கிழக்கு படுகொலைகளை அனைவரும் கண்டித்தால் வேற்றுக் கிரக வாசிகளா கொலையாளிகள்?





* பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சந்திரநேரு சந்திரகாந்தன் ஆற்றிய உரை...

மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் அமைதி திரும்புமென மக்கள் எதிர்பார்த்த போதும் அது பகற்கனவாகி விட்டது. இரண்டு வருட கால யுத்தத்தின் பின்னர் ஆயுதக்குழு ஒன்றிடம் கிழக்கு மாகாணம் ஒப்படைக்கப்பட்டது. மக்களும் அதிகாரம் மக்களுடைய கைகளில் கிடைத்துள்ளதென்பதால் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தனர், ஆனால் தற்போது அது ஒரு பகற்கனவாக முடிந்துள்ளது. கொலைகள், கடத்தல்கள் , காணாமல் போதல் போன்றன நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பீதி நிறைந்த வாழ்க்கையுடனேயே மக்கள் காலம் கழித்து வருகின்றனர்.

கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகள் அங்கு ஜனநாயக செயற்பாடுகளுக்குப் பெரும் தடையினை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதக் கரங்கள் தங்களை அடக்கி ஒடுக்கவும், தங்களது இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கவும் தமக்கெதிரே நீட்டப்பட்டிருப்பதாகவே கிழக்கு மக்கள் அஞ்சுகின்றனர். பாதுகாப்பிற்கு நிச்சயமற்ற ஒரு சூழலில் அச்சத்தோடு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது சட்டம், ஒழுங்கு தொடர்பான சந்தேகங்கள் , கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வாறானதொரு சூழலில் வெறுமனே அரசியல் பிரசாரங்களையும், அர்த்தமற்ற செயற்பாடுகளையும் காட்டி கிழக்கில் நடைபெறும் இனக் கருவறுப்பு கொலைகளையும் அசம்பாவிதங்களையும் அரசு மூடி மறைத்து விட முடியாது.

கிழக்கு மாகாண நிர்வாகமானது எந்தளவிற்கு செயற்பட முடியும் எனும் விடயம் கூட கேள்விக் குறியாகியுள்ளது. எந்தவித அதிகாரமுமற்ற மாகாண சபை என்பதனை கிழக்கின் முதலமைச்சரும், ஏனைய அமைச்சர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு அவசியமான சூழலில் நாம் இருக்கின்றோம். இந்நிலையில் நாம் மௌனமாக இருக்க முடியாது என்பதனை சகல தரப்புகளும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழலில் தமிழ்ப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் ஒரு சில அபிவிருத்திப் பணிகளில் இவ்வாயுதக் குழுக்கள் தலையிடாமல் இருப்பதே தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய உதவியாகும்.

ஆயுதம் தரித்த நபர்களினால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்கள் தொடர்பில் அரசினால் தண்டிக்கவோ, கண்டிக்கவோ முடியவில்லை. உண்மைகளை வெளிப்படுத்தும் நபர்களுக்கு மறுநாளே மரணம் என்ற நிலை. ஆயுததாரிகளின் அட்டூழியங்கள் பற்றி பொலிஸ் நிலையங்களில் கூட முறையிட முடியாத நிலை. இவ்வாறான கடுமையான பாரிய மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில் கிழக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கிழக்கு உதயத்தின் பின்னர் முழத்திற்கொரு காவலரண் அமைக்கப்பட்டு பயணிகள் மீது கடுமையான சோதனைக் கெடுபிடிகள். மன்னம்பிட்டியில் தமிழர்கள் மீது தனித்தனியான விசாரணை, பதிவுகள் தொடர்கின்றன. இதுவா கிழக்கின் உதயம். கிழக்கு உதயம் என்பது இலங்கை மக்களுக்கும் வெளியுலகத்திற்கும் காதில் பூச்சுற்றும் ஒரு பதம் என்பது வெள்ளிடைமலை. வடகிழக்கு மக்களுக்கு எந்தவொரு உரிமையையும் வழங்காமல் கிழக்கில் ஆயுதக் குழுக்களை இரண்டாக பிளவு படுத்தி வைத்து கண்ணாமூச்சி விளையாட்டு ஆடுகின்றது இன்றைய அரசு.

இவற்றையெல்லாம் அறிந்து கிழக்கு மக்கள் விழிப்படைந்து விட்டார்கள். சிங்களத் தலைமைகளின் ஆசை வார்த்தைகளை நம்ப கிழக்கு மக்கள் இனியும் தயாரில்லை. காலம் காலமாக சிங்கள அரசுகள் தமிழின விரோதக் குழுக்களை தம்வசம் வைத்துக்கொண்டு அவர்களுக்கு சொகுசு மாளிகைகளையும் ஆடம்பரவாகனங்களையும் வழங்கி ஆட்சியை நடத்தி வருவது தான் வரலாறு. எனவே தமிழர்களுக்குப் போராட்டம் தான் ஒரே வழி என்பதே ஒட்டுமொத்த தமிழினத்தின் இன்றைய மனநிலையாகும்.

நடக்கின்ற கொலைகளின் சூத்திரதாரிகள் யார் என்பதனை மக்கள் அறிந்துள்ளனர். படு கொலைகள் ஊடாக எதனையும் சாதித்து விட முடியாது. கிழக்கில் குடும்பம் குடும்பமாக வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். கிழக்கின் படுகொலைகளை சகலரும் கண்டிக்கின்றனர் . இதுதான் வேடிக்கையான விடயம், அப்படியென்றால் இப்படுகொலைகளை யார் செய்கின்றனர்? வேற்றுக்கிரக வாசிகளா? எனக் கேட்கின்றேன்.

கிழக்கின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. ஒரு நாளைக்கு ஒருவர், இருவர் என்ற நிலைமாறி பத்துப் பதினொரு பேர் என்று கொலை செய்யப்பட்டு வருகின்றனர். மனிதப் படுகொலைகளை யார் செய்தாலும் அது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

கிழக்கின் மாகாண சபைக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இன்மையால் மக்களின் கல்வி, சுகாதாரம் , வேலைவாய்ப்பு போன்றன கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கில் இருந்து கொழும்புக்கு வர பொலிஸ் நிலையங்களில் பாஸ் பெற வேண்டிய நடைமுறை உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான சோதனைச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மன்னம்பிட்டி சோதனைச் சாவடியில் அனைத்து மக்களும் வாகனங்களில் இருந்து இறக்கப்பட்டு தனித் தனியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறைந்தது ஒரு வாகனத்தை சோதனை செய்ய 2 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கப்படுகின்றது. அங்கு தமிழ் மக்கள் வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள் போன்று நடத்தப்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் தென்பகுதியில் இருந்து சிங்களவர்கள் அதிகளவில் கொண்டுவரப்பட்டுள்ளனர். இப்படியானவர்களால் கிழக்கில் தமிழர்களின் பண்பாடுகள் கலாசாரங்கள் சீரழிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கின்றனர். கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பொருளாதாரம், கலை, கலாசாரங்கள், அபிலாஷைகள் என அனைத்தும் இன்றைய ஆட்சியில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இங்கு இராணுவ ஆட்சிதான் இடம் பெறுகின்றது. தற்போதைய இந்த நிலையில் வெளியுலக நாடுகள் இங்கு வந்து உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதே கிழக்கு மக்களின் கருத்து.

வட/கிழக்கு மக்களிடம் அடையாள அட்டையும் பாஸும் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பது தான் இன்றைய நிலை. கிழக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசு கோட்டை விட்டு வருவதனை அங்கு இடம் பெற்று வரும் நிகழ்வுகள் மூலம் காணலாம்.கிழக்கில் மீண்டும் புலிகள் தமது சிவில் நிர்வாக நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிழக்கில் அங்குலத்திற்கு அங்குலம் காவலரண்கள் அமைந்திருந்தும் புலிகள் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை ஆரம்பித்து வருகின்றனர்.விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை எதிர்நோக்க முடியாத நிலையில் அப்பாவி மக்களுக்கெதிரான படுகொலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

கிழக்கில் தமிழர் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி இவ்வரசு அவர்களை பலி கொடுத்து வருகின்றது. ஆயுதக் குழுக்கள் அரச நிர்வாகத்தில் அதிக தலையீட்டினைச் செய்து நிர்வாகத்தின் செயற்பாட்டினை முடக்கி வருகின்றனர். கிழக்கில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டி வருகின்றது. கொலைகள்,கடத்தல்கள்,கப்பம் கோரல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் தமக்கு தொடர்பில்லை என அரசு எவ்வாறு தான் தலைகீழாக நின்றாலும் கிழக்கில் நடைபெற்று வரும் அனைத்துப் படுகொலைகளுக்கும்,கடத்தல்களுக்கும்,அட்டூழியங்களுக்கும் அரசுதான் பொறுப்புக் கூற வேண்டும்.

இன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.வடகிழக்குப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் புராதன வரலாற்றுப் புகழ் மிக்க பொருளாதார வளம் மிக்க பிரதேசங்கள் அனைத்தும் படிப்படியாக சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புப் பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றது.ஜனநாயகமற்ற வெறுமைக்குள் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்நாட்டில் இனவாதமும் மதவாதமும் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றன. கடந்த மாதம் நான் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த போது இதனை உணரக் கூடியதாக இருந்தது. இன்று வன்னிப் பிரதேசத்தில் எமது மக்கள் பாரிய மனிதாபிமான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். முப்படையினரின் மூர்க்கத்தமான இன அழிப்புத் தாக்குதல்களுக்கு மத்தியில் முகம் கொடுக்க முடியாத அளவிற்கு மரணத்தின் பிடிக்குள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் குடியிருப்புகள்,ஆலயங்கள், கல்விக்கூடங்கள்,விவசாய நிலங்கள், வைத்தியசாலைகள் என்பன சுக்குநூறாகக் கிடக்கின்றன. இன்று போரின் அழிவுகள் ஒரு புறம்,இயற்கையின் அழிவுகள் மறுபுறம் எனத் துயரங்கள் மக்களை துரத்திக்கொண்டிருக்கின்றன.வன்னி மாவட்டம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.ஏற்கனவே போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம்,உணவு, மருந்து போன்ற பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவும் இவ் வேளையில் இயற்கை அழிவானது சோதனையின் மேல் சோதனையாக மக்களின் மேல் குவிந்துகொண்டிருக்கிறது.

இன்று வடகிழக்கிற்கான யுத்தம் முற்று முழுதாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது.யுத்த முனையில் அப்பாவி தமிழ்மக்கள் அழிவது மாத்திரமல்லாமல் அப்பாவித் சிங்கள இளைஞர்களும் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.சிங்கள இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு யுத்த முனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்களுக்கு யுத்த முனையில் என்ன நடக்கிறது? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்பது பற்றித் தெரியாமலேயே சிங்கள கிராமப்புறங்களில் புலம்பல்களை கேட்கக்கூடியதாக உள்ளது. ஆனால் அரசியல் வாதிகளின் பிள்ளைகள் சகலரும் சொகுசு வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யுத்தத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய பிள்ளைகளை யுத்த முனைக்கு அனுப்பத் தயாரா? உங்களால் அனுப்பமுடியுமா? அப்பாவி சிங்கள இளைஞர்களின் தலைகளில் ஏன் மிளகாய் அரைக்கின்றீர்கள்? தென்பகுதி வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கான படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் மட்டும் கிளிநொச்சிக்கான போரில் 2000 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் மிகப் பெருமளவான படையினர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த யுத்தத்தை மேலும் தொடர விட்டால் இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிப் பகுதியினர் அங்கவீனர்களாக மாறிவிடுவர் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

எது எப்படி இருப்பினும் இவ்வரசு போரைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், புலிகளைத் தோற்கடித்து சிங்கள பேரினவாதத்தின் அங்கீகாரத்துடனான ஓர் தீர்வை தமிழர் தாயகம் மீது திணிப்பதற்குத் திட்டமிடுகின்றது என்பதில் சந்தேகமில்லை. அரசு நிலங்களை கைப்பற்றுவதனால் யுத்தத்தில் வென்று விட முடியுமா? நிலங்களை கைப்பற்றுவதனை விட்டு விட்டு தமிழ் மக்களின் மனங்களை இறுகப் பிடித்துக் கொள்வதிலேயே அரசின் வெற்றி தங்கியுள்ளது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். யுத்தம் மூலம் அரசாங்கம் எதனையும் சாதிக்கப் போவதில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வினாலேயே நாட்டில் நிரந்தர சமாதானத்தினை ஏற்படுத்த முடியும். இதனை எட்டுவதற்கு அரசு உடனடியாக யுத்தத்தினை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் .



Comments