தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதி வாக்காளர்களும் அங்கு போட்டியிடும் வேட்பாளர் யார் எனப் பார்க்காமல் எம்.ஜி.ஆருக்கே வாக்களிப்பதாக எண்ணிக் கொண்டனர். அதனால் தான் எம்.ஜி.ஆர் மறையும் வரை அவரது ஆட்சியை மாற்ற முடியவில்லை. ஒருதடவை அவரது ஆட்சி யைப் பிரதமர் இந்திராகாந்தி கலைத்தார். தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் முன்னர் இருந்ததை விடக்கூடுதல் ஆசனங்களைப் பெற்று மீண்டும் முதல்வரானார். எம்.ஜி.ஆர் ஒவ்வொரு சட்ட சபைத் தேர்தல் களிலும் அவர்களது கட்சிக்குக் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருந்ததேயொழிய இறங்கவில்லை. யானை தன் பலம் அறியாதது எனக் கூறுவர். ஆனால் எம்.ஜி.ஆரோ தனது பலத்தை(மக்கள் பலம்) சரியாகவே கணக்கிட்டார்.
இதனால் தான் தி.மு.கவில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும் சரி, இந்திராகாந்தியால் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது சரி அவர் வெலவெலத்துப் போகவில்லை. தனது ஆட்சி கலைக்கபட்டு விடுமோ என்ற பயத்துடன் அவர் கட்சி நடத்தவில்லை. இதேவேளை தனது தவறுகளை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் அவரில் இருக்கிறது. ஒருமுறை ஒரு ஆனந்த விகடனில் வெளிவந்த மதன் வரைந்த கேலிச் சித்திரம் தொடர்பாக அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியம் சிறையிலடை க்கப்பட்டார். தமிழக சட்டசபையில் எழுந்த சலசலப்புக்குப் பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும் தனது தவறை உணர்ந்த எம்.ஜி. ஆர் உடனடியாக ஆனந்தவிகடன் ஆசிரியரை விடுதலை செய்தார். தான் சய்த தவறை நியாயம் எனக்காட்ட அவர் முயலவில்லை. தவறை ஒப்புக்கொள்ளும் மனநிலை தான் ஒருமனிதனின் மிகப் பெரிய பலம். அது அவரிடம் இருந்ததால் தான் தமிழகத்தை ஆட்சி புரிந்தோரில் அவர் தனித்துவமாகத் திகழ்ந்தார்.
இது தொடர்பான விடயங்களை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விரிவாகவே எழுத்தில் வடித்துள்ளார். எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தனது சொந்தப் பணத்திலிருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெட்டி பெட்டியாக வாரி இறைத்தமை இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை மேற்கொள்ள முன்னர் ராஜிவ்காந்தி எமது தேசியத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக எம்.ஜி.ஆரை டில்லிக்கு அழைத்த போது "நீ உனக்கு சரி எனப்பட்டதைச் செய்" என்று எமது தேசியத் தலைவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியமை வரைக்கும் விளக்கமாகவே குறிப்பிட்டுள்ளார். அவரது ஆட்சிக்காலத்தில் மத்தியரசின் தீர்மானத்தின்படி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், சட்டத்தரணி சத்தியேந்திரா, போன்றோர் நாடு கடத்தப்பட்டமை, எமது தொலைத் தொடர்புக் கருவிகளை பறிமுதல் செய்யப்பட்டமை, முதலான விடயங்களில் மத்தியரசு பின்வாங்கியமைக்கு எம்.ஜி.ஆரே காரணம். அவரின் விருப்பத்திற்கு மாறாக முடிவெடுக்குமாறு நடந்தால் அதன் விளைவுகள் என்னாகும். என்பதை மத்தியரசு புரிந்தேயிருந்தது.
துரதிஷ்டமாக அவ்வாறான நிலை இப்போது இல்லை. இந்திய இராணுவத்துடனான போர் தொடங்கிய பின்னரும் அவர் தனது நிலையிலிருந்து மாறவில்லை. நிதி உட்பட தேவையான உதவிகளைச் செய்தே வந்தார். மத்தியரசின் முடிவின் படி மூத்ததளபதி கிட்டு உட்பட தமிழகத்தில் இருந்த போராளிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைப் பதிவு செய்து வைத்திருத்தல் காலத்தின் தேவை. ஒருநாள் கிட்டு எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். ஒருகாலை இழந்திருந்த கிட்டுவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த அவர் கிட்டுவிற்கு செயற்கைக் கால் பொருத்துவது முதலான விடயங்களுக்கான பிரபல வைத்தியசாலை ஒன்றில் தான் ஏற்பாடுகள் செய்வதாகவும் அடுத்தநாள் அங்கு சென்று தேவையான விடயங்களை பூர்த்திசெய்யுமாறும் கூறினார். அடுத்த நாள் காலை ஆறுதலாகக் குளித்து, உடைமாற்றி சாவகாசமாக குறித்த வைத்தியசாலையை சென்றடைந்தார் கிட்டு. அந்த வைத்தியசாலையின் வாசலை கிட்டுவின் கார் சென்றடைந்த போது வைத்தயசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் முதல் முக்கியமான அனைவருமே வாசலில் நின்றிருந்தனர். பதைபதைப்புடன் காணப்பட்ட அவர்கள் "என்ன சார் நீங்க வந்திட்டீங்களா? நீங்க வந்திட்டீங்களான்னு எத்தனை தடைவ சீ.எம்.ஆபிசில் இருந்து போன் வந்தது. வாங்க சார்" என்று கூறியபடி கிட்டுவை அழைத்துச் சென்றனர் அவர்கள்.
ஒருமாநிலத்தை ஆழும் முதல்வர் தனக்குள்ள வேலைப்பளு பலவீனமான உடல்நிலை என்பவற்றுக்குள்ளும் இவ்வளவு அக்கறையாக செயற்பட்டிருக்கின்றார் என்றால் அவர் மனதில் விடுதலைப் போராட்டம் குறித்து அவரது மனதை எமது தேசியத் தலைவர் எவ்வளவு தூரம் ஆகர்ஷித்திருந்தார். என்பது குறித்தும் உணர முடியும். ஈழத்தமிழரின் துரதிஸ்டம், சாவு மிக விரைவில் அவரை ஆட்கொண்டு விட்டது. அதனால் தான் தமிழகத்து நிலைமைகள் தலைகீழாகி போய் விட்டன. விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழக அரசியலில் நடைபெற்று விட்டன. ஆயினும் நீறுபூத்த நெருப்பாக இருந்த ஈழத்தமிழருக்கு ஆதரவான உணர்வு மீண்டும் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது சற்று ஆறுதலான விடயம் எவ்வாறெனினும் எம்.ஜி.ஆரின் வெற்றிடம் நிரப்பப்பட முடியாததொன்றாகவே உள்ளது.
- நெடுங்கிள்ளி -
- தமிழ்க்கதிர் -
Comments