னதாக சென்னையில் திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டு வாலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் வாகனத்தை காங்கிரஸ் கட்சியினர் தீயிட்டு எரித்தனர். இதில் வாகனத்தின் ஒரு பகுதி எரிந்து சாம்பலானது.
Comments