கிளாலியில் புலிகளிடம் சரணடைந்த சிங்களச் சிப்பாயின் வாக்குமூலம்



யாழ். வடபோர்முனையான கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.

கிளாலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர். இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.


[படம்: புதினம்]

பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார்.

ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

களத்தில் காயமடைந்த நிலையில் படையினரால் நான் கைவிடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட படையினரின் மத்தியில் கிடந்த என்னை விடுதலைப் புலிகள் மீட்டு சிகிச்சைகளை வழங்கி என்னை காப்பாற்றினர்.


[படம்: புதினம்]

படையில் சம்பளம் அதிகம் என்பதாலும் இரண்டு ஆண்டுகளுக்கு களத்தில் விடப்பட மாட்டடார்கள் என வாக்குறுதி தந்ததாலும் நான் படையில் சேர்ந்தேன். ஆனால், அதற்கு மாறாக குறுகிய நாட்களில் யாழ்ப்பாணத்துக்கு என்னை கொண்டு வந்து ஆறு நாட்களில் இக்களத்தின் காவலரணில் நிறுத்தினர்.

என்னைப் போன்று இவ்வாறு பெருமளவு சிங்கள இளைஞர்கள் ஏமாந்து படையில் சேர்கின்றனர்.

என்னுடன் 35 பேர் ஒரு அணியாக தாக்குதலில் களமிறக்கப்பட்டனர். படையில் சேர்ந்த பின்னர்தான் எனக்கு இந்த நிலைமை தெரியும்.

கடந்த 9 ஆம் நாளில் தான் முகமாலை களத்துக்கு நாம் கொண்டு வரப்பட்டு 13 ஆம் நாள் அதிகாலையில் காவலரண் ஒன்றில் நான் உட்பட்ட நால்வரும் நிறுத்தப்பட்டோம்.

35 பேர் அணியில் என்னுடன் நான்கு பேர் நின்றனர். தாக்குதல் வேளையில் என்னுடன் நின்ற ஏனைய மூவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

பாடசாலைக் கல்வியில் 7 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற எனக்கு தற்போது வயது 22 என்றார் அவர்.

Comments

மொழி பெயர்த்துப் போடுங்க, புரியவில்லை